ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி ஏற்கனவே கொள்கை ரீதியாக, முடிவு செய்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அதனை இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றது.
இந்த முடிவின்படி பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவை, ஆதரிக்கப் போவதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அறிவித்திருக்கின்றார். இது ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
நாட்டில் நல்லாட்சியொன்றை அமைக்க வேண்டும். அதற்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று எதிரணிகளின் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார்.
அதேநேரம் தமிழ் மக்களுக்கான தீர்வை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவினால் மட்டுமே வழங்க முடியும். அந்த இயலுமை அவருக்க மட்டுமே உள்ளது.
ஆகவே, அவருக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வர வேண்டும். ஆனால் நிபந்தனை எதனையும் விதிக்கக் கூடாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவரும், அமைச்சருமாகிய நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கோ, பிரான்ஸிக்கோ, இந்தியாவுக்கோ செல்வதில் பயனில்லை. ஏனெனில் இந்தப் பிரச்சினை ஓர் உள்ளூர் பிரச்சினை. ஆகவே அதற்கு உள்ளுரிலேயே தீர்வு காணப்பட வேண்டும்.
அதனைச் செய்யக் கூடியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ என்பதால், அவருக்கே கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வார காலம் இருக்கின்ற சந்தர்ப்பத்திலேயே இந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கிய போட்டியாளர்களாக விளங்கும் மைத்திரிபால சிறிசேனவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளருக்கு அதரவு வழங்குவதற்கான தனது முடிவை வெளிப்படுத்துவதற்கு முன்பே, கூட்டமைப்பின் பல்வேறு நிலைகளில் உள்ள அதன் தலைவர்கள் மைத்திரிபால சிறிசேனவை, ஆதரிக்கும் வகையில், உரைகளை ஆற்றியிருந்தனர். அத்துடன் அதற்கான கருத்துக்களை வெளியிட்டும் வந்தனர்.
எதிர்க்கட்சிகள் பலவும் ஒன்றிணைந்து, நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று தேவை. குடும்ப அரசியலாகியுள்ள இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
புதியவர்களை ஆட்சி பீடமேற்ற வேண்டும் என்பதற்காகச் செயற்பட்டு வருகின்றன. ஊருடன் ஒத்துவாழ் என்பார்கள். அதுபோல, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எடுத்துள்ள முடிவை ஏற்று, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு துணை போவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதாகத் தெரிகின்றது.
இருந்த போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும்சரி, எதிரணியின் சார்பில் போட்டியிடுகின்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும்சரி, தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினையாகிய தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டிய விடயம் குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.
தமிழ் மக்களின் நலன்கள், அவர்களின் அரசியல் தேவைகள் குறித்து இருதரப்பினரும் என்ன வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும்கூட அவர்கள் சரியான முறையில் குறிப்பிடவே இல்லை.
இரு தரப்பினருமே தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாரில்லை
இரண்டு பிரதான வேட்பாளர்களினதும் இந்தச் செயற்பாடானது, தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்்ஷவைப் பொறுத்தமட்டில், அவர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரமாட்டார், அதற்கான அணுகுமுறை எதுவும் அவரிடம் இல்லை என்பதை தமிழ் மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றார்கள்.
இதன் காரணமாகத்தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையோ, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகிய காலம் தொடக்கம் ஆதரிக்காமல் தேர்தல்களில் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளனர்.
யுத்த காலத்தில் இடம்பெற்ற அரசாங்கத்தின் அணுகுமுறைகள், செயற்பாடுகள் என்பன தமிழ் மக்களுக்கு பெரும் வேதனையைத் தருவதாகவே அமைந்திருந்தன.
இருந்த போதிலும் யுத்தம் முடிவடைந்தபின்னர், அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வரும். ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆயினும். அந்த எதிர்பார்ப்பில் குறைந்தது, ஒரு சத வீதத்தையேனும், நிறைவேற்றுவதற்கு அரசாங்கமும்சரி, ஜனாதிபதியும்சரி தயாராக இருக்கவில்லை.
மாறாக யுத்த காலத்திலும் பார்க்க அதிக நெருக்கடிகளையும், கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தமிழ் மக்கள் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்தத் தேர்தலில் ஆதரிப்பரற்குத் தயாராக இல்லை என்பது தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாள் முதலே வெளிப்பட்டிருந்தது.
தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுகின்ற அரசியல் பேச்சில், மேடைப் பேச்சக்காகக் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை முன்வைக்கவில்லை. இது தமிழ் மக்கள் பொது வேட்பாளராகிய எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு மேலும் தூண்டியிருக்கின்றது.
இதையும்விட, தேர்தல் கால, அரசியல் புறச் செயற்பாடுகளாக, அரச தரப்பில் இருந்து எதிரணியினர் பக்கம், பலர் கட்சி தாவிய நடவடிக்கையும் தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ தொடர்பில் மேற்கொண்டிருந்த கருத்தை மேலும் வலுப்படுத்துவதற்கே உதவியிருக்கின்றது,
இத்தகையதொரு பின்னணியில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றது.
பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இரண்டு பக்க அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏன் ஆதரிக்கவில்லை என்பதற்கு தெளிவான விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால், அவ்வாறு ஆதரிப்பதனால் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக என்ன வகையான நலன்கள் கிடைக்கும் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
எதிரணியினரின் பொது வேட்பாளர் பதவிக்கு வந்தால் என்ன நடக்கும், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு எந்த வகையில் தீர்வு கிட்டும் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பொது எதிரணியில் முக்கிய தலைவர்களாக இணைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருமே ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பங்களைப் பெற்றிருந்தனர். இரு தலைவர்கள் மீதும் தமிழ் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள் என்று அதிக அளவில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டிருந்தன.
இந்த நிலையில் அவர்கள் மீண்டும் அதிகாரத்தைப் பெறுகின்ற பட்சத்தில் என்ன செய்வார்கள் எந்த வகையில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள் என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டிருக்கின்றது என்று வெளியாகியிருந்த தகவல்களை கூட்டமைப்பு தலைவர்கள் உறுதியாக மறுத்துரைத்திருக்கின்றார்கள்.
அதேநேரம், தேசிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு எதிரணியினரிடம் என்ன வகையான திட்டம் அல்லது ஆலோசனை இருக்கின்றது என்பது குறித்து கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தவுமில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய ஆர்.சம்பந்தன், குறைந்த பட்சம், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குக் கூட, ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு அப்பால், எந்த அடிப்படையில் எதிரணியினருக்கு ஆதரவு வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது என்பது பற்றி இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
இந்த நிலைப்பாடானதுஆட்சி மாற்றத்தை விரும்புகின்ற தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் நிலைமைகள் போக்குகளுக்கு என்ன நடக்கும் என்பதை திரைபோட்டு மறைக்கின்ற ஒரு செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது.
இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதைத் தமது அரசியல், இராணுவ பொருளாதார நோக்கங்களுக்காக விருப்பியுள்ள இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் மீது நம்பிக்கை வைத்து கூட்டமைப்பு, இந்தத் தேர்தலில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்வந்திருப்பதாகவே தெரிகின்றது.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்ட பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்ற ஆட்சியாளர்களை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இந்த வெளிச் சக்திகள் அழுத்தம் கொடுக்கும் என்பது கூட்டமைப்பு தலைமையின் நம்பிக்கையாகத் தெரிகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகனை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டத்தை முறியடித்து தோற்கடிப்பதற்கு இந்த வெளிநாடுகள் பேருதவியாகப் பின்னணியில் இருந்து செறய்பட்டிருக்கின்றன என்பது உலகறிந்த இரகசியம்.
யுத்தம் முடிந்தவுடனும்சரி, யுத்தம் முடிவடைந்த ஐந்தரை வருட காலப்பகுதியிலும்சரி, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவிய நாடுகள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகித்ததாகத் தெரியவில்லை.
அவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தால், ஓர் அரசியல் தீர்வுக்கான அடித்தளமாவது இடப்பட்டிருக்கும். அல்லது தீர்வை நோக்கிய அரசியல் நகர்வுக்கான ஆயத்தங்களாவது இடம்பெற்றிருக்கும். இது நடைபெறவில்லை.
மாறாக, இலங்கையில் தமிழ் மக்களை பேரினவாதிகளின் தொடர்ச்சியான அரசியல் வன்முறைகளில் பாதுகாப்பதற்காக இலங்கையுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம் கூட சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அந்த ஒப்பந்தத்திற்கு நேர்மாறாக, இணைந்திருந்த வடக்கும் கிழக்கும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அங்கு பலவந்தமாக சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன.
அந்த நடவடிக்கைகள் இப்போது முழு வீச்சில் யாருடைய எதி;ர்ப்புமின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும், சட்டரீதியான காணிகளும், அரச தரப்பினரால் வஞ்சகம் நிறைந்த அரசியல் நோக்கத்துடன் பகிரங்கமாக அபகரிக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய ஒரு நிலைமையில் தமிழ் மக்களின் அரசியல் அமைப்பாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ள போதிலும், தமிழ் மக்களின் இன்னல்களுக்கு, அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்ற நெருக்கடிகளுக்கு எந்த வகையில் முடிவு எட்டப்பட வேண்டும் என்பது தொடர்பில் தான் நம்பியுள்ள வெளிச்சக்திகளாகிய வெளிநாடுகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்திருக்கின்றது என்பதும் தெரியவில்லை.
உள்ளூரில், ஆட்சி மாற்றத்திற்காகத் தேர்தலில் போட்டியிடுகின்ற பொது வேட்பாளர் மீது அல்லது அவருக்குப் பின்னாலிருந்து செயற்படுகின்ற அரசியல் தலைமைகள் மீது தமிழ் மக்களின் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எத்தகைய அழுத்தங்களைப் பிரயோகித்திருக்கின்றது என்பதும் தெரியவில்லை.
இதனால், அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டனவா அல்லது வெறுமனே ஆட்சி மாற்றத்தை விரும்புகின்ற வெளிச்சக்திகளுக்கு நாம் தமிழ் மக்களின் நிலைமைகளை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றோம்தானே, அதன் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை வழங்க கூட்டமைப்பு முன்வந்திருக்கின்றதோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது குறித்து எதிரணியினர் மத்தியில் தெளிவான கொள்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்தப்பிரச்சினையைத் தொடரவிடக்கூடாது என்பதில் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கின்றார்களா என்பதும் தெரியவில்லை. அதேநேரம் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை என்ற ஒன்று இருக்கின்றதா என்று கேள்வி எழுப்பும் வகையிலான கொள்கையைக் கொண்டுள்ள .
ஹெல உறுமயவுடன் பொது எதிரணியினர், தமிழ் மக்களின் அரசியல் நலன்களைப் புறந்தள்ளத்தக்க வகையிலான ஒப்பந்தம் செய்திருக்கின்றார்கள்.
இந்த நிலைமையில் பொது எதிரணியினர் எத்தகைய நடவடிக்கைகளை தமிழ் மக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
பல்வேறு சந்தேகங்கள், பல்வேறு வினாக்கள் எழுந்திருக்கின்ற ஒரு நிலைமையில்தான் – தெளிவற்ற ஒரு நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கான தனது முடிவை வெளியிட்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற தமிழ் மக்களின் அரசியல் தேவை தொடர்பில், அரசியல் நிலைப்பாட்டில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்த அளவிற்குத் தெளிவாக இருக்கின்றது, உறுதியாக இருக்கின்றது என்ற வினாக்களை இந்த முடிவு எழுப்பியிருக்கின்றது.
நடைபெறப் போகின்ற தேர்தல் இந்த வினாக்களுக்கு விடைகளைத் தேடித் தருமா அல்லது தேர்தலின் பின்னர், இடம்பெறப் போகின்ற மாற்றங்கள் இதற்கான விடைகளைத் தருமா என்பது தெரியவில்லை.
இந்த ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகிய சந்தர்ப்பத்தில்தான், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு டிசம்பருக்குள் முடிவு காணப்பட வேண்டும் இல்லையேல் ஜனவரி முதல் பரவலாக சாத்வீகப் போராட்டங்கள் வெடிக்கும் என சூளுரைத்திருந்தார்.
அறிவிக்கப்பட்டவாறு தேர்தல் நடைபெற்றாலும்கூட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற வகையில் கருத்துக்கள் அப்போது வெளியிடப்பட்டிருந்தன.
டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்துவிட்டது, தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் முடிவுக்கு வரவில்லை. ஆட்சி மாற்றத்திற்காக எதிரணியினர் முனைந்துள்ள இந்தத் தேர்தலில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கங்களிலும்கூட தமிழ் மக்களின் நெருக்கடிகளைக் குறைப்பதற்கான உறுதி மொழிகளைக் காண முடியவில்லை.
இது விடயத்தில் அறிவிக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் அடுத்த கட்டமாக கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது என்பதும் தெரியவில்லை.
செல்வரட்னம்சிறிதரன்