சிட்னி: சிட்னி ஹோட்டலிலிருந்து தீவிரவாதியின் பிடியிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்த சீனாவைச் சேர்ந்த எல்லி சென் என்ற மாணவி சமூக வலைதளங்களில் பிரபலமாகி விட்டார்.
நியூசெளத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிதான் எல்லி சென். இவர் பகுதி நேரமாக சிட்னியில் உள்ள லின்ட் சாக்கலேட் கேஃப் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

சிக்கிக் கொண்ட எல்லி:வழக்கம் போல இன்றும் பணிக்குச் சென்ற அவருக்கு மரண பயத்தைக் காட்டி விட்டான் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த தீவிரவாதி. சிட்னி ஹோட்டலில் நீடித்து வரும் முற்றுகைப் போராட்டத்தில் எல்லியும் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில்தான் அங்கிருந்து தப்பி ஓடி வந்த ஐந்து பேரில் ஒருவராக எல்லியும் இன்று வெளியேறினார்.
பதற்றம் நிறைந்த முகத்துடன்:
ஹோட்டலுக்குள்ளிருந்து எல்லி பயம் முகத்தை தொற்றிய நிலையில் ஓடி வந்த காட்சி வீடியோ மற்றும் புகைப்படமாக வெளியாகியுள்ளது.

பிரபல்யம் ஆனது: இந்தப் படத்தை பலரும் தங்களது பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருகின்றனர். இந்தக் காட்சியும் வேகமாக சமூக வலைதளங்களில் பிரபலமாகி விட்டது. வைரல் ஆக பரவியுள்ளது.
கொடி பிடிக்க மிரட்டல்: முன்னதாக அந்தத் தீவிரவாதி தனது அமைப்பின் கொடியை ஜன்னலோரமாக உயர்த்திப் பிடிக்குமாறு சில பிணையாளிகளுக்கு உத்தரவிட்டிருந்தான். அதில் எல்லியும் ஒருவர். அந்தப் படமும் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

பீதி அகலாத முகம்: மரணப் பிடியிலிருந்து மீண்டு பீதி அகலாத முகத்துடன் எல்லி பாதுகாப்புப் படையினரை நோக்கி ஓடி வரும் காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.