துறையூர்,-திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலிய£புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தேவி (22). துறையூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார்(26) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).
இருவருக்கும் திருமணம் செய்ய கடந்த 20 நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பின் பத்திரிகை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு இருவீட்டாரும் வினியோகித்தனர்.நேற்று முன்தினம் காலை மாப்பிள்ளை வீட்டில் திருமணம் தடபுடலாக நடந்தது.
உறவினர்கள், நண்பர்கள் திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்தினர். மாலையில் பெண் வீட்டுக்கு மறுவீடு சென்றனர். இரவு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தபின் மணமக்கள் முதலிரவு அறைக்கு சென்றனர்.
அப்போது திடீரென நந்தகுமாரின் காலில் தேவி விழுந்து கதறி அழுதார். அதிர்ச்சியடைந்த நந்தகுமார், தேவியிடம் விசாரித்துள்ளார்.
அப்போது தேவி, ‘நானும், எங்கள் ஊரை சேர்ந்த லாரி டிரைவராக உள்ள ஒருவரும் காதலித்து வருகிறோம்.
பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டனர். நான் வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன். என்னை நீங்கள் அவருடன் சேர்த்து வைக்க வேண்டும்.
இல்லாவிட்டால் செத்துவிடுவேன்‘ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். நந்தகுமாரும் விடிய விடிய யோசித்துள் ளார். இறுதியில் காதலனுடன், மனைவியை சேர்த்து வைக்க முடிவு செய்தார்.
மறுநாள் காலை இரு வீட்டாரும் கூடி பேசியுள்ளார். அப்போது தேவியை, அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைப்பது என பேசி முடிக்கப்பட்டது.
திருமண செலவுத்தொகையான ரூ.1 லட்சத்தை பெண்ணின் பெற்றோரோ அல்லது காதலனோ நந்தகுமார் குடும்பத்துக்கு கொடுத்துவிட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.அதன்பின் இதுகுறித்து எழுதி வாங்க துறையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரு குடும்பத்தினரும் நேற்றுமாலை சென்றனர்.
ஆனால் இருவரை சேர்த்து வைக்க முடியுமே தவிர, தங்களால் பிரித்து வைக்க எழுதி வாங்க முடியாது என்று கூறி போலீசார் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர்.
இதனால் இரு குடும்பத்தினரும் பரஸ்பரம் எழுதி வாங்கிக் கொண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதுகுறித்து வேலை விஷயமாக லாரியில் வெளியூர் சென்றிருந்த தேவியின் காதலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார்.
பின்னர் காதலனுடன் தேவிக்கு இன்று காலை துறையூர் பெருமாள் மலையடிவாரத்தில் திருமணம் நடந்தது.பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்‘ பட பாணியில் மனைவியை காதலனுடன் கணவன் சேர்த்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.