பதுளை மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று சந்தித்தார்.
இன்று முற்பகல் நடைபெறவிருந்த சில தேர்தல் பிரசாரக் கூட்டங்களை இரத்து செய்துவிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மக்களின் நிலமைகளை ஆராய்ந்துள்ளார்.
பதுளை ரில்பொல, மெதகம, மொரகொல்லவத்த பிரதேசங்களில் மண் சரிவு ஏற்பட்ட பிரதேசங்களுக்கு ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள வெலிகேமுல்ல மகா வித்தியாலத்திற்குச் சென்ற ஜனாதிபதி மக்களின் துயரங்களைக் கேட்டறிந்து கொண்டார்.
மண் சரிவினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக பதுளை மாவட்டத்தில் பாதுகாப்பான இடங்களை அடையாளம் கண்டு அவற்றில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான துரித நிவாரண உதவிகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அழிவடைந்துள்ள வயல்நிலங்களுக்கான இழப்பீடுகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.