கோவை பேரூரை அடுத்த செட்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (56) தீவிர ரஜினி இரசிகர். சிறுநீரக பாதிப்பு காரணமாக இவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு டிரிப் மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில், லிங்கா படம் வௌியாகியுள்ளதை கேள்விப்பட்ட ராஜேந்திரன் எப்படியாவது ரஜினியின் லிங்காவை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பில் இருந்தார்.
ஆனால், மருத்துவமனை கட்டுப்பாடுகள் அவரை கட்டிலேயே கட்டிப்போட்டன. சமயம் பார்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரன், லிங்கா படத்தை பார்க்க பகலில் சென்றால் மருத்துவமனை ஊழியர்களிடம் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்து, இரவு காட்சியை பார்க்க திட்டமிட்டார்.
இதையடுத்து, நேற்று இரவு கையில் குத்தியிருந்த டிரிப் குழாய்களுடன் மருத்துவமனையில் இருந்து கோவை, எஸ்.பி.ஐ., ரோட்டில், லிங்கா படம் ஓடும் தியேட்டருக்கு சென்றார்.
10 மணி காட்சிக்கான டிக்கட்டை எடுத்து, உள்ளே சென்றார். லிங்கா படத்தை இரசித்து பார்த்தார். படம் முடிந்து அனைவரும் வெளியில் சென்றனர். ராஜேந்திரன் மட்டும் இருக்கையிலேயே கிடந்தார்.
தியேட்டர் ஊழியர்கள் வந்து பார்த்தபோது, அவர் இறந்து போனது தெரிய வந்தது.