வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லுணுவில பிரதேச வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர், அவரது கணவர், இரு பிள்ளைகளுடன் கொலை செய்யப்பட்டு குட்டையொன்றினுள் போடப்பட்டிருந்த நிலையில் நேற்று பொலிஸாரால் சடலங்கள் மீட்கப்பட்டன.
குறித்த வைத்தியசாலையில் பல் வைத்தியராக கடமையாற்றிய 49 வயதுடைய பூன்ய குமாரி விஜேசிங்க, அவரது கணவர் தும்பு வர்த்தகரான நளின் ஹெட்டி ஆரச்சி, 15 வயதுடைய மகன் சாருக்க கயஷான் மற்றும் 13 வயதுடைய மகள் பியூமி ஹெட்டி ஆரச்சி ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண கேசரிக்கு தெரிவித்தார்.
வென்னப்புவ பொலிஸ் பிரிவின் நைனாமடம பிரதேசத்தில் அமைந்திருந்த அந்த குடும்பத்தினரின் வீட்டுக்கு பின்னால் குடும்பத்தலைவனான நளின் ஹெட்டி ஆரச்சியினால் நடத்திவரப்பட்ட தும்பு ஆலையின் அருகில் உள்ள மட்டைகளை ஊறவைக்கும் குட்டையில் இருந்தே இந்த நால்வரும் சடலங்களாக நேற்று பிற்பகல் மீட்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் லுணுவில பிரதேச வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வென்னப்புவ பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
தமது வைத்தியசாலையில் பல் வைத்தியராக கடமையாற்றும் பூன்ய குமாரி விஜேசிங்க கடந்த இரு நாட்களாக கடமைக்கு சமுகமளிக்கவில்லை எனவும், தொலைபேசி ஊடாக அவரை தொடர்புகொள்ள முயற்சிக்கும் போதும் அவர் அதற்கு பதிலளிப்பதாய் இல்லை எனவும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
வைத்தியசாலைக்கு வராமைக்கான காரணத்தை அந்த வைத்தியர் அறிவித்திருக்காததால் இந்த முறைப்பாடு பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்துள்ளது.
இதனை அடுத்து குறித்த பெண் வைத்தியர் வாழ்ந்து வந்த நைனாமடம பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு பொலிஸார் நேற்று பிற்பகல் வேளையில் சென்றுள்ளனர்.
அங்கு சென்று வைத்தியரை பொலிஸார் தேடிய போதே வீட்டின் பின்னால் இருக்கும் வைத்தியரின் கணவரின் தும்பு ஆலைக்கு அருகில் மூன்று சடலங்கள் இருப்பதை பொலிஸார் கண்டுள்ளனர்.
குறித்த மூன்று சடலங்களும் மட்டைகள் ஊறவைக்கப்படும் குட்டை ஒன்றினை சோதனை செய்தபோதே கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்ட பொலிஸார் அதனை அடுத்து விடயம் உடனடியாக மாரவில நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக குறிப்பிட்டனர்.
இதனை அடுத்து ஸ்தலத்துக்கு மாரவில நீதிவான் நீதிமன்ற நீதிபதி வருகை தந்ததை அடுத்து அந்த மட்டைகள் ஊறவைக்கும் குட்டை மேலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மேலுமொரு சடலத்தினையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
இந் நிலையிலேயே வைத்தியர் அவரது கணவர் மற்றும் இரு பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டுள்ள விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோரின் கீழ் விஷேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், வைத்தியரின் வீட்டின் பின்னால் நடத்திவரப்பட்ட தும்பு ஆலையின் காவலாளியாக கடமையாற்றிய நபர் ஒருவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த காவலாளிக்கு இக்கொலையுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என ஆராயும் பொலிஸார் அந்த நபரை தேடி வலை விரித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாலிய சில்வாவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் ஆலோசனையின் கீழ் வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளது.
இலங்கை மதிய செய்திகள்..