அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் கறுப்பு கழுத்துப்பட்டி சகிதம் டிப்டொப்பாக ஆடையணிந்து வைபவமொன்றில் பங்குபற்றியபோது தன்னை ஹோட்டல் வெயிட்டர்களில் ஒருவர் என சிலர் எண்ணிவிட்டதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இனவாதம் குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்காவில் சிறந்த ஜனநாயகம் நிலவுவதாக கூறப்படுகின்ற போதிலும் தனிப்பட்ட ரீதியில் அந்நாட்டு மக்கள் சிலரிடையே இனவாத சிந்தனைகள் புதைந்து கிடப்பதை அண்மைக்கால சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.
பேர்குசன் நகரில் மைக்கல் பிரவுண் எனும் கறுப்பின இளைஞரும் நியூயோர்ககில் எரிக் கார்ணர் எனும் கறுப்பின இளைஞரும் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இவற்றைத் தொடர்ந்து நியூயோர்க் நகரில் கடந்த சனிக்கிழமை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் கறுப்பின நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கறுப்பின இளைஞர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு பழிவாங்கும் வகையில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தான் கொன்றதாக இக்கொலைகளை புரிந்த சந்தேக நபர் தெரிவித்துள்ளமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் பராக் ஒபாமாவும் கறுப்பினத்தவர். அமெரிக்க மக்கள் மத்தியில் நிலவும் நிறபேதங்கள் குறித்து பராக் ஒபாமாவும் அவரின் பாரியாரான மிஷெல் ஒபாமாவும் செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கையில், தமது சொந்த அனுபவங்களையும் நினைவுகூர்ந்துள்ளனர்.
ஹோட்டலொன்றில் நடைபெற்ற வைபவத்துக்கு டக்ஸிடோ, கறுப்பு கழுத்துப்பட்டி சகிதம் மிடுக்காக தான் சென்றபோது தன்னை ஹோட்டல் வெய்டர்களில் ஒருவர் எனக் கருதி கோப்பி கொண்டுவருமாறு கூறியதாக ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பராக் ஒபாமா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னர் சிகாகோ நகரில் வாடகை காரொன்றை பெற்றுக்கொள்வதில் கூட நெருக்கடிகளை எதிர்நோக்கியதாக திருமதி மிஷெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தான் முதற்பெண்மணியான பின்னர்கூட வர்த்தக நிலையமொன்றுக்கு சென்றபோது, தன்னை அணுகிய பெண்ணொருவர், சில பொருட்களை எடுத்துவைப்பதற்கு உதவுமாறு தன்னிடம் கோரியதாக மிஷெல் ஒபாமா கூறியுள்ளார்.
“அப்பெண் என்னை முதற் பெண்மணியாக பார்க்கவில்லை. தன்ககு உதவக்கூடிய ஒருவராகவே அவர் என்னை பார்த்துள்ளார்” என மிஷெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தற்போது நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதாக பராக் ஒபாமாவும் மிஷெல் ஒபாமாவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டியுள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறெனினும், நியூயோர்க்கில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா