தமிழர்களின் கோரிக்கையை ஏற்று தனிநாட்டை பிரித்து கொடுத்து விட்டால் அவர்கள் தங்களுக்குள் முட்டி மோதி எல்லாவற்றையும் கெடுத்து விடுவார்கள் என்பது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமையீனத்திற்கு உதாரணமாக சொல்லப்பட்டு வரும் விடயமாகும்.
இதை மெய்ப்பிப்பது போல அண்மையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளும் புதிய அரசின் ஆட்சிப்பொறுப்பு ஏற்பும் பற்றிய செய்திகள் வெளிவந்ததால் இந்த சம்பவத்திற்கு முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விட்டது என்றே நினைக்கிறேன்.
தமிழீழம் கேட்டு போராடிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகரசபை கலைக்கப்பட்டது என்ற வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியாகியிருந்தது.
வல்வெட்டித்துறை நகரசபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களிடம் எழுந்த பதவி ஆசையினால் எழுந்த மோதல்கள் குழப்பங்களால் அந்த சபை இயங்க முடியாமல் முடங்கியிருந்த நிலையில் வல்வெட்டித்துறை நகரசபையை கலைப்பது என்ற முடிவுக்கு வடமாகாணசபை நிர்வாகம் வந்திருந்ததாகவும் அதற்கமையவே வல்வெட்டித்துறை நகரசபை கலைக்கப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு நகரசபையையே நிர்வாகிக்க முடியாமல் ஒரே கட்சியை சேர்ந்தவர்களே தங்களுக்குள் பதவிக்காக சண்டை பிடித்து இறுதியில் அச்சபையை கலைக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.
தமிழீழத்திற்காக தனிநாடு கேட்டு போராடிய பிரபாகரனின் சொந்த ஊரில் உள்ள நகரசபைக்கு தான் இந்த அவலம் நிகழ்ந்திருக்கிறது.
இந்த நகரசபை கலைக்கப்பட்டது போல எதிர்காலத்தில் வடமாகாணசபை கூட இப்படி உட்கட்சி மோதல்களால் குழப்ப வாதிகளால் கலைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
வல்வெட்டித்துறை நகரசபை விவகாரம் இறுதியாக நடைபெற்ற வடமாகாணசபை அமர்வின் போது முக்கியமாக பேசப்பட்டது.
வடமாகாணசபை அமர்வில், வல்வெட்டித்துறை நகரசபை தொடர்பாக பேரவைத் தலவர் சி.வி.கே.சிவஞானமும், முன்னாள் வல்வெட்டித்தறை நகரசபை உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான க.சிவாஜிலிங்கமும் நகரசபை தலைவருக்கு எதிரான சர்ச்சையைக் கிளப்பிய பொழுது,
அவர்களது பேச்சின் நடுவே, குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் கலாநிதி. க. சர்வேஸ்வரன், வல்வெட்டித்துறை நகரசபையைக் குழப்பியதில் சிவாஜிலிங்கத்திற்கும் சிவஞானத்திற்கும் முக்கிய பங்கு உள்ளதைக் குறிப்பிட்டு இது தொடர்பாக நடைபெற்ற விசாரணை பற்றிய விபரத்தை முதலமைச்சரே தெளிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த சர்ச்சைக்கு முடிவு காண, கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பதவியைக் குறிவைத்து நடைபெற்ற இழுபறிகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களினால் நகரசபையைக் கலைத்தமை தொடர்பாக, பின்வருமாறு விளக்கம் அளிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் நகரசபையை இயங்கவிடாது சில உறுப்பினர்கள் தொடர்ச்சி யாகக் குழப்பங்களை ஏற்படுத்தி வந்ததால், இது தொடர்பாக இந்த நகர சபையில் உள்ள முறைகேடுகள் தொடர்பில். ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
அவர் தனது அறிக்கையில் எந்த இடத்திலும் தவிசாளர் ஊழல் புரிந்துள்ளார். என குறிப்பிடவில்லை. இந்த நிலையில், வல்வெட்டித்துறை நகரசபையில் எவ்விதமான மோசடியும்; இடம் பெறவில்லை என்றும் தெரிய வந்தது.
ஆனால் மறுபக்கம் நகரசபையின் சில உறுப்பினர்கள் தம்மிடம் பெரும்பான்மை இருப்பதாகவும், தம்மால் தெரிவு செய்யப்படும் ஒருவரை தலைவராக்குமாறு கோரினர்.
இந்த உறுப்பினர்கள் தொடர்ந்தும் தவிசாளரை இயங்கவிடாது தடைபோட்டு வந்தததால், இந்தப் பிரச்சினையில் இருந்து விடுவிக்கும் வகையில், தொடர்ந்தும் அவர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதற்காக, தவிசாளரை இராஜினாமா செய்யுமாறு கோரியபொழுது, தான் எவ்விதமான தவறும் இழைக்காத நிலையில் தான் ஏன் இராஜினாமா செய்யவேண்டுமென்றும் குறிப்பிட்டு அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டிருந்தார்.
எனவே தவிசாளர் தான் பதவி விலகமாட்டேன். என எமக்கு கூறிவிட்டார்.
ஆனால் இந்த விடயத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கத் தவறியதால், நாம் அதனைச் சட்ட ரீதியாக அணுகி வல்வெட்டித்துறை நகரசபையைக் கலைக்கும் முடிவுக்கு வந்தோம்;
என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கம் அளித்தார்.
அதற்கமைய தவிசாளரில் எவ்வித ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களும் இல்லாத போதும், சபையில் ஒத்துழைப் பின்மையால், இந்தப் பிரச்சினைக்கு முடிவுகாணும் வகையில், நகர சபை ஜனவரி முதலாம் திகதியில் இருந்து வர்த்தமானி மூலம், அறிவித்தல் கொடுக்கப்பட்டு, கலைக்கப்பட்டது” என்று முதலமைச்சர் கூறிய போது பிரச்சினையைக் கிளறிக் கொண்டிருந்த சிவாஜிலிங்கமும் சிவஞானமும் மௌனமாக இருந்து விட்டனர்.
வல்வெட்டித்துறை நகரசபை தொடர்ந்து இயங்க முடியாமல் கலைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதற்கு தமிழரசுக்கட்சியும் அதன் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசாவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் சிவாஜிலிங்கத்தையும் மாவை சேனாதிராசா இணைத்திருந்தார்.
அந்த நேரத்தில் சிவாஜிலிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் அவர் சார்ந்த டெலோ கட்சியிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு மாறாக 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டதை தொடர்ந்து அவர் டெலோ கட்சியிலிருந்து விலகப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் அவர் விலக்கப்பட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் தனியாகவே போட்டியிட்டனர்.
இந்நிலையில் டெலோவிலிருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருந்த சிவாஜிங்கத்தை வல்வெட்டித்துறை நகரசபை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் மாவை சேனாதிராசா இணைத்திருந்தார்.
சிவாஜிங்கம் டெலோவை சேர்ந்தவர். டெலோ அவரை தனது கட்சியிலிருந்து நீக்கியிருந்த வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டு கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் குழப்பும் வகையில் டெலோவுக்கு தெரியாமலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இணைத்து கொள்ளப்பட்ட விடயம் அப்போது விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது.
சிவாஜிலிங்கம் குழப்பவாதி என தெரிந்தும் வானத்தால் போன சனியனை ஏணி வைச்சு இறக்கியது போல மாவை சேனாதிராசா டெலோவுக்கு தெரியாமலே வல்வெட்டித்துறை நகரசபையின் வேட்பாளர் பட்டியலில் இணைத்து கொண்டார்.
வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் பதவியில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த குலநாயகமும் சிவாஜிலிங்கமும் இலக்கு வைத்திருந்தனர். இதனால் இருவரும் தலைவர் பதவியை பங்கு போட்டு கொள்வது என்ற இரகசிய திட்டத்துடன் தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆனால் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை. வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சில் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற அனந்தராஜ் அவர்களும் அத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.
அத்தேர்தலில் கூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர்களே நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புக்கு அமைய வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் கூடிய விருப்பு வாக்கு பெற்ற அனந்தராஜ் நகரசபை தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் தனக்கே நகரசபை தலைவர் பதவி தர வேண்டும். அப்படி தராவிட்டால் நகரசபையை இயங்க விடமாட்டேன் என அப்போது சிவாஜிலிங்கம் கூறியிருந்தார்.
அன்றிலிருந்து நகரசபை தலைவர் பதவியை இலக்கு வைத்து சிவாஜிலிங்கம் மற்றும் ஏனைய தமிழரசுக்கட்சி உறுப்பினர்களான குலநாயகம், சதீஷ் போன்றவர்கள் நகரசபை தலைவர் அனந்தராஜிற்கு நெருக்கடியை கொடுத்து வந்தனர்.
சிவாஜிலிங்கத்தை தமக்கு தெரியாமல் வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் மாவை சேனாதிராசா போட்டியிட வைத்த பின்னர் டெலோ தனது கட்சியுடன் சிவாஜிலிங்கத்தை சேர்த்து கொண்டது.
வடமாகாணசபை தேர்தலில் டெலோவின் சார்பில் சிவாஜிலிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பட்டியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனாலும் சிவாஜிலிங்கத்திற்கு பின்னர் நகரசபை உறுப்பினர் குலநாயகமும் நகரசபை உபதலைவர் சதீசும் சிவாஜிலிங்கத்தின் வழியில் வல்வெட்டித்துறை நகரசபையை இயக்க விடாது குழப்பங்களில் ஈடுபட்டு வந்தனர். தமக்கே நகரசபை தலைவர் பதவி தர வேண்டும் இல்லையேல் நகரசபையை இயங்க விடமாட்டோம் என கங்கணம் கட்டி செயற்பட்டனர்.
நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. வடமாகாணசபையால் விசாரணை குழுவும் நியமிக்கப்பட்டது. இந்த விசாரணைகளில் நகரசபை தலைவர் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என்பதும் பதவிப்போட்டிக்கான சண்டையினாலேயே இச்சபையில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதும் தெரியவந்தது.
இந்த விடயத்தில் தமிழரசுக்கட்சி தலைமை அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்ப தலைமை சரியான முடிவுகளை எடுத்து இந்த பிரச்சினையை தீர்த்து வைத்திருக்க வேண்டும்.
குழப்பவாதிகளை நகரசபைக்குள் கொண்டு வந்தவர்கள் அதனை தீர்த்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்ய தவறியதால் ஒரு நகரசபை கூட நிர்வாகிக்க முடியாதவர்களா தனிநாடு கேட்கிறீர்கள் என்ற நியாயமான கேள்விக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.
வல்வெட்டித்துறை நகரசபையை கலைப்பதற்கு வழிகோலிய சிவாஜிலிங்கம் எப்படியாவது வடமாகாணசபையையும் கலைத்து விட வேண்டும் என்பதிலேயே குறியாக நிற்பது மிக வெளிப்படையாக தெரிகிறது.
எந்த ஒரு மாகாணசபையிலும் நடக்காத காரியங்கள் வடமாகாணசபை கூட்டத்தில் நடைபெற்றிருக்கின்றன. இலங்கையில் இருக்கும் 9 மாகாணசபைகளில் வடமாகாணசபையில் மட்டுமே ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரே மாகாணசபையின் செங்கோலை உடைத்து அடாவடித்தனம் செய்திருக்கிறார்.
அந்த பெருமைக்குரிய செயலை செய்தவர் வேறு யாரும் அல்ல. மாவை சேனாதிராசா ஏணிவைத்து இறக்கிய சிவாஜிலிங்கம் என்ற பெருமைக்குரியவர்தான்.
ஒரு சபையில் உறுப்பினர் ஒருவர் நடக்க வேண்டிய ஆகக்குறைந்த ஒழுக்கத்தையாவது கற்றுக்கொள்வது அவசியமாகும். சபையில் வைக்கப்பட்டிருக்கும் செங்கோல் என்பது அந்த சபையின் ஒட்டுமொத்த ஆளுமையாகும். அந்த மாகாணத்தின் ஜனநாயக காவலாகவும் அந்த செங்கோல் கருதப்படுகிறது.
செங்கோலை உடைத்ததன் மூலம் மக்களின் வரிப்பணத்திற்கே சிவாஜிலிங்கம் நஷ்டம் ஏற்படுத்தியிருந்தார். அவர் மீது ஏன் டெலோ இயக்கம் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவில்லை.
அது போல வடமாகாணசபையும் செங்கோலை உடைத்து சபைக்கு நஷ்டம் ஏற்படுத்திய சிவாஜிலிங்கத்தின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை.
அதேபோன்று இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அனந்தி சசிதரனை கூட மாவை சேனாதிராசாவே தமிழரசுக்கட்சியில் இணைத்து கொண்டார்.
விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலனின் மனைவி என்ற தகுதியை தவிர வேறு எந்த தகுதியை வைத்து மாவை சேனாதிராசா அவரை தமிழரசுக்கட்சியில் சேர்த்து கொண்டார் என்பதை அவர்தான் தெளிவு படுத்த வேண்டும்.
எப்படி குழப்பவாதியாக காணப்படும் சிவாஜிலிங்கத்தை டெலோ கட்சியிலிருந்து நீக்கி வைத்திருந்த நிலையில் ஏணிவைத்து இறக்கி தமிழரசு கட்சிக்குள் மாவை சேனாதிராசா கொண்டு வந்தாரோ அது போலவே வானத்தால் போன ஏதோ ஒன்றை ஏணி வைத்து இறக்கியதை போல அனந்தியை தனது கட்சியில் சேர்த்து கொண்டார்.
கட்சியில் இணைத்து ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் போது அவர் கட்சி கொள்கைக்கு கட்டுப்பட்டு நடக்க கூடியவரா அவரின் கடந்த கால வரலாறு என்ன என்பதை ஆழமாக ஆராயாமல் செயற்பட்டால் கட்சியின் தீர்மானங்களை மதிக்காமல் இடறிச்செல்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகரிக்கும்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இலக்கை கொண்டு செயற்பட்ட அனந்தி அந்த வாய்ப்பை தற்போது இழந்துள்ளார் என்பதே யதார்த்தம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் வேட்பாளர் பட்டியலிலேயே அனந்தி போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
இவர்களை போட்டியிட வைக்க வேண்டும் என்பதில் வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் என தம்மை கூறிக்கொள்ளும் சிலர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.
இதற்காக வெளிநாடுகளில் நிதி சேகரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் காங்கிரஷ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெருந்தொகையான பணத்தை வெளிநாடுகளில் உள்ள புலிகள் என சொல்லப்படுபவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர்களால் வெற்றிபெறமுடியவில்லை.
இம்முறையும் அவர்கள் அந்த முயற்சியை எடுத்திருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவது என்பது ஜனநாயக உரிமை. அவர்களின் தலைவிதியை தீர்மானிப்பது மக்கள்தான்.
ஆனால் தனிநாடு கேட்டு போராடும் வெளிநாடுகளில் உள்ள புலிகளும் அனந்தி போன்றவர்களும் ஒற்றைஆட்சியின் கீழ் உள்ள பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என ஏன் துடிக்கிறார்கள்?