புழுகூட புலியான ஈழத்தமிழ் மண்ணில் என் பாதங்கள் படும் போது தமிழன் என்ற நிலையின் நான் பரவசமடைகிறேன் என்று யாழ்ப்பாணத்தில் இயக்குனர் பாரதிராஜா பெருமிதத்துடன் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் யாழ். மாவட்ட கலைஞர்களுடனான சந்திப்பின்போது பேசிய பாரதிராஜா, தமிழர்கள் என்ற இனம் தனித்துவத்தோடு உலகமே வியந்து நின்ற அளவில் சாதனைகளைப் புரிந்திருக்கிறது. இப்பூமிப்பந்திலே உலகெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்ந்தாலும் ஈழத்திலே வாழ்கின்ற உத்தமர்கள் செய்த தியாகங்கள் விடுதலை வேண்டிய அர்ப்பணிப்பான பயணங்கள்.
கட்டுக்கோப்பான தலைமைத்துவத்தில் தலை நிமிரச் செய்த ஆட்சி முறை என்பவற்றால்தான் தமிழர்களை பற்றிய எண்ணத்தால் உலகத்தவர்கள் உவகை கொள்கிறார்கள்.
புழுகூட புலியான ஈழத்தமிழ் மண்ணில் என் பாதங்கள் படும் போது தமிழன் என்ற நிலையின் நான் பரவசமடைகிறேன். உலகத்தமிழருக்கு தமிழன் என்ற அடையாளத்தை தந்தவர்கள் ஈழத்தமிழர்கள்.
நீங்கள் கடந்து வந்த பாதைகளை, வாழ்ந்த வாழ்க்கை முறைகளை எண்ணிப்பார்க்கிற போது எங்கள் ஒவ்வொருவரின் இதயவேதனையை யாராலும் இலகுவில் மாற்றமுடியாது.
எதிர்ப்பு சக்தி இல்லாத எந்த உயிரினமும் இந்த உலகில் வாழமுடியாது என்பது கூர்ப்புக்கொள்கையாகும். புழு பூச்சி கூட எதிர்க்கும் ஆற்றலை பெறுகின்ற போதுதான் தன் வாழ்வியலை பெற்றுக்கொள்கிறது.
ஈழத்தமிழர்களும் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருந்தமையால்தான் தம் வாழ்வியலுரிமைக்காக யாரையும் எதிர்க்கும் சக்தியாக அவர்கள் உருவெடுத்தார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.