ரத்னலங்கா மற்றும் அவன்காட் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது யாரென்ற கேள்விக்கு அடுத்துவரும் வாரங்களில் பதில் வெளியாகும் அது தொடர்பான விசாரணை அறிக்கை மூலம் தெரியவரும் என தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, இந்த விடயத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரைக் கைதுசெய்யத் தயங்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக அங்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பலாலி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்ற தேநீர் விருந்து நிகழ்வின் போது ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது;

ரத்னலங்கா மற்றும் அவன்காட் ஆகிய பாதுகாப்பு நிறுவனங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்துவரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது யார்? பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்ட ரத்னலங்கா நிறுவனத்தின் மூலம் சம்பாதித்த பணத்துக்கு என்ன நடந்தது? என்பன இதன்மூலம் தெரியவரும்.

இந்த விடயமானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இந்த விடயம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபயவை கைது செய்வீர்களா? எனக் கேட்டப் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தெரிவிக்கையில்;

ஆம் அவர் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் எவ்வித பதவி’ தராதரத்தையும் பார்க்காது கைதுசெய்வோம் என்றார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு மக்கள் ஆணைக்கு முரணானது’

images2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்திருந்ததையும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் அரசாங்கக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருந்த முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் வேட்பாளரையே ஆதரித்தது என்றும் அவர் கூறினார்.

இந்த சூழ்நிலையில், மீண்டும் அரசாங்கக் கூட்டணியுடன் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைத்துள்ளதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகின்றது என்றார் சம்பந்தர்.

அரசாங்கக் கூட்டணியிலும் பார்க்க 6 ஆயிரத்து 100 வாக்குகளையே குறைவாகப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை வென்றிருந்ததாகக் கூறிய சம்பந்தன், தங்களை விட 61 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையே வென்றிருந்தது என்றும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 2 மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முதலிடத்தைக் கைப்பற்றியிருந்ததாகவும் அக்கட்சியின் தலைவர் கூறினார்.

எந்தவொரு மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply