திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள் அடிக்கடி கிளம்பும் “ராஜினாமா” புரளி அக்கட்சி தொண்டர்களை அலைபாய வைக்கிறது. அக்கட்சியின் உட்கட்சி தேர்தல் ஏறக்குறைய நடந்து முடிந்து விட்டது.

65 மாவட்டச் செயலாளர்களில் 60 பேர் உள்கட்சி தேர்தல் மூலம் தேர்வு பெற்று வருகின்ற ஜனவரி 9-ம் தேதி பொதுக்குழு கூடவிருக்கிறது. இந்த குழுதான் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான செயல்திட்டத்திற்கு வழி வகுக்கும்.

தேர்வு பெற்றுள்ள மாவட்டச் செயலாளர்கள் பெரும் மெஜாரிட்டியில் ஸ்டாலின் ஆதரவாளர்கள்தான். ஒரேயொருவர் அதுவும் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமாரி தி.மு.க. மாவட்டச் செயலாளர் மட்டும் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஆதரவாளர்.

மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் அறவே ஒரங்கட்டப்பட்டு விட்டார்கள். கிட்டத்தட்ட திராவிட முன்னேற்றக் கழகம் மு.க. ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 9-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தி.மு.க.வின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு முதலில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

Tamil_Daily_News_6616938115இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு கலைஞர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் பதவிக்கு பேராசிரியர் அன்பழகனும், பொருளாளர் பதவிக்கு மு.க. ஸ்டாலினும் போட்டியிடுகிறார்கள்.

இந்தப் போட்டிக்கு முன்புதான் திடீரென்று “ராஜினாமா” புயல் புறப்பட்டது. பொதுச் செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்று கேட்டு மு.க. ஸ்டாலின் போர்க்கொடி தூக்கியுள்ளார் என்றும், அதனை வலியுறுத்தி தன்னிடமிருந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்றும் சனிக்கிழமை நள்ளிரவிலிருந்து பரபரப்பு.

பத்திரிக்கை அலுவலகங்களில் எல்லாம் இந்த வதந்தி காட்டுத்தீ போல் பரவியது.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அதிகாலையிலேயே சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் ஸ்டாலின் வீடு முன்பு தி.மு.க. தொண்டர்கள் குவிந்தார்கள்.

“தளபதிக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்க வேண்டும்” என்று கோஷங்கள் எழுப்பினர். “எத்தனை நாளைக்குத்தான் பொருளாளராகவே இருப்பது?” என்று கேள்வி எழுப்பினர்.

karunanithiஅதே நேரத்தில் கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டின் முன்பும் தொண்டர்கள் கூடினர். முன்பு தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்று போராடிய ஸ்டாலின் ஆதரவாளர்கள் இப்போது பொதுச் செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று பேசத் தொடங்கினார்கள்.

இதனால் கட்சியின் புதிய மாவட்டச் செயலாளர்கள் கூட பதற்றத்துடன் காணப்பட்டார்கள். இந்த உள்கட்சி தேர்தலைப் பொறுத்தவரை எத்தனையோ புகார்கள், குறைகள் தலைமைக்கு வந்தாலும் பெரும்பாலும் ஸ்டாலினின் மனம் வருத்தப்படாத வகையிலேயே தலைமை முடிவுகளை எடுத்தது.

இன்னும் சொல்லப்போனால் 65 மாவட்டச் செயலாளர்களில் ஒரேயொரு மாவட்டச் செயலாளர் தன் பரிந்துரைக்காக கொடுக்க வேண்டும் என்று பேராசிரியர் அன்பழகன் போராடிப் பார்த்தார்.

கடைசிவரை அவர் பரிந்துரைத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதனுக்கு வட சென்னை மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றுத் தர முடியவில்லை.

ஏனென்றால் அங்கே ரங்கநாதனுக்குப் போட்டியாக களத்தில் நின்றது ஸ்டாலினின் ஆதரவாளரான இன்னொரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபுதான்.

k_anbazhaganபேராசிரியர் அன்பழகனே ஒரு மாவட்டச் செயலாளரைப் பெற முடியாத அளவிற்கு உள்கட்சித் தேர்தலில் ஸ்டாலினின் கை ஓங்கியிருந்தது என்பதுதான் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களின் கருத்தாக இருக்கிறது.

 மட்டுமல்ல இப்படி பல சீனியர்கள் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்றே தெரிகிறது. ஏற்கனவே மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்க்காடு வீராச்சாமி சாதாரண செயற்குழு உறுப்பினர் பதவிக்கு இறக்கப்பட்டு விட்டார்.

துரைமுருகன் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தலைமைக் கழக முதன்மை செயலாளர் பதவிக்கு இறக்கி விடப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

ராமநாதபுரத்தில் உள்ள சீனியர் தலைவர்களில் ஒருவரான சுப. தங்கவேலன் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்.

அதே போல் முன்னாள் சீனியர் அமைச்சர்களான கோ.சி.மணி, தஞ்சாவூர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் போன்றோரும் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள். இப்படி சீனியர்களுக்கு விடை கொடுத்து ஜூனியர்களுக்கு முக்கியப் பொறுப்பு என்பதுதான் இப்போது நடந்து முடிந்த தி.மு.க.வின் உள்கட்சித் தேர்தலின் சிறப்பு.

imagesஇந்நிலையில் “ஸ்டாலின் ராஜினாமா” என்ற செய்தி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தலைப்புச் செய்தியானது.

இதற்கு முன்பு பாராளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று உண்மையிலேயே ஸ்டாலின் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அதை “நாடகம்” என்று வர்ணித்தாலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியே தலையிட்டு அந்த ராஜினாமாவை வாபஸ் பெற வைத்தார்.

ஆனால் இந்த முறை அப்படியொரு ராஜினாமா ஏதுமில்லை. ஆனால் பொதுச் செயலாளர் பதவியைப் பெறுவதற்கு “லீக்” செய்யப்பட்ட வதந்தி அது என்பது பிறகு வெட்ட வெளிச்சமாகி விட்டது.

கலைஞர் கருணாநிதி வீட்டின் முன்பும், தன் வீட்டு முன்பும் தொண்டர்கள் கூடியதைப் பார்த்த மு.க.ஸ்டாலின், “எந்த எதிர்பார்ப்பும் இன்றி கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறேன்.

ஆகவே எந்த வதந்திகளையும் (பொருளாளர் பதவி ராஜினாமா, பொதுச் செயலாளர் பதவி கேட்பது) யாரும் நம்ப வேண்டிய அவசியமில்லை. வேண்டும் என்றே தி.மு.க.வில் இருக்கக் கூடிய தொண்டர்களுக்கிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்த இந்தக் காரியம் நடைபெற்று இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிக்கை வெளியிட்டார்.

அதையே தன் இல்லத்திற்கு பத்திரிக்கையாளர்களை அழைத்துத் தெரிவித்தார். அப்படித் தெரிவித்த கையோடு கோபாலபுரம் சென்று தன் தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார்.

ஆகவே தி.மு.க.வில் அடுத்தபடியாக பொதுச் செயலாளர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் வருவது இந்த உள்கட்சித் தேர்தலின் முடிவில் நடக்காமல் போகிறது. அது மட்டுமல்ல கட்சியின் உயர்மட்ட கொள்கை முடிவுகளை எடுக்கும் பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி நடைபெறுகின்ற நேரத்தில் “ஸ்டாலினுக்கு இதைவிட பெரிய பதவி” என்ற கோஷம் பொதுக்குழுவில் எழும்ப வாய்ப்பில்லை.

ஏனென்றால் இந்த அறிக்கையிலேயே “ நான் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். அதற்கான வேட்பு மனுவில் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டேன். உள்கட்சித் தேர்தலைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை” என்று தெளிவுபடுத்தி விட்டார்.

பொதுக்குழுவில் கட்சித் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவி தேர்தல்கள் முடிந்த பிறகு, தலைமைக் கழகத்தில் உள்ள பதவிகளுக்கும், கட்சியில் உள்ள அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

இந்த நியமனங்கள் எல்லாம் முடிந்து ஜனவரி-9ம் தேதிக்குப் பிறகு தி.மு.க.வின் 14வது உள்கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்பார்கள். அவர்களின் பதவிக்காலம் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இருக்கும்.

திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை 14 உள்கட்சித் தேர்தல்களை சந்தித்து விட்டது. 1949-ல் துவங்கப்பட்ட இந்த கட்சிக்கு இப்போது வயது 66.

karunanidhi_dmk_1400469374அந்தக் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்படப் போகும் கலைஞர் கருணாநிதி 1969லிருந்து தொடர்ந்து 46 வருடங்களாக தி.மு.க. தலைவராக இருக்கிறார்.

அதே போல் பொதுச் செயலாளராக இருக்கும் பேராசிரியர் அன்பழகன் 1977ல் இருந்து 38 வருடங்களாக அப்பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழமை வாய்ந்த மாநிலக் கட்சி ஒன்றில் 46 வருடம் தலைவராகவும், 38 வருடம் பொதுச் செயலாளராகவும் இருவர் இணைந்து கட்சியை வழிநடத்திச் செல்வது அனேகமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான் இருக்கும்.

இப்போது ஜனவரி 9-ம் தேதியிலிருந்து பொறுப்பேற்கப் போகும் நிர்வாகிகள்தான் அ.தி.மு.க.வை 2016 சட்டமன்றத் தேர்தலில் எதிர்கொள்ளப் போகிறார்கள். அது மட்டுமல்ல புதிய உத்வேகத்துடன் களத்திற்கு வரும் பா.ஜ.க.வையும் தி.மு.க. எதிர்கொண்டு சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது.

அதனால்தான் இப்போது ஒரு பக்கம் பா.ஜ.க.வை சாடி அறிக்கைகளும், இன்னொரு பக்கம் அ.தி.மு.க.வை எதிர்த்துப் போராட்டங்களும் என்ற வியூகத்தைக் கடைப்பிடிக்கிறது.

ஆக, அடுத்த சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் புதிய நிர்வாகிகள் தி.மு.க.வில் ரெடி- அவர்களின் அஜெண்டா என்ன என்பது ஜனவரி 9ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தீர்மான வடிவில் வெளிவரும்!

-எம.காசி நாதன்-

Share.
Leave A Reply