யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பமாகியது.
வடமாகாண சபைக்கான நிதியை செலவு செய்வது தொடர்பில் வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிக்கொண்டிருக்கையில், அவர் அருகே சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் தவிசாளர் போல் சிவராசா, சிவாஜிலிங்கத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது போத்தலால் தாக்கியுள்ளனர். பதிலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் தாக்குதல் மேற்கொள்ள, கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது.
இதனையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். முதலமைச்சரும் வெளியேறினார்.
இந்நிலையில், ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
மர்ம நபர்களும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் இணைந்தே தம் மீது தாக்குதல் நடத்தினர்
16-12-2014
மர்ம நபர்கள் சிலரும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் இணைந்தே தம் மீது தாக்குதல்களை தொடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இன்றைய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மிகத்துரதிஷ்ட வசமாக திடீரென்று முடிவுக்கு வந்தது. இதற்கான முழுப் பொறுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் அவர் வெளியிலிருந்து கூட்டத்திற்குக் கொண்டு வந்த இன்றைய நிகழ்விற்குச் சிறிதேனும் சம்பந்தமில்லாத வெளியாட்களையுமே சாரும்.
தேர்தல் ஆணையாளரினால் அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு அரசியல் கட்சி பற்றியும் அல்லது வேட்பாளர் சம்பந்தமாகவும் எந்த ஒரு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் உரை எதனையும் நிகழ்த்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதை தனது உரையில் அரசாங்க அதிபர் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்.
அரசாங்க அதிபரைத் தொடர்ந்து இணைத்தலைமையுரை ஆற்றிய முதலமைச்சர் மேற்படி அறிவித்தலுக்கமைவாக தனது உரையை ஆற்றியதுடன் ஒருவருக்கொருவர் எதிர்ப்பு அரசியல் பேசுவதை நாங்கள் யாவரும் இவ்விடத்தில் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இருந்தபோதிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முற்றுமுழுதாக அரசியல் ரீதியான பேச்சைப் பேசி வட மாகாணசபையையும் அதன் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் கடுமையாக விமர்சித்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்தலைவர் என்ற முறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிகவும் சர்வாதிகார ரீதியாக பேச விடாது தடுக்க முயன்றார்.
இதனால் பலரும் பேச எத்தனித்தபோது கூட்டத்தில் கலந்துகொள்ள தகுதி இல்லாத மர்ம நபர்கள் சிலரும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் இணைந்து அத்தருணத்தில உரையாற்றிக் கொண்டிருந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஒலிவாங்கியைப் பிடுங்க எத்தனித்ததுடன் ஏனைய மக்கள் பிரதிநிதிகள் மீதும் கையிலகப்பட்ட பொருட்களால் வன்முறைத் தாக்குதல் நடத்தினர்.
இதனால் இன்றைய யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மிகவும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு கூட்டம் முடிவுக்கு வந்தது.
இன்றைய தினம் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறிதேனும் சம்பந்தமில்லாத வெளியாட்களும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தமையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தயாரித்து எடுத்து வந்திருந்த நான்கு பக்க அரசியல் அறிக்கையை வாசித்தமையும் இது முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு குழப்பத்தை உண்டாக்க ஆயத்தமாக வந்தததையே எடுத்துக் காட்டுகின்றது.
மிகவும் வெட்கப்பட வேண்டிய இவ்வன்முறைத் தாக்குதலில் அமைச்சர் பொ. ஐங்கரநேசன், கௌரவ உறுப்பினர் க.சர்வேஸ்வரன், கௌரவ உறுபினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் கௌரவ உறுப்பினர் திரு.சிவயோகன் ஆகியோர் காயமடைந்ததுடன் மேலும் பல கௌரவ உறுப்பினர்களும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
இத்தாக்குதலின் போது ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கு அரச பாதுகாப்பு பிரிவினரால் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்ட போதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கௌரவ உறுப்பினர்கள் பாதுகாப்பு எதுவும் அற்ற நிலையில் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததென அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.