ஜெ. வழக்கில் அரச வழக்கறிஞரின் வாதம் முறையாக நடைபெறாவிட்டால் அந்த பணியை நானே மேற்கொள்வேன்
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆதாரங்களுடன் வாதிட வேண்டும்.
இல்லையென்றால் அவரது பணியை நீதிமன்றமே செய்யும் என கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் வழக்கின் விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார் தனது இறுதி தொகுப்புரையில், வருமானத்துக்கு அதிகமாக 66.65 கோடி ரூபா சொத்துக் குவித்ததாக ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஆதாரத்துடன் நிரூபிக்கப் படவில்லை.
இதில் குற்றவாளிகளுக்கு சொந்தமான நிலம், கட்டிடங் கள், புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் ஆகியவை மதிப்பீடு செய்ததில் குளறுபடி நடந்துள்ளது.
அதேபோல ஜெயலலிதாவின் வீட்டில் இருந்த அலங்கார பொருட்கள்,வாகனங்கள் உள்ளிட்டவைகளின் மதிப்பீடுகளும் மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளன.
அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும், என வாதிட்டார்.
குற்றவாளிகள் நால்வர் தரப்பு இறுதிவாதமும் தனியார் நிறுவனங்களின் இறுதி வா தமும் நிறைவடைந்ததால் அரசு தரப்பு வாத த்தை தொடங்குமாறு அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு நீதிபதி உத்தர விட்டார்.
அதற்கு பவானி சிங், இறுதிவாதம் செய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனை நீதிபதி ஏற்கவில்லை.
இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதிவாதத்தை தொடங்கினார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்தது முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது உட்பட முக்கிய பணிகளை செய்த தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவின் (அரசு தரப்பு சாட்சி எண் 255) சுமார் 400 பக்க வாக்குமூலத்தை வாசித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீது எதன் அடிப்படையில் 66.65கோடி ரூபா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என வழக்கு தொடுக்கப்பட்டது? கட்டிடங்கள் மதிப்பு எவ்வளவு?
முடக்கப்பட்ட நகைகளின் மதிப்பு எவ்வளவு? வழக்கு காலத்துக்கு முன்பு அவரது சொத்து மதிப்பு எவ்வளவு? எதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பவானி சிங், “இது தொடர்பாக அனைத்து ஆவணங்களும், ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விரிவான தகவல்களை தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறைதான் கூற வேண்டும்”என்றார்.
இது தொடர்பில் நீதிபதி தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தத்திடம் கேட்டபோது. அவர் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்துள்ளார்.
அதற்கு நீதிபதி, “உங்களுடைய கல்வி தகுதி என்ன, ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்”என கேள்வி எழுப்பினார்.
மேலும் “அரசு வழக்கறிஞரான பவானி சிங் 66.65 கோடி ரூபா சொத்து மதிப்பை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு பைசாவுக்கும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
தக்க ஆதாரத்துடன் கணக்குக் காட்டி நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும். அரசு வழக்கறிஞர் ஆதாரத்துடன் வாதிடாவிட்டால் அவரது பணியை நீதிமன்றமே செய்யும்.
குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விபரம், அவற்றின் மதிப்பு உள்ளிட்ட விபரங்களை முறையாக ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் வாதிட வேண்டும்.
இல்லையென்றால் அரசு வழக் கறிஞரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.
மேலும், தீர்ப்பின் போது அரசு வழ க்கறிஞர் பவானி சிங்கின் செயற்பாடுகள் குறித்து கடும் தண்டனை தெரிவிப்பேன். அது உங்களது (பவானி சிங்) எதிர்காலத்தை பாதிக்கும் என்றார்.