ilakkiyainfo

மாட்டிக் கொண்ட மு.கா. – எம்.எஸ்.எம் ஐயூப் (கட்டுரை)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவு இன்று, மு.கா.வின். முடிவு நாளை, முடிவின்றி மு.கா., அதி உயர் பீட கூட்டம் முடிவு, முடிவெடுக்கும் அதிகாரம் மு.கா. தலைவரிடம், மு.கா.வின் முக்கிய கூட்டம் நாளை, இது போன்ற செய்தித் தலைப்புக்கள் கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வந்த வண்ணமே இருக்கின்றன.

ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் விடயமாக மு.கா. எடுக்கப் போகும் முடிவைப் பற்றியே இந்த செய்திகளில் குறிப்பிடப்படுகிறது. இச் செய்திகளை பொதுவாக எடுத்துப் பார்த்தால் இந்த விடயத்தில் மு.கா. பெரும் நெருக்கடியில் சிக்கியிருப்பதையே இவை காட்டுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் எடுக்க வேண்டிய முடிவை முஸ்லிம்கள் ஏற்கெனவே எடுத்துவிட்டார்கள், எனவே மு.கா. இன்னமும் என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறது என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

மு.கா. என்பது தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாகும். அதன் தலைவர் தற்போதைய அரசாங்கத்தின் நீதி அமைச்சராக இருக்கிறார்.

ஐ.ம.சு.கூ.வுக்கு கிழக்கு மாகாண சபையில் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள உதவியதும் மு.கா.வே., அரசாங்கத்தில் அங்கமாக இருப்பதாக இருந்தால் புதிதாக அக் கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது? ஐ.ம.சு.கூ., ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளித்துவிட்டு சும்மா இருக்க வேண்டியது தானே.

மு.கா. புதிதாக முடிவு எடுப்பதாக இருந்தால் அது அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க் கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு அளிப்பது சம்பந்தமாகவே இருக்க வேண்டும்.

அரசாங்கத்தில் உள்ள மு.கா. அவ்வாறு எதிர்க் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதேவேளை அக் கட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்கவும் காரணங்கள் இல்லாமல் இல்லை. இது தான் மு.கா. எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடியாகும்.

அரசாங்கத்தை எதிர்க்க மு.கா.வுக்கு முக்கியமாக மூன்று காரணங்கள் இருக்கின்றன.

1.முதலாவதும் மிகவும் முக்கியமானதுமான காரணம் பெரும்பாலான முஸ்லிம் வாக்காளர்கள் தற்போது எதிர்க் கட்சியை சார்ந்து இருப்பதாக தெரிவதே.

2.அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்து ஐந்தாண்டுகள் முடிவடைந்து இருந்தும் போரின் விளைவாக முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்ட பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதே மு.கா., அரசாங்கத்தை எதிர்த்து செயற்பட வேண்டியதற்கான இரண்டாவது காரணமாகும்.

3. மூன்றாவது காரணம் அண்மைக் கால முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரங்களாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சியைப் போலவே ஐ.ம.சு.கூ.வையும் ஆதரித்தனர். அத் தேர்தல்களின் போது முஸ்லிம் வாக்காளர்கள் மீது மு.கா.வினால் ஏற்படுத்தக் கூடிய தாக்கமும் அதிகமாக இருந்தது. தற்போது அந்த இரண்டு விடயங்களிலும் மாற்றம் ஏற்பட்டிருப்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ‘கிறீஸ் யக்கா’ என்ற பெயரில் ஓரு கும்பல் அட்டகாசங்களில் ஈடுபட்டு வந்தது. இந்தக் கும்பல் பெரும்பாலும் முஸ்லிம் பகுதிகளிலேயே அதிகமாக தமது கைவரிசையை காட்டியது.

இந்த விடயத்தின் போது முஸ்லிம்கள் தமது பாதுகாப்புக்காக பாதுகாப்புப் படையினரின் உதவியை நாடினர். ஆனால், அந்த பாதுகாப்பு கிடைக்காமல் போனது மட்டுமல்லாமல் இது பாதுகாப்புப் படையினரின் வேலையோ என்று முஸ்லிம்கள் நினைக்கும் நிலையும் ஏற்பட்டது.

அதனை அடுத்து 2012ஆம் ஆண்டு முதல் சில பௌத்த தீவிரவாதக் குழுக்கள் முஸ்லிம்களை குறிவைத்து மிக மோசமான பிரசாரங்களை ஆரம்பித்தனர். குர்ஆன் அவமதிக்கப்பட்டது.

வாரியபொல பகுதியில் நடைபெற்ற அவ்வாறான தீவிரவாதக் குழுவொன்றின் ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது பன்றியின் படத்தில் அல்லாஹ் என்று எழுதி அது பதாகையாக எடுத்துச் செல்லப்பட்டது.

65 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தம்புள்ளை பள்ளிவாசலை தகர்த்ததெறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ‘புனித பூமிக்காக’ அந்த பள்ளிவாசலை அவ்விடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற அச்சுறுத்தல் இன்னமும் இருக்கிறது.

கிரான்ட்பாஸில் பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டது. பலாங்கொடை ஜெய்லானி பள்ளிவாசலின் நிலம் அபகரிக்கப்பட்டது. மேலும் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் அளுத்கமை, பேருவளை மற்றும் வெலிபென்னை ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களும் அவர்களது உடைமைகளும் தாக்கப்பட்டன. கொலைகளும் இடம்பெற்றன. இது நீண்ட பட்டியலாகும். அவற்றின் பின்னால் அரசாங்கத்தின் சில முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும் வதந்திகள் பரவின.

 images
இந்தப் பிரச்சினைகளின் போது முஸ்லிம்கள் பாதுகாப்புக்காக அரசாங்கத்தையே அணுகினர். ஆனால், பல சந்தர்ப்பங்களில் கிடைத்த அனுபவம் முஸ்லிம்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அமைச்சரவைக் கூட்டங்களின் போது இந்த விடயம் ஆராயப்படும் போது முஸ்லிம் அமைச்சர்களும் ஜனாதிபதியும் மோதிக் கொள்ளும் நிலையும் உருவானதாக செய்திகள் கூறின.

இதன் விளைவாக கடந்த தேர்தல்களின் போது பிரிந்து செயற்பட்ட முஸ்லிம்கள் பிரியாது எதிர்க்கட்சிகள் பக்கம் தள்ளப்பட்டனர். இது சுமார் மூன்றாண்டு கால விரக்தியின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமல்ல.

ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கமும் மக்கள் விடுதலை முன்னணியின் பக்கமும் அவ்வாறு தள்ளப்பட்ட அம் மக்கள் இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபாலவின் பின்னால் அணிதிரண்டு இருப்தையே காணக்கூடியதாக இருக்கிறது.

கடந்த வருடம் நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலின் போதும் இந்த வருடம் நடைபெற்ற தென், மேல் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களின் போதும் பெரும்பாலான முஸ்லிம்கள் எதிர்க் கட்சிகளை ஆதரிப்பது தெளிவாக தெரியவிருந்தது.

மேல் மாகாண சபைத் தேர்தலின் போது ஐ.ம.சு.கூ. கொலன்னாவை மற்றும் பேருவளை தொகுதிகளில் மட்டுமே ஓரளவுக்காவது முஸ்லிம் வாக்குகளை பெற்றது. அது காலங்சென்ற பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்காக வழங்கப்பட்ட வாக்குகளாகும்.

ஆனால், அளுத்கமை, பேருவளை பகுதியில் இடம்பெற்ற கொலை, கொள்ளை மற்றும் தீவைப்புச் சம்பவங்களை அடுத்து கொலன்னாவை மற்றும் பேருவளை தொகுதிகளிலும் நிலைமை மாறியிருக்கலாம்.

அதேவேளை ராஜித்த சேனாரத்னவும் பாரத்தவின் மகளான மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர ஆகியோர் மைத்திரிபாலவுடன் இணைந்து கொண்டதன் பின்னர் அரசாங்கம் தொடந்தும் அந்த வாக்குகளை எதிர்ப்பார்க்கவும் முடியாது.

ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது பதுளை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பதுளை, வெலிமடை மற்றும் ஹாலிஎல ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஐ.ம.சு.கூ. தோல்வியடைந்தது.

முஸ்லிம்கள் ஏன்? ஐ.ம.சு.கூ.வுக்கு வாக்களிப்பதில்லை என மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த உடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசியிடம் கேட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு முஸ்லிம்களின் அரசியல் சாய்வு தெளிவாக தெரிய இருப்பது மு.கா.வை சிந்திக்க வைத்த மிக முக்கிய விடயமாகும்.

அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் கருமலையூற்று பள்ளிவாசல் பிரச்சினை, நாட்டில் எங்கும் செல்லலாம் என்று ஜனாதிபதி கூறினாலும் அப் பகுதியில் அமுலில் உள்ள ‘பாஸ்’ நடைமுறை, திருகோணமலை அரிசிமலையில் 500 ஏக்கர் காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை, பொன்மலைக்குடா பிரதேசத்தில் கடற்படையினர் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை கைப்பற்றிக் கொண்டு இருப்பதனால்; ஏற்பட்டுள்ள பிரச்சினை, புல்மோட்டையில் இராணுவத்துக்காக வீடுகளை கட்டுவதற்காக காணிகளை கைப்பற்றியுள்ளமை போன்ற பல பிரச்சினைகள் மு.கா., தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதற்கு தடையாகவே அமைந்துள்ளன.

முஸ்லிம் மக்களும் மறு பக்கம் சென்றுவிட்டார்கள் என்றால், முஸ்லிம்களின் மேற்கூறியவை போன்ற பிரச்சினைகளை தீர்க்கவும் அரசாங்கம் முன்வராவிட்டால், அதேவேளை முஸ்லிம் விரோத பிரசாரங்களின் போதும் வன்முறைகளின் போதும் அமைச்சர்களாக இருந்தும் எதனையும் செய்ய முடியாவிட்டால் மு.கா. ஏன் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்று பலர் கேட்கும் நிலை உருவாகியுள்ளது.

 
மு.கா. அரசாங்கத்தில் இருந்து விலகினால் அதன் தலைவர்கள் அனுபவிக்கும் பல சலுகைகளை இழக்க நேரிடும் என்றும் மு.கா. அரசாங்கத்தில் இருந்து விலகினாலும் அக் கட்சியின் சில தலைவர்கள் அரசாங்கத்திலேயே தங்கிவிடுவதால் கட்சி பிளவு படும் என்றும் கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அகற்றப்படும என்றும் இந்தக் காரணங்களுக்காகவே மு.கா. தலைமை அரசாங்கத்திலிருந்து விலக தயங்குகிறது என்றும் கூறப்படுகிறது.

அரசாங்கத்தை வெறுக்கும் பல முஸ்லிம்கள் ஆத்திரத்தின் அகோரத்தினால் மேற்படி சலுகை விடயத்தையே அழுத்தமாக முன்வைக்கிறார்கள்.

முஸ்லிம் வாக்காளர்கள் எதிர்க் கட்சியின் பக்கம் சாய்ந்துள்ள நிலையில் மு.கா. தலைவர்கள் சலுகைகளுக்காகவோ அல்லது பாதுகாப்புக்காகவோ அல்லது கட்சி பிளவுபடும் என்பதற்காகவோ அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டிருந்தால் அடுத்த பொதுத் தேர்தலின் போது அது மு.காவை வெகுவாக பாதிக்கும்.

அப்போது ஐ.ம.சு.கூ.வே பதவிக்கு வந்தாலும் மு.கா.வில் பலர் காணாமற்போயிருப்பார்கள். சிலவேளை தலைவர்களின் தலையே போய்விடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் சலுகைகளையும் பாதுகாப்பையும் கட்சியின் ஒற்றுமையையும் சதாகாலத்திற்கும் இழக்க நேரிடவும் கூடும். இது மு.கா. தலைவர்களுக்குத் விளங்காத விடயம் அல்ல.

மு.கா. அரசாங்கத்திலிருந்து விலகினால் அத்தோடு கட்சியின் சில தலைவர்கள் அரசாங்கத்திலேயே தங்கினாலும் தற்போதைய நிலையில் கட்சி பிளவுபடப் போவதில்லை.

ஏனெனில் வாக்காளர்கள் வெளியே தான் இருக்கிறார்கள். அரசாங்கத்தில் தங்குவோர் மக்கள் ஆதரவு அவ்வளவு இல்லாத தனி நபர்களாகத் தான் தங்குவார்கள். அதை கட்சி பிளவு பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறாயின் மு.கா. ஏன் இன்னம்; அரசாங்கத்தில் தொற்றிக் கொண்டிருக்கிறது?

நிலைமை சற்று சிக்கலார்ந்ததாகும். மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளோடு அரசாங்கம் மு.கா.வை அரசாங்கத்திலேயே வைத்துக் கொள்ள முஸ்லிம்களின் சில பிரச்சினைகளை தீர்க்க அண்மையில் விருப்பம் தெரிவித்துள்ள அதேவேளை எதிர்க் கட்சியினர் மு.கா.வை கணக்கிலெடுக்காமையும் எதிர்க் கட்சியில் சில முஸ்லிம் தலைவர்கள் மு.கா. எதிர்க் கட்சியில் இணைவதை விரும்புகிறார்களா என்ற பிரச்சினையுமே நிலைமையை சிக்கலார்ந்ததாக்கியுள்ளன என்று அண்மையில் இணையத் தளமொன்றில் ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தார். அது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமே.

கடந்த காலத்தில் அரசாங்கம் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்க விரும்பவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அரசாங்கம் 10 ஆண்டுகளாக அவர்களிடம் கையளிக்காமல் வைத்துக் கொண்டுள்ளது.

அதைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அரசாங்கத்திலேயே சிலர் இனவாதத்தை தூண்டினர். இனவாத அமைப்புக்கள் தொடர்பான பிரச்சினையின் போது அரசாங்கம் முஸ்லிம்களின் நியாயங்களை விளங்கிக் கொள்ளவில்லை.

சர்வதேச வர்த்தகத்தின் அவசியத்தால் ஹலால் இலட்சினையை இரத்துச் செய்ய விரும்பாத அரசாங்கம் அதற்கு எதிரான பிரசாரத்தை தடுக்கவும் இல்லை. இவற்றைப் பற்றி அமைச்சரவையில் பேசிய முஸ்லிம் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் பத்திரிகை செய்திகள் கூறின.

ஆனால், ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அதே அரசாங்கத்துக்கு ஒவ்வொரு வாக்கின் பெறுமதியும் இப்போது விளங்குகிறது.

குறிப்பாக கடந்த வருடமும் இவ்வருடமும் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் போது அரசாங்கத்தின் ஜனரஞ்சகத்தன்மை வேகமாக குறைந்து வருவதை அவதானிக்க முடிந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டாண்டுகள் இருக்கும் போதே ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதனாலேயே முன்வந்தார்.

எனவே தான் இப்போது அரசாங்கம் முஸ்லிம் வாக்குகளை வென்றெடுக்க முயற்சிக்கிறது. அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லக் கூடும் என்று கூறப்படும் மு.கா.வுடன் அதனால்தான் அரசாங்கம் இப்போது பேச்சுவார்ததை நடத்த முன்வந்துள்ளது. முஸ்லிம் வாக்குகள் இப்போது எதிர்க் கட்சியின் பக்கம் சாய்ந்துள்ளமை அரசாங்கத்துக்குத் தெரியும். ஆனால், குறைந்த பட்சம் மு.கா.வையாவது தம்மோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் கருதுகிறது.

அதற்கு ஒரு காரணம் மு.கா.வுக்கு எதிர்ப்பார்ப்புக்களை கொடுத்து அதன் தலைவர்களை தம்மோடு வைத்துக் கொண்டால் அவர்களும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக பிரசாரப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கும்.

அது ஓரளவுக்காவது முஸ்லிம் வாக்காளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதேவேளை இந்த சந்தர்ப்பத்தில் மு.கா. அரசாங்கத்திலிருந்து விலகினால் அது தற்போது நடைபெற்று வரும் கட்சித் தாவல் போட்டியில் அரசாங்கத்துக்கு பாதகமான நிலையை உருவாக்கும். அது சிலவேளை கள நிலைமையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும்.

எனவேதான் அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அக் கட்சியின் சிலருடன் பேச்சுவார்ததை நடத்தினர்.

அப்போது மேற்படி காணிப் பிரச்சினைகளில் சிலவற்றை தீர்க்க உடனடியாகவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் ஏனைய பிரச்சனைகளை தீர்ப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டதாகவும் மு.கா. அறிக்கையொன்றில் குறிப்பிட்டு இருந்தது.

முஸ்லிம் வாக்குகளில் பெரும் பகுதி தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எதிர்க் கட்சியினருக்கு இருக்கிறது. எனவே அவர்கள் மு.கா. உட்பட் முஸ்லிம் கட்சிகளைப் பற்றி அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் போல் தான் தெரிகிறது.

முஸ்லிம்கள் எம்மோடு இருப்பதால் மு.கா. எம்மோடு இணையாவிட்டால் பரவாயில்லை என் ஐ.தே.க. தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன கிரிஎல்ல கூறியிருந்தார்.

அதேவேளை எதிர்க் கட்சிகளில் உள்ள முஸ்லிம் தலைவர்களும் மு.கா. எதிர்க் கட்சியில் இணைவதை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள் என்ற வாதத்திலும் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில் மு.கா. எதிர்க் கட்சியில் இணைந்தால் மு.கா. தலைவர்கள் தான் எதிர்க் கட்சியில் முஸ்லிம் தலைவர்களாக தோற்;றமளிப்பார்கள். இதனாலும் மு.கா. அரசாங்கத்திலேயே இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.

சுருக்கமாக கூறுவதாயின் இப்போது ஒருபுறம் வசதிகள் சலுகைகள். அத்தோடு பாதுபாப்புப் பிரச்சினை. அதேவேளை அரசாங்கம் கடைசி நேரத்திலாவது முஸ்லிம்களின் சில பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறுகிறது.

அந்த சந்தர்ப்பத்தை கைவிடவும் முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் இவற்றில் சிலவற்றையாவது தீர்த்தால் அது சமூகத்துக்கும் நன்மை தரும், தமக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் அரசியல் இலாபத்தை தரும்.

இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை விட்டுச் சென்றால் அரசாங்கமும் இந்தப் பிரச்சினைகளை கைவிட்டுவிடும். இதே ஜனாதிபதியே மீண்டும் பதவிக்கு வந்தால் அது அடுத்த பொதுத் தேர்தலின் போது தம்மை பாதிக்கவும் கூடும்.

எல்லாவற்றையும் விட முஸ்லிம் வாக்குகள் எதிர்க் கட்சியின் பக்கம் சார்ந்திருப்பதனால் தம்மை புறக்கணித்து இருக்கும் எதிர்க் கட்சிகளின் பின்னால் போக கையேந்தி போக வேண்டிய நிலை மு.கா.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அரசாங்கத்திலிருந்து விலக முடியாது.

மறுபுறத்தில் பெரும்பாலான முஸ்லிம் வாக்காளர்கள் ஒரு புறமிருக்க தாம் மறுபுறத்தில் இருந்தால் தமது எதிர்க்காலம் என்னவாகும் என்று மு.கா. சிந்திக்க வேண்டியுள்ளது.

இவ்வளவு காலம் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை தீர்க்க விரும்பாத அரசாங்கம் இப்போது அவற்றை தீர்க்க முன்வந்திருப்பது நேர்மையாகவா என்ற சந்தேகம் எழுவது நியாயமே.

இப்போது அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி அப்பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள அரசாங்கத்தில் தங்கியிருந்து அரசாங்கம் அவற்றை தீர்க்காவிட்டால் அது பெரும் ஏமாற்றம் மற்றுமல்ல, பொதுத் தேர்தலின் போது முஸ்லிம்களின் ஆதரவையும் இழக்க வேண்டியிருக்கம்.

இந்த இரண்டு புறத்தையும் எடைபோட்டுப் பார்த்துத் தான் மு.கா. முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

Exit mobile version