ilakkiyainfo

நல்லாட்சியை ஏற்படுத்த எம்முடன் இணையுங்கள் : த.தே.கூ.விற்கு மைத்திரி அழைப்பு (படங்கள்)

நல்லாட்சியை ஏற்படுத்து வதற்காக எங்களோடு இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன் என பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா இன்று திங்கட்கிழமை காத்தான்குடியில் வைத்து தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதான வீதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தொடர்ந்துரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா,

இன மத பேதங்களுக்கு அப்பால் சிங்கள பௌத்த, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர், பறங்கியர் என அனைவரும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

இன்று இந்த பயணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உட்பட முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் பயணத்தில் என்னோடு கைகோர்த்து நிற்பது எனக்கு மகிழ்ச்சியைத்தருகின்றது.

20141229_105905-600x337அதே போல பௌத்த சிங்கள மக்களை பிரதி நிதித்துவப்படுத்த ஜாதிக ஹெல உறுமய எங்களுடன் பிரதி நிதித்துப்படுத்துகின்றது. அதே போன்று பௌத்த மதகுருக்கள் மற்றும் உலமாக்கள் எங்களுக்கு ஆசீர்வதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் ஒத்துழைப்பு இருக்கின்றது. இந்த நல்ல பயணத்தில் நல்லாட்சியை ஏற்படுத்து வதற்காக எங்களோடு இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

இந்த நாட்டில் எல்லா இனமும் சமமானவர்கள் எல்லோருக்கு அனைத்து சுதந்திரமும் உண்டு. எல்லோரும் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்துவதே நமது சேவையாக இருக்கின்றது.

அவரவர் மதங்களை பின்பற்ற கலாசாரங்களை பின்பற்ற சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவை ஒரு நல்ல மனிதராக கண்டோம். யுத்தம் முடிந்த பிறகு அவருடை அத்தனை விடயங்களிலும் மாற்றத்தைக் கண்டோம்.

இன்று தன்னை ஜனாதிபதியாக்கிய அத்தனை பேரையும் மறந்து விட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையோ பண்டார நாயக்காவின் கொள்கையோ இன்று அவரிடத்தில் இல்லை. அவரும் அவருடைய குடும்பமும் கொள்ளையடிப்பதற்கே இந்த நாட்டை பயன் படுத்திகின்றனர்.

காணிகளை கொள்ளையடித்துள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களது காணிகளை வியாபரிகளுக்கு விற்பனை செய்து அவர்கள் பணம் சம்பாதித்துள்ளார்கள்.

உங்களுக்குரியதை செய்வதற்கு நிம்மதியாக வாழ்வதற்கு மதத்தை பின்பற்றுவதற்கு நிம்மதி சுதந்திரம் தேவை. தொழில் செய்யக் கூடிய நல்ல சூழலை உருவாக்க வேண்டும். அவ்வாறான நல்ல சூழல் இங்கு இல்லை.

இந்த நாட்டின் நீதியை சட்டத்தை இல்லாமல் ஆக்கியுள்ளார்கள். மக்களின் நம்பிக்கை நாசமாக்கியிருக்கின்றார்கள். நாட்டுக்காக அபிவிருத்தி செய்யவில்லை. அவர்களின் சொந்தப் பொக்கட்டுக்களை நிரப்பிக் கொள்வதற்காக அபிவிருத்தி செய்திருக்கின்றார்கள்.

ஊழல் இல்லாத நல்லாட்சியை உருவாக்க நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். உங்களுக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. தொழிலில்லாத இளைஞர்கள் பலர் இன்றிருக்கின்றார்கள்.

நான் வெற்றி பெற்றவுடன் தொழில் இல்லாத இளைஞர்களுக்கு நல்ல தொழிலை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

விவசாயிகளுக்கு நிறையப் பிரச்சினை இருக்கின்றது. நான் ஜனாதிபதியானவுடன் விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

எதிர்வரும் 8 ஆம் திகதி இந்த நாட்டில் ராஜபக்ச குடும்பம் வெற்றி பெறப் போகின்றதா அல்லது இந்த நாட்டு மக்கள் வெற்றி பெறப் போகின்றார்களா என்பது தான் தற்போதுள்ள கேள்வியாகும்.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டுமென்று இன்று ஒன்று பட்டுள்ளார்கள். ஊழல் நிறைந்த ராஜபக்சவின் குடும்பத்தினை பாதுகாக்க வேண்டிய எந்த தேவையும் இந்த நாட்டு மக்களுக்கில்லை.

இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அனைவரும் ஒன்று சேருமாறும் எதிர்வரும் 8 ஆம் திகதி எனது சின்னமான அன்னச்சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரட்ன, எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது பொது வேட்பாளரின் காத்தான்குடிக்கான பிரசார தேர்தல் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.

Exit mobile version