இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியினரின் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிக்குமாறு, தமிழ் மக்களை தமிழர் விடுதலைக் கூட்டணி கோரியிருக்கின்றது.
அந்தக் கட்சியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த வேண்டுகோளை வெளியிட்டிருக்கின்றார்.
ஏனைய தமிழ் கட்சிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரிக்காத போதிலும், அவரை ஆதரித்து வந்த நீங்கள் இப்போது, என்ன காரணத்திற்காக பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிக்க முன்வந்திருக்கின்றீர்கள் என ஆனந்தசங்கரியிடம் கேட்டபோது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், அவரை ஆதரிப்பதாகக் கூறுவது விஷமத்தனமானது என்றும் தெரிவித்தார்.
“அதேநேரம் தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள் என்றும், எத்தனையோ தடவைகள் எத்தனையோ பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேசப்பட்டிருக்கின்றது என்றும், எனினும், இப்போது தேர்தலில் இறங்கியுள்ள வேளையில் அவைபற்றி ஜனாதிபதி எதுவுமே குறிப்பிடாதிருக்கிறார், தமிழர் பிரச்சினைகளில் ஜனாதிபதி மஹிந்த அக்கறை செலுத்தவில்லை.” என ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
“மறுபக்கத்தில் அரசியல் கட்சிகள் பொதுமக்கள் என 30 அமைப்புக்கள் பொது வேட்பாளரை ஆதரித்திருக்கின்றார்கள். அவர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள விடயங்களில் அரசியல் தீர்வு பற்றிய விடயம் இல்லாத போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளும் அடங்கியிருக்கின்றன.
எனவே பொது வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களை உள்ளடக்கிய பொது எதிரணியினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க நாம் முன்வந்துள்ளோம்.” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தihலவர் வி.ஆனந்தசங்கரி விளக்கமளித்தார்.
ஆனந்தசங்கரி, மைத்திரிக்கு ஆதரவு
22-12-2014
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிசேனவை ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் மாறியபோதும் எந்த அரசாங்கமும் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காத நிலையில் இன்று பல்வேறு கொள்கைகளோடு செயற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து எல்லோரையும் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளில் தீர்வுக்கு ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்துவரும் வேளையில் ,
01. எமக்கு சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையால் அக்கட்சிகள் எடுக்கும் முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
02. நாட்டின் பல்வேறு பிரஜைகளுக்கும் இனப்பிரச்சினை உட்பட தீர்வு காணமுடியும் என்ற கௌரவமிக்க சில தலைவர்களின் கருத்தை நம்பிக்கையுடன் வரவேற்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு சிறுபான்மை இன மக்களுக்கும் உண்டு.
03. இவ்வரசியல் கட்சிகளின் தலைவர்கள் நியாயமான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளமையால் இக்கட்டத்தில் அவர்கள் முயற்சிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் எம்மைச் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை உட்புகுத்தாது தவிர்க்க வேண்டியது சிறுபான்மையின மக்களாகிய எமது கடமையாகும்.
04. இன்றைய சூழ்நிலையை அனுசரித்து வேறு கட்சியோ, கட்சி உறுப்பினர்களோ எங்களோடு இணைந்து செயற்பட விரும்பின் நாங்கள் இணைத்துக்கொள்ளத் தயாராக உள்ளோம்.
மொத்தத்தில் இவ்வழியில் ஜனாதிபதி வேட்பாளர் கொடுத்துள்ள உறுதிமொழியிலும் தன்நலன் கருதாது இப்பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் சார்பற்ற தலைவர்களின் உறுதி மொழியிலும் பல்வேறு கொள்கைகளில் இதுவரை ஈடுபட்டிருந்த 36 கட்சித்தலைவர்களின் உறுதி மொழியிலும் நாம் நம்பிக்கை வைத்து மக்களின் இதுவரை தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சகல இன, மத மக்களும் ஒற்றுமையாக புதிய ஜனநாயக அமைப்பில் வாழவைக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகிய ஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் பொது வேட்பாளராகிய திருவாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாவட்டக்கிளை ஏகமனதாக தீர்மானிக்கின்றது.
வடக்கு மாகாணத்தில் 7 லட்சம் வாக்காளர்கள்!
வடக்கு மாகாணத்தில் 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 477 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 813 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68 ஆயிரத்து 600 பேரும், மன்னார் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 737 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 53 ஆயிரத்து 683 பேரும், வவுனியா மாவட்டத்தில் 94 ஆயிரத்து 644 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.