யாழ். வடமராட்சி முள்ளிப்பகுதியில் 19 வயதுடைய யுவதியை மூவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரையும் தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையிலும், 50 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் செல்ல பருத்தித்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன், வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தெக நபர்கள் இருவரையும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுமாறும் உத்தரவிட்டார்.
அடுத்த வழக்கு தவணையினை ஜனவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த மார்ச் மாதம் 07 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் தனது காதலனுடன் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சென்ற குறித்த யுவதியை முள்ளிச் சந்தியில் வைத்து இடைமறித்த மூவர் காதலனை தாக்கி விட்டு குறித்த யுவதியினை அருகில் உள்ள பற்றைக்குள் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்திருந்தனர்.
இது தொடர்பில் காதலன் அருகில் உள்ள அயலவர்களுக்கு தெரிவிக்கவே அயலவர்கள் குறித்த யுவதியினை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்ததுடன், மேற்படி சம்பவம் தொடர்பில் துன்னாலை பகுதியினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் மார்ச் 12ஆம் திகதி நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் இரண்டாவது சந்தேக நபர் ஒரு மாதங்களுக்கு பின்னர் சட்டத்தரணி மூலம் ஆஜராகியிருந்தார். எனினும் மூன்றாவது சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.