ஸ்ரீரங்கத்து தேர்தல் நடந்து முடிந்து, வெற்றியின் பின்புலத்தை நிரூபித்து உள்ளது. மூன்று நீதிமன்றங்களையும், பதினான்கு நீதிபதிகளையும், எண்ணற்ற அரசு வழக்கறிஞர்களையும், கணக்கற்ற வாய்தாக்களையும் தாண்டி வானளாவி நின்ற கோப்புகளையும், ஏராளமான குற்றச்சாட்டுக்களையும், தாராளமான விமர்சனங்களையும் தாண்டி சட்டத்தின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்ட பின் ‘வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்று வெளிவந்த’ பின் நடந்த முதல் தேர்தல் இது.
பிரசாரத்தில் கலந்து கொள்ளாமல் பின்னால் இருந்து ஆசிர்வதித்தாலே போதும் வெற்றி நிச்ச யம் என்பதினை உறுதி செய்த தேர்தல் இது.
தனது ரத கஜ துரக பதாதிகள் துணையோடு ‘ஜெயம் என்றால் ஜெயா’ என்று சொல்லும் அளவுக்கு அரசியல் பாதையில் பயணித்து வரும் பெண்.
இளவயதிலேயே சினிமாவில் கொடிகட்டி பறந்து அரசியலில் தனக்கென இடம் பிடித்தவர் இன்று ஸ்ரீரங்கத்து தேவதையாகி விட்டார்.
அறுபதுகளில் காலம் சென்ற காமராஜர் படுத்துக் கொண்டே ஜெயிப்போம் என்ற சொல் பொய்த்தது. ஆனால் ’வீட்டுக்குள் இருந்து கொண்டே தன் விரல் காட்டும் இடத்தில் வோட்டுக்கள் பாயும் என்ற புதிய சரித்திரம் படைத்தார்.
எம்.ஜி.ஆர். 1984 உடல் நலக் குறைவால் அமெரிக்க புரூக்லின் மருத்துவமனையில் இருந்து கொண்டே முதல்வரானார். அதேபோல் தேர்தலில் வீட்டுக்குள் இருந்து கொண்டே தான் காட்டிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்தார் ஜெ.
நீதிமன்றம் யாரையும் சந்திக்க கூடாதென்று நிபந்தனையுடன் ஜாமின் தந்த போதும், மத்திய அமைச்சர் வலிய வந்து ’ஜெ’யின் இல்லத்திலேயே சந்தித்தது விந்தை. சொல்வாக்கும், செல்வாக்கும் செல்விக்குப் புதிதல்ல.
அவமானம், வலி, தோல்வி, அலட்சியம் எதுவுமே அவருக்குப் புதிதல்ல.
ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஆண்களின் அகங்காரம், அதிகாரம், அடக்குமுறை, அலட்சியம், ஆக்கிரமிப்பு இருப்பதற்கு உதாரணம் ஜெயின் அரசியல் வெற்றி.
ஐந்நூறு கோடி ரூபா ஊழல் குற்றச்சாட்டு ஆட்டம் காணுவதை உணரமுடிகிறது. அதன் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காமல் ஜெ என்ற ஜெயா, ஜெய், லில்லி பல பெயருக்கு சொந்தக்காரரான செல்வி எண்பதுகளில் அண்ணி.
அதற்கு முன் பலருக்கு கனவுக் கன்னி. ஜெயலலிதாவின் ஜெயத்திற்கு பின்னால் உள்ள வரலாற்றை அலசும் முயற்சி இது.
ஒவ்வொரு பெண்ணு க்கும் இருக்க வேண்டிய உறுதி உணரப்படவேண்டும். கொட்டிக் கொட்டியே குளவியானது போல பெண் என்ற காரணத்தால் அவரைக் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் நடத்திய காரணத்தால் தான் இந்த வித்து நிமிர்ந்து விருட்சமானது.
1948 இல் பெப்ரவரி 24 அன்று ஜெய ராம் வேதா தம்பதிகளுக்குப் பிறந்த கோமளவல்லி என்ற ஜெயலலிதா. நடுத்தர வர்க் கத்து பிராமணக் குடும்பத்தைச் சார்ந்த வர். தாய் இவரது உயிர். கர்நாடக அரண்மனை வாசிகளின் குடும்பத்தில் பிறந்தவர்.
விமானப் பணிப்பெண்ணாக இருந்த சித்தி அம்புஜா – வித்யாவதி என்ற பெயரு டன் சினிமாவுக்குள் நுழைந்தார்.வாய்ப்பு கதவை தட்டிய போது தாய் வேதாவும் சந்தியா ஆக மாறினார்.
ஒரு நாள் படப்பிடிப்பின் போது வீட்டில் தனிமை போரடிக்க சிறுமி அம்மு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே சென்றாள்.
அங்கு வரவேண்டிய குழந்தை நட்சத்திரம் வராத காரணத்தால் அவசர அடியில் அம்மு குட்டி பார்வதியாக நடிக்க வேண்டி வந்தது. அம்மு முகத்தில் முதல் அரிதாரம் ஏறியது. படம் “ ஸ்ரீ சைல மகாத்மியம்.”
பின் ஒரு நாள் திரு மயிலை ரசிக ரஞ்சனி சபாவில் பல திரைப்பட பிரபலங்கள் மத்தியில் அம்முவின் நடன அரங்கேற்றம் நிகழ்ந்தது. விழாவுக்கு புகழில் இருந்த சிவாஜி கணேசன் தலைமை.
வாழ்த்தும் போது அம்மு பிற்காலத்தில் நடிக்க வருவாள் பெரும் புகழ் பெறுவாள் என்று வாழ்த்திப் பேசியது பின்நாளில் உண்மை ஆயிற்று.
அம்மு என்ற பெயர் ‘அம்மா’வானது. ஜெயை இருவர் மட்டும் அம்மு என்றே அழைத்தனர். ஒன்று அவரது தாய், மற்றவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
திறமைகள்
வாசிப்பு இவருக்கு சுவாசிப்பு போன்றது. படிப்பில் முதலிடம், இசைக் கருவி களில் திறமை, ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்.
நடிப்பும், நடனமும் ஒரு காலத்தில் அவரது மூச்சாக இருந்திருக்கிறது. பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர்.
ஜெயின் ஞாபக சக்தி, ஆங்கிலப் புலமையும் பேச்சாற்றலில் நுனி நாக்கு ஆங்கிலம், புத்தி கூர்மை, எதையும் கிரகிக்கும் தன்மை, பிடிவாதமாக சாதிக்கும் குணம்.
அவரது இந்த அரசியல் வெற்றி ஒரே நாளில் வந்ததல்ல .வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு மிகுந்த அவமானம், வலி, போராட்டம் இவற்றுக்கு பின் தான் ”அம்மா” என்ற நிலை வந்தது.
ஜெ தனது நடிப்புத் தொழில், தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பல ஏமாற்றங்களை, ஆணாதிக்க அரசியல் சவுக்கடி காரணமாகச் சந்திக்க வேண்டி இருந்தது. வீழ்வதும் வீழ்ந்த பின் எழுவதும் நானே என்று பல முறை பா டம் சொன்னவர்.
“பெண்ணாகப் பிறந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, “இல்லை… இல்லவே இல்லை!” என்று மறுத்தார்.அப்படி இரும்பின் உறுதியுடன் வாழ்ந்த உருவகம் தான் ஜெயலலிதா!
அரசியல்
ஒரு காலத்தில் நடிகர் பாக்யராஜ் ‘அரசியலில் ஜெ ஒரு கத்துக்குட்டி, அரைவேக்காடு, எல்.கே.ஜி. என்று கேவலமாகப் பேசியவர், ஆனால் அவர் தன்னை கை கூப்பி வணங்கும் அளவுக்கு கொண்டு வருமளவுக்கு அரசியல் நடத்தினார் ஜெ.
எம்.ஜீ.ஆர். வழி நடத்தி அரசியலை முற் றாகக் கற்றுத் தரும் முன் மறைந்துவிட்ட பின் தானாக வளர்ந்து, தானாக வென்று, தானாக அரசியல் வாதியாக வாழ்ந்து கொண்டிருப்பது இவரது தனிச் சிறப்பா கும்.ஜெயின் ஆதரவாளர்களுக்கும் அவரது எதிரிகளுக்கும் பிடித்தது அவரது தைரியம் தான்.
இனிவரும் நாளில் அவரது அரசியல், சினிமா வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம்
வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யம்