கோவை: கோவை அருகே மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை சூலூர் அருகேயுள்ள மதியழகன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (52). கூலி தொழிலாளி. இவருக்கு ரேவதி (18), ரூபா (17) என இரு மகள்கள்.
இவர்கள் இருவரும் காங்கேயம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர்.
முருகேசனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுரேஷ் (22). இவர் பெயிண்டிங் மற்றும் பல்வேறு கூலி வேலை செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக சுரேஷ், ரூபாவுடன் நட்பாக பழகினார்.
அவர் பள்ளி விடுமுறை காலங்களில் வீட்டிற்கு வரும்போது சுரேஷ், வேலைக்கு செல்லாமல் அவரை அடிக்கடி பின் தொடர்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
அவர் ரூபாவிடம், ‘நான் உன்னை காதலிக்கிறேன், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்’, எனக்கூறியுள்ளார். இதை அவர் ஏற்கவில்லை, மேலே படிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். ஆனால் தொடர்ந்து சுரேஷ் வற்புறுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரூபா, தனது அக்கா ரேவதியுடன் வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கே வந்த சுரேஷ், ரூபாவின் கையை பிடித்து இழுத்துள்ளார்.
இதில் கோபமடைந்த ரூபா, செருப்பை கழற்றி அவரது முகத்தில் அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், வீட்டிற்கு சென்று கத்தியை கொண்டு வந்து ரேவதியின் கண்முன், ரூபாவின் கழுத்தை அறுத்தார். கழுத்தின் பின் பகுதி மற்றும் முதுகிலும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார்.
சில நொடிகளில் ரூபா ரத்தவெள்ளத்தில் பலியானார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் பதுங்கியிருந்த சுரேசை நேற்று கைது செய்தனர்.
அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘ என்னுடன் ரூபா நன்றாக பேசி பழகினார். அவர் என்னை திருமணம் செய்வார் என நினைத்திருந்தேன்.
நான் மது பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக யாரோ அவரிடம் கூறியுள்ளனர். மேலும் நான் படிக்கவில்லை என அவர் அலட்சியமாக நடந்து கொண்டார்.
அவரை திருமணம் செய்ய அழைத்த போது பொது இடத்தில் வைத்து செருப்பால் அடித்தார். இந்த அவமானத்தை என்னால் தாங்க முடியவில்லை.
அவர் மீது வைத்திருந்த பாசம் போய், வெறி ஏற்பட்டது. கத்தியை எடுத்து வந்து அவரின் கழுத்தை அறுத்தேன். தப்ப முயன்ற போது சிக்கி விட்டேன்“ என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.