கடற்புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் முருகேசு பகீரதி என்ற 41 வயது பெண்ணொருவரும் அவரது 8 வயதான மகளையும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், திங்கட்கிழமை (02) கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக வெளிநாட்டில் இருந்துகொண்டு நிதி சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த சுப்ரமணியம் ஜெயகணேசன் என்பவரின் மனைவியான இவர், இலங்கைக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, கட்டுநாயக்கா விமானநிலையத்தினூடாக பிரான்ஸ் நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையிலேயே, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1997ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவின் மகளிர் அணித் தலைவியாக இவர் கடமையாற்றியுள்ளார் என்றும் 2005ஆம் ஆண்டில் இவர், பிரான்ஸ§க்குச் சென்றுள்ளார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ள இவர், தர்மபுரம், பரந்தன் பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில், மீண்டும் பிரான்ஸ் செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இவரை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜர்செய்த போது, அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் பொலிஸ் தரப்பு கூறியது.
இதேவேளை, அவரது 8 வயது மகளும் பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், பகீரதிக்கும் ஜெயகணேசுக்கும் இடையில் விவாகரத்து ஏற்பட்டு தற்போது பகிரதி தனது மகளுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும் மகளின் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள தனது பெற்றோரை பார்வையிட வந்து மீண்டும் பிரான்ஸ் செல்ல இருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாயைப் பார்க்க இலங்கை சென்ற பகீரதி தடுப்புக்காவலில்
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.
2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை சென்று கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே நேற்று திங்கட்கிழமை கொழும்பு விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்களுக்கு காவல்துறையினர் விளக்கமறியலில் வைத்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பகீரதியின் சகோதரர் முருகேசு வேலவன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியிருந்த பகீரதி, அதன் பின்னர் அந்த இயக்கத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை என்றும் வேலவன் கூறினார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமது தாயையும் தந்தையையும் பார்த்துச் செல்வதற்காக இலங்கை வந்திருந்தபோதே, பகீரதி கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸில் பிறந்த அவரது 8 வயது மகளும் பகீரதியுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், யுத்தம் இல்லாத சூழ்நிலையிலும் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என்ற நம்பிக்கையிலேயே தனது சகோதரி இலங்கை வந்திருந்ததாகவும் வேலவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும், பகீரதி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பல்வேறு தாக்குதல்களை முன்னின்று நடத்தியுள்ளதாகவும் அவருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை காவல்துறை கூறியுள்ளது.
பகீரதியின் சகோதரர் செவ்வி
விமான நிலையத்தில் கைதான பகீரதி மீது ‘வழக்கு தொடரப்படும்’
பிரான்ஸ் திரும்பும் வழியில் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட முருகேசு பகீரதி என்ற தாய் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரான்ஸிலிருந்து கடந்த மாதம் இலங்கை சென்றிருந்த பகீரதியும் அவரது 8 வயது மகளும் கிளிநொச்சியில் உள்ள பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் விடுமுறையை கழித்துவிட்டு திரும்பும் வழியிலேயே நேற்று திங்கட்கிழமை விமானநிலையத்தில் தடுக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பகீரதியை மூன்று நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்துவருவதாக காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் மூன்று ஆண்டுகள் இருந்துள்ள பகீரதி 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் செல்ல முன்னர் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தாக காவல்துறை குற்றம் சாட்டுகின்றது.
‘உண்மையில் இந்தப் பெண் 1997-ம் ஆண்டிலிருந்து 2000-ம் ஆண்டுவரை கடற்புலிகளின் தலைவியாக இருந்துள்ளார். அவர் 2005-ம் ஆண்டில் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்.
அவர் அவரது காலப்பகுதியில் இலங்கை கடற்படை மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளதாக தெரியவருகின்றது’ என்றார் அஜித் ரோஹண.
‘அவ்வாறே, தற்கொலை குண்டுதாரிப் பெண்களை தயார்படுத்தும் திட்டங்களிலும் அவர் பங்கெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் பற்றிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன.
இந்த சந்தர்ப்பத்தில் அவர் இலங்கை வந்துள்ளதாகவும் தெரியவந்தது. அவர் இலங்கையிலிருந்து வெளியேறபோன சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்’ என்றும் கூறினார் காவல்துறை பேச்சாளர்.
‘இப்போது எல்டிடி பிரச்சனை இல்லை. ஆனால் இலங்கையில் கடந்த காலத்தில் யாராவது குண்டுத் தாக்குதல் அல்லது கொலைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு 20 ஆண்டுகாலத்திற்கு எங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது’ என்றும் கூறினார் அஜித் ரோஹண.
பகீரதி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியங்கள் இருப்பதாகவும் அவற்றை எதிர்காலத்தில் வெளிப்படுத்துவதாகவும் கூறிய காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண, விசாரணைகளின் முடிவில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
<iframe width=”400″ height=”500″ frameborder=”0″ src=”http://emp.bbc.co.uk/emp/embed/smpEmbed.html?playlist=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2Ftamil%2Fmeta%2Fdps%2F2015%2F03%2Femp%2F150303_bahirathi_arrest_police.emp.xml&title=BBCTamil.com&product=news&lang=ta”></iframe>