இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு இடையில் இன்று காலை விசேட சந்திப்பு இடம்பெற்றதுடன் இதன்போது முக்கிய நான்கு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

1.இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும் போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம்.2.சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும் இடையில் உதவி செய்துகொள்வதற்கான ஒப்பந்தம்.

3.இளைஞர் முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம்.

4.ரவிநாத் தாகூர் மன்றத்தை ருகுணு பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஆகிய  நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு 28 வருடங்களின் பின்னர் விஜயம் செய்தமை பெருமையளிப்பதாகக் குறிப்பிட்டார்.

இறுதியாக இந்திய பிரதமர் ஒருவர் அரசுமுறை பயணமாக 1987 ஆம் ஆண்டே இலங்கை வந்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தனக்கு இலங்கை அளித்த வரவேற்பு பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் திருகோணமலையை, பிராந்தியத்தின் எரிபொருள் மத்திய நிலையமாக மாற்ற இந்தியா உதவும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், இலங்கையில் பௌத்தம் வந்த நாளில் இருந்தே தொடர்புள்ளது.

மீனவர்களின் பிரச்சினைக்கு இருத்தரப்பிலும் நிரந்தர சுமூகமான தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இலங்கை – இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்படும் என்றும் இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் உதவுமென்றும் சம்பூர் அனல்மின் நிலையம் இலங்கையின் மின்சக்தி தேவைக்கு உதவியாக இருக்கும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இலங்கை – இந்திய உறவின் இதயம் மக்கள் என்றும் அதனால் ராமர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் திகதி இராமாயண ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, ஜனநாயகம் பெற்று வாழ வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும் அதற்கு 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இவ்விடயங்களில் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply