அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் பெட்ரோல் நிலையத்தில் காவலரை நோக்கி துப்பாக்கியை காட்டிய கருப்பர் ஒருவரை காவலர் சுட்டுக்கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
செயிண்ட் லூயிஸ் நகரின் புறநகர்ப்பிரதேசமான பெர்க்ளியில் இருக்கும் பெட்ரோல் நிலையம் ஒன்றில் இருந்த இரண்டுபேரை நோக்கி காவல்துறை அதிகாரி சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்ட நபர் காவலரை நோக்கி கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டியதாக காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
அங்கே இருந்த இரண்டாவது ஆள் அங்கிருந்து ஓடிவிட்டார் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18 வயதான கருப்பின இளைஞர் மைக்கல் பிரவுனை வெள்ளை காவல்துறை அதிகாரி சுட்டுக்கொன்ற பெர்கூசன் நகரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் தற்போதைய இந்த துப்பாக்குச்சூட்டு சம்பவம் நடந்திருக்கிறது.
ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்ட பிரவுன் எந்த ஆயுதமும் வைத்திருக்கவில்லை. மைக்கல் பிரவுனின் கொலைக்கு எதிராக கடும் கோபத்துடனான எதிர்ப்புக்கள் நாடு தழுவிய அளவில் அமெரிக்காவில் வெளிப்பட்டிருந்தன.
இந்த பின்னணியில் தற்போதைய துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் கோபத்துடனான கூட்டம் குழுமியபடி இருக்கிறது. அங்கே பெரும் சத்தங்கள் கேட்டபடி இருப்பதையும் புகை மூட்டம் எழுவதையும் அந்த இடத்திலிருந்து ஒளிபரப்பாகும் நேரலை செய்திக் காணொளிகள் காட்டுகின்றன.