பிரேசிலியா: நோவா மட்டம் பொது சிறைச்சாலை பிரேசில் நாட்டின் குவியாபா நகர் அருகே உள்ளது. இச்சிறைக்கு போலீஸ் போல கவர்ச்சியான உடை அணிந்த 3 பெண்கள் வந்தனர்.
பெண்களின் கவர்ச்சி உடையில் கிறங்கிய சிறை வார்டன்கள் சபலப்பட்டனர். வந்த மூன்று பெண்களும் திட்டமிட்டு வார்டன்களை வசீகர பேச்சால் மயக்க ஆரம்பித்தனர். அப்போது வார்டன்களுக்கு விஸ்கியையும் அப்பெண்கள் சுவைக்க தந்துள்ளனர்.
கவர்ச்சி ஏரியில் மூழ்கிய வார்டன்களோ விஸ்கி தானே என்று குடிக்க ஆரம்பித்தனர். ஆனால் அதில் போதை மருந்துகள் கலந்திருந்தது அவர்களுக்கு தெரியாது.
சிறிது நேரத்தில் மூன்று வார்டன்களும் ஒருவர் பின் ஒருவர் மயக்கமடைய, மூன்று பெண்களும் வார்டன்கள் அணிந்திருந்த ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியதுடன் அவர்களின் கைவிலங்கு பூட்டினர்.
பின்னர் வார்டன்களிடமிருந்த சிறை அறைகளின் சாவியை எடுத்தனர். சாவியின் மூலம் சிறையை திறந்து 28 கைதிகளை விடுவித்தனர்.
சிறையின் முதன்மை கதவு வழியாக வெகு சாவகாசமாக கைதிகளும் வெளியேறினர். அப்போது சிறைக்குள் இருந்த துப்பாக்கிகளையும் அவர்கள் எடுத்துச்சென்றனர்.
சில நிமிடங்களில் கைதிகள் தப்பியது குறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மயங்கி கிடந்த வார்டன்களின் விலங்குகளை அவிழ்த்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தப்பி சென்ற கைதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதில் 8 கைதிகளை பிடித்து மீண்டும் சிறையிலடைத்தனர். மீதமுள்ள 20 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தீவிர விசாரணையில் குதித்த போலீசார் எதற்காக கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என கண்டறிந்தனர். அதாவது சிறையிலிருந்த தப்பிய புருனோ அமோரிம் என்ற கைதி மூன்று பெண்களில் ஒருவரின் காதலன் என்பது தெரிந்தது.
அவன் வகுத்து கொடுத்த திட்டப்படி இச்செயல் நடந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். தற்போது அவனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சபலத்தில் சிக்கி கைதிகளை கோட்டை விட்ட வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.