எகிப்து தலைநகர் கெய்ரோவில், வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க வைத்தபோது அது வெடித்துச் சிதறியதில் அதில் சிக்கி வெடிகுண்டு நிபுணர் ஒரவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எகிப்து காவல்துறையைச் சேர்ந்தவர் அந்த உயிரிழந்த வெடிகுண்டு நிபுணர். கெய்ரோவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு வெளியே இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் வைத்தே அதை செயலிழக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அல் ஹாரம் என்ற தெருவில் உள்ள ஒரு பூத் தொட்டியில் அந்த வெடிகுண்டை புரட்சியாளர்கள் வைத்திருந்தனர்.
உலகப் புகழ் பெற்ற பிரமிடுகள் அமைந்துள்ள இடத்திற்கு செல்லும் சாலையில் இந்த தெரு அமைந்துள்ளது. இந்த வெடிகுண்டை செயலிழக்க வைப்பதர்காக ஒரு போலீஸ் வெடிகுண்டு அகற்றும் நிபுணர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்றார்.
பூத்தொட்டியில் இருந்த வெடிகுண்டை அகற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது திடீரென பலத்த சப்தத்துடன் அந்த குண்டு வெடித்துச் சிதறியது.
இதில் அந்த காவல்துறை அதிகாரி சிக்கி படுகாயமடைந்து கீழே விழுந்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சில மீட்டர் தொலைவில் வந்து அவர் விழுந்தார். இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் எகிப்து காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. அஜ்னத் மிஸ்ர் என்ற ஜிஹாத் குழுதான் இந்த வெடிகுண்டை வைத்துள்ளதாக டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.
காவல்துறையினரைக் குறி வைத்து இந்தக் குண்டு வைக்கப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு அதிபர் மொஹமத் மோர்சியை ராணுவம் ஆட்சியிலிருந்து அகற்றியது. அன்று முதலே ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் எதிராக புரட்சியாளர்கள் போராடி வருகின்றனர், தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை நூற்றுக்காணக்கானோர் இதுவரை இரு தரப்பிலும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.