இராணுவ மயப்படுத்தப்பட்ட தேர்தலை நோக்கி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் நகர்கின்றது. இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இறுதி சந்தர்ப்பம் தற்போது வந்துள்ளது.
இதை தவற விட வேண்டாம் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, வடக்கு கிழக்கு மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது அவர்களின் விரும்பம். அதற்காக தமிழர்களை வற்புறுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
புதிய ஜனநாயக முன்னணியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இருப்பது வழமையானது. ஆனால் ஆட்சியினை விரும்புவதும் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தெரிவு செய்வதும் பொதுமக்களேயாவர்.
ஆனால் தற்போது மக்களின் விருப்பத்தினை மீறி ஒரு சிலரின் விருப்பத்திற்காக தேர்தல் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.
அதற்காக அரசாங்க ஊழியர்களையும் அரச உடமைகளையும் அரச ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர். இதனையும் தாண்டி தற்போது இராணுவ பிரசாரத்தினையும் அரசாங்கம் ஆரம்பித்து விட்டது.
எதிரணியின் கூட்டங்களிற்கும் செய்தியாளர் சந்திப்புக்களுக்கும் புலனாய்வு பிரிவு அனுப்பப்படுகின்றது. மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது இராணுவத்தினால் கட்டாயப்படுத்தப்படுகின்றது.
இராணுவ ஆட்சியினை நோக்கிய பயணத்திற்கான சமிக்ஞையினை அரசாங்கம் காட்டுகின்றது.
மக்களுக்கு ஜனநாயகத்தினையும் நல்லாட்சியினையும் பெற்றுக்கொள்ளும் இறுதி சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளது. இதனை தவற விட வேண்டாம். இதுவே நாட்டின் பாதையினை தீர்மானிக்கும் இறுதி சந்தர்ப்பமென்பதனை மக்கள் மறந்து விட வேண்டாம்.
2005 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது நம்பிக்கையிருந்ததை விடவும் மறை முகமான பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஜே.வி.பி.யுடனும் ஜாதிக ஹெல உறுமயவுடனும் முக்கிய உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. அதேபோல் விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது யார் என்பதற்கும் எவ்வாறானதொரு உடன்படிக்கை என்பதற்கும் தெளிவான பதிலை அரசாங்கத்தில் ஒரு சிலர் கொடுக்கலாம் அன்று விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் வாக்குரிமையினை தடுத்தமையும் அரசாங்கத்தின் வெற்றிக்கு உதவியமையும் முடிச்சு போடுவதை விட இப்போது உள்ள நிலைமையினை மக்கள் விளங்கிக் கொண்டு சரியான முடிவு எடுக்க வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம்.
தற்போது தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.
தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கு அவசியமான தேர்தல் அல்லது சிங்கள மக்களுக்கு அவசியமான தேர்தல் என பிரித்து ஒப்பிடாது அனைவரும் தேசிய பிரச்சினையாகவும் ஒட்டு மொத்த மக்களின் விடுதலையாகவும் எண்ணி இத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்.
அதற்காக தமிழ் மக்களை வற்புறுத்தி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என எவரும் செயற்பட அவசியமில்லை.
இலங்கையில் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதில் தமிழ் மக்களுக்கு அக்கறையில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது தனித் தமிழீழம் என்பதையே விடுதலைப் புலிகள் முன்வைத்தனர்.
இதனாலேயே 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் வடக்கு கிழக்கின் தமிழ் வாக்குகள் விடுதலைப் புலிகளினால் தடுக்கப்பட்டன. ஆனால் இன்று நிலைமை மாற்றமடைந்து விட்டது.
இன்று விடுதலைப் புலிகள் அழிந்து விட்டனர். ஆகையால் இன்று எவரும் வியாபாரம் பேசி வாக்குகளை மாற்ற முடியாது.
கேள்வி:- அப்படியாயின் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக அமையுமா?
தமிழ் மக்களின் வாக்குகள் மட்டுமே ஆட்சியினை தீர்மானிக்குமெனின் சிங்களவர்களிடம் நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக தமிழ் மக்களின் ஆதரவு அவசியமில்லை என நான் கூறவில்லை. இது 2015 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தல். இதில் பேரம் பேசும் சக்திகளுக்கு இடமில்லை.
எனவே தமிழ் மக்கள் தமது வாக்குகளை அவர்களின் விருப்பிற்கமைய பயன்படுத்தவேண்டும். ஆனால் தமது வாக்குரிமையினை விட்டுக்கொடுக்கக்கூடாது. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை சரியாக பயன்படுத்தவேண்டும்.
ஏனெனில் எமது இராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் இன்று வடக்கு கிழக்கு மக்களையே பாதுகாத்துள்ளது.
அதேபோல் மக்களின் உரிமைகளை தடுக்கும் வகையிலோ மக்கள் யாரை ஆதரிக்க வேண்டுமென்ற வற்புறுத்தலையோ இராணுவமும் புலனாய்வு பிரிவும் மேற்கொள்ளக்கூடாது.
இப்போதே எமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளன. அரசாங்கம் சூழ்ச்சியினை செய்வதும் அடக்கு முறைகளை கையாள்வதும் எமக்குத் தெரியும். எதிர்வரும் காலங்களில் யார் இவ்வாறு செய்யற்பட்டனர் என்ற தகவல்களை ஆதாரத்துடன் நிரூபிப்போம்.
கேள்வி-:- தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் உள்ளதா?
இந்த தேர்தல் நடப்பது ஜனநாயகத்தினை வெற்றி கொள்ளவே. இதில் ஜனநாயகத்தினை வென்றெடுக்க கட்சி பேதமின்றி அனைவரும் போராடுகின்றோம்.
இன்று நாட்டில் சிங்கள மக்களுக்கு மட்டும் பிரச்சினை இல்லை. தமிழ் – முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. ஆகவே நமது போராட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்.
இதில் எமக்கு ஆதரவு வழங்குவதும் அல்லது எமது கொள்கையினை ஆதரிக்காது செயற்படுவதும் கூட்டமைப்பின் தனிப்பட்ட விருப்பம். எனினும் நாம் அனைவரினையும் ஒன்றிணைக்கத் தயார்.
கேள்வி:– இம்முறையும் நானே ஜனாதிபதி எனக்கு யாரும் சவால் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அண்மையில் தெரிவித்தார். இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
நான் எப்படியேனும் ஆட்சியை கைப்பற்றுவேன். எனது ஆட்சி உறுதியென தெரிவித்துள்ளார் என்றால் அதன் பின்னணி ஏதேனும் திட்டத்துடன் என்பது விளங்குகின்றது. மக்களின் ஆதரவு இன்றி யாரும் ஆட்சியமைக்க முடியாது.
மஹிந்தராஜபக் ஷவிற்கு மட்டும் இது பொருந்தாது அல்ல. எனவே மக்கள் தமது வாக்கினை சரியான ஆட்சிக்காகவும் அமைதிக்காகவும் பயன்படுத்தவேண்டும்.