வாஷுங்டன், மார்ச்: ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்காவை பழிவாங்குவதற்காக வாஷிங்டன் நகரின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட கிரிஸ்டபோர் லீ கார்னெல் என்பவனை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க உளவுப்படையினர் கைது செய்தனர்.

தற்போது கென்ட்டுக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த தீவிரவாதியின் மீது கோர்ட்டில் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சிறையில் இருக்கும் அவனிடம் ஓஹியோ மாநிலத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல் ஒன்று பேட்டி கண்டது.

நீங்கள் போலீசாரிடம் பிடிபடாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்ற நிருபரின் கேள்விக்கு சற்றும் தயங்காமல், ”துப்பாக்கியை எடுத்துச் சென்று ஒபாமாவின் தலையில் வைத்து சுட்டுக் கொன்றிருப்பேன்.

பாராளுமன்றத்தில் இருக்கும் சில எம்.பி.க்களையும் சுட்டுக் தள்ளியிருப்பேன். இஸ்ரேல் தூதரகத்தின் மீதும் மேலும் பல கட்டிடங்களின் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பேன்.

அவர்கள் என்னை தீவிரவாதியென்று கூறலாம். ஆனால், அமெரிக்க படையினரும் தீவிரவாதிகள் தான். அவர்கள் எங்கள் பூமிக்கு வந்து செல்வங்களை எல்லாம் கொள்ளையடிப்பதுடன் எங்கள் மக்களை கொல்கிறார்கள். எங்கள் பெண்களை கற்பழிக்கிறார்கள்.

நீங்கள் நினைப்பதை விட நாங்கள் சக்தி வாய்ந்த இயக்கமாக உருவாகியுள்ளோம். என்னைப் போல் பலர் ஓஹியோவில் மட்டும் அல்ல, அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் பரவலாக இருக்கின்றனர்” என்று கூறியுள்ளான்.

இந்த பேட்டியின் ஒருபகுதி நேற்று (வெள்ளிக்கிழமை) ஒளிபரப்பாகி அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன் நகரின் மீது பைப் குண்டுகள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கிரிஸ்டபோர் லீ கார்னெல், M-15 ரக துப்பாக்கிகள் மற்றும் 600 சுற்று தோட்டாக்களுடன் கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி ஓஹியோ மாநிலத்தில் கைது செய்யப்பட்டான்.

அரசு கட்டிடங்கள் மற்றும் அதிகாரிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவன் மீது வழக்கு நடைபெற்று வருகின்றது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்ற நிலையில் அவன் இவ்வாறு பேட்டியளித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply