நம்பிக்கையான கட்டளைச் சங்கிலியை தயார்படுத்தல்
கடந்த காலங்களில் இராணுவ பதவி உயர்வுகள் சேவை மூப்பின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வந்தன. எனினும் ஜெனரல் பொன்சேகா தனது மூத்த அதிகாரிகளை கவனமாகத் தெரிவு செய்தார், கட்டளைகளை விளங்கிக்கொண்டு அவற்றை நிறைவேற்றக் கூடியவர்களையும் மற்றும் நீண்டகாலத்துக்கு முன்னணி நிலைகளில் தரித்து நிற்க இயலுமானவர்களையும் அடையாளம் கண்டு அவர்களைத் தெரிவு செய்தார்.
“நான் சேவை மூப்புக்கு எதிராக செயல்பட்டேன். களத்தில் அனுபவம் உள்ளவர்களையே நான் தெரிவு செய்தேன் அதனால் அவர்கள் எனது அறிவுறுத்தல்களை எளிதில் விளங்கிக் கொள்ள இயலுமாக இருந்தது.
அவர்களின் குணாதிசயங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த மட்டில் அவர்கள் அதில் சிறந்தவர்களாக இருந்திருக்க முடியாது.
சில சமயங்களில் அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் மிகவும் நெருக்கத்துடன் இருக்கவில்லை, ஆனால் இதை ஒரு அனுகூலமாகவே நான் பார்த்தேன்” என்று அவர் சொன்னார்.
போரின் முக்கிய கட்டத்தில் தங்கள் குடும்பங்களை விட்டு நீண்ட காலத்துக்கு பிரிந்திருக்கக் கூடியவர்களை ஜெனரல்களாகவும், கள அதிகாரிகளாகவும் நியமிப்பது தனக்கு நன்மை பயக்கும் என்பதை அவர் விரைவிலேயே உணர்ந்தார்.
அவர்களின் தனிப்பட்ட குறைபாடுகளை மறந்து இராணுவம் எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தங்களுக்கு சாதகமான சிறந்த முடிவை மேற்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
இதற்கிடையில் இராணுவ மற்றும் காவல்துறை உளவுப் பிரிவுகள் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டு திறமையான நிலையில் இருந்தார்கள், ஆனால் அவர்கள் யுத்த முனையின் கள நிலவரங்களை நன்கு அறியாதவர்களாக இருப்பதால் களத் தளபதிகளுக்கு பயனுள்ள தகவல்களை வழங்குவதற்கு இவர்களாலும் இயலாமல் இருக்கும் என்று ஜெனரல் பொன்சேகா கண்டு கொண்டார்.
ஜெனரல் உடனடியாகவே யுத்தத்தில் பழக்கப்பட்டு நன்கு அனுபவம் பெற்ற சிலரை உளவுப் பிரின் தலைவர்களாக நியமித்தார், அதன் மூலம் இராணுவம் அதிகம் பயனுள்ள புலனாய்வு தகவல்களைப் பெறமுடிந்தது.
உண்மையில்,இராணுவ உளவுப் பிரிவுகள் முக்கியமான தகவல்களை வழங்கியதால்தான், எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் பிரிவு தலைவர் எஸ். தமிழ்செல்வனை விமானப் படையினரால் வெற்றிகரமாக இலக்கு வைக்க முடிந்தது மற்றும் கடற்படையினரால் எல்.ரீ.ரீ.ஈ யின் ஏழு கப்பல்களை அழிக்கவும் முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இராணுவம் 25 வீரர்களைக் கொண்ட படையணிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. எனினும் அவர்களைப் பொறுப்பேற்பதற்கான லெப்ரினன்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. தனக்கு, களத்தில் படையணிகளை கட்டுப்பாட்டில் வைத்து விதிவிலக்காக செயற்படுவதற்கு 2,000 கோப்ரல்கள் மற்றும் சார்ஜன்ட்களை நியமனம் செய்யவேண்டியிருந்ததாக ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டார்.
இராணுவ வரிசை மிகவும் வேகமாக முன்னேறியதால், அதற்குப் பின்னால் ஒரு வெற்றிடம் உருவாக்கப் படுவதையும், படைகள் எதிரிகளின் பிரதேசத்துக்குள் ஆழமாக உட் செல்லும்போது, மீளக் கைப்பற்றப்பட்ட பகுதிகளை பாதுகாப்பதற்கு போதுமான வீரர்கள் இல்லாமலிருப்பதையும் அவர் அவதானித்தார்.
காயமடைந்த வீரர்களை இந்தப் பகுதிகளை பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்ளும் ஒரு கடினமான தெரிவை தான் மேற்கொள்ளவேண்டி இருந்ததாக ஜெனரல் தெரிவித்தார்.
சுமார் 10,000 வரையான காயமடைந்த வீரர்கள் இந்த முடிவின்படி ஈடுபடுத்தப் பட்டார்கள். முன்னணி பாதுகாப்பு முனைகளுக்கு தேவையான வழங்கல் பாதைகளை பாதுகாக்க இந்த வீரர்கள் உதவியதால் இந்த நகர்வு மிகவும் இன்றிமையாத ஒன்றாக அமைந்தது.
ஒரு நோக்கத்தை உருவாக்குவதுடன் ஒரு காலக்கெடுவை பின்பற்றுதல்
ஜெனரல் பொன்சேகாவின் கருத்துப்படி, கடந்த காலங்களில் நாட்டில் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு இராணுவ தளபதிகளிடம் யோசனைகள் இருந்தன, ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு ஏற்ற ஒத்திசைவான திட்டங்கள் அவர்களிடம் ஒருபோதும் இருக்கவில்லை.
மாறாக அவர்களது வலிமை முழுவதும் மீளக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பாதுகாப்பதிலும் மற்றும் ஏனைய பகுதிகளை தாக்குவதிலுமே முன்னிலைப் படுத்தப்பட்டது, ஒரு உண்மையான நோக்கமோ அல்லது அதற்கு அப்பால் செல்வதற்கான முயற்சியோ இருக்கவில்லை. ஜெனரல் பொன்சேகா இராணுவத்தின் பிற்போக்குத் தன்மை மாறவேண்டும் என்று சொல்கிறார்.
யுத்தத்தை ஒரு குறிப்பிட்ட நேர அட்டவணையான மூன்று வருடங்களுக்குள் முடிக்கவேண்டும் என்கிற தனது திட்டத்தை தான் செயலாக்க முனைந்ததாக அவர் தெரிவித்தார். எனினும் இராணுவத்தால் எல்.ரீ.ரீ.ஈயினை இரண்டு வருடங்கள் மற்றும் ஒன்பது மாதங்களுக்குள் தோற்கடிக்க முடிந்தது.
முன்னாள் இராணுவ தளபதி, தான் யுத்தகாலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை தோற்கடிக்கும் உறுதி மொழி என்பனவற்றுக்கு இடையில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த வாய்ப்புகள் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
“ஜனவரி 2007ல், இந்த யுத்தத்தை நடத்தும் பொறுப்பை நான் அடுத்த இராணுவ தளபதிக்கு வழங்க மாட்டேன் என மக்களுக்கு நான் ஒரு வாக்குறுதி வழங்கினேன்.
அந்த நேரத்தில் என்னிடம் திட்டங்கள் மற்றும் வளங்கள் இருக்கவில்லை மற்றும் இராணுவம் தயார் நிலையிலும் இருக்கவில்லை.
அதேபோல 2012ல் நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்தேன், அதேபோல அதையும் நிறைவேற்ற முடிந்தது” என்று அவர் சொன்னார்.
அவர் மேலும் அந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ காட்டிய பொறுமையின்மையையும் நினைவு கூர்ந்தார், முன்னாள் ஜனாதிபதி தொடர்ச்சியாக தளபதியிடம் ஒரு உடனடி விளைவைப் பெறுவதற்காக அவரது வியூகங்கள் மற்றும் அணுகுமுறைகள் பற்றி கேள்வி எழுப்பியவாறே இருந்தார்.
ஜெனரல் பொன்சேகா மேலும் வெளிப்படுத்தியது, முன்னாள் ஜனாதிபதி இராணுவத்திடம் 31 ஜனவரி முதல் 1 பெப்ரவரி 2009 வரையான இரண்டு நாட்கள் யுத்த நிறுத்தத்தை பிரகடனப் படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
ஜெனரல் பொன்சேகா சொல்வதின்படி, இந்த நேரத்தில் நந்திக்கடல் பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ அழிவுகரமான ஒரு எதிர்த்தாக்குதலை நடத்தி இராணுவத்தை ஐந்து கி.மீ வரை பின் நகர்த்தியதால் அது படைகளிடத்தில் ஒரு பேரழிவான எதிர்தாக்கத்தை ஏற்படுத்தியதாம்.
ஜெனரல் விளக்குவதின்படி இந்தப் பகுதிகளில் போரை திரும்ப ஆரம்பிக்க நீண்ட காலம் எடுத்த அதேவேளை இதன் விளைவாக சுமார் 500 வரையான வீரர்களின் உயிர்களையும் இழக்க நேர்ந்ததாம்.
“நான் நினைக்கிறேன் நாட்டின்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வெளிநாட்டவர்களை திருப்திப்படுத்த அவர் முயற்சித்திருக்கலாம்.
அன்றைய தினத்தில், எந்த விலை கொடுத்தாவது, எதிர்காலத்தில் எனது தலையோ போனாலும்கூட, நான் எனது யுத்த திட்டத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது என்று உணர்ந்து கொண்டேன்” என அவர் தெரிவித்தார்.
இறுதிக் கட்டங்கள்
ஒருக்கால் பயங்கரவாதிகள் 1,000×1,000 metres மீற்றர் பரப்பளவுக்குள் இறுதியாக சுற்றி வளைக்கப் பட்டதிற்கு ஒரு நாள் முன்னால்தான் இறுதி யுத்தம் ஆரம்பமானது, எல்.ரீ.ரீ.ஈ நந்திக்கடலேரியில் ஒரு இறுதித் தாக்குதலை அரங்கேற்றியது.
அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் இந்தப் பகுதியில் மூன்று பாதுகாப்பு அணிகளை நிறுவி விட்டதால் எல்.ரீ.ரீ.ஈயின் தாக்குதலை எளிதாக முறியடிக்க முடிந்தது.
“மறுநாள் காலை நாங்கள் சுமார் 100 பயங்கரவாதிகளின் இறந்த உடல்களை அந்த கடலேரியில் இருந்து சேகரித்தோம். நாங்கள் கணக்கில் எடுக்காத சில முன்னணி பயங்கரவாதிகள் இங்கே இறந்திருக்க கூடும் என நான் நினைக்கிறேன்” என அவர் சொன்னார்.
இறுதிக் கட்டங்களில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருமளவிலான மீட்பு நடவடிக்கைகள் பற்றி ஜெனரல் பொன்சேகா விளக்கினார்.
275,000 பொதுமக்கள் இராணுவ படைகளினால் மீட்கப் பட்டார்கள், அதேவேளை இராணுவம் பல இழப்புகளையும் சந்திக்க நேர்ந்தது, சில சந்தர்ப்பங்களில் வீரர்கள் பொதுமக்களின் இடையில் இருந்து கிளம்பும் துப்பாக்கிச் சூடுகளையும் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
“எல்.ரீ.ரீ.ஈ பொதுமக்களை எல்லா நேரத்திலும் தங்களை காக்கும் ஒரு தடுப்பாக வைத்திருந்தார்கள். இந்தக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட போதிலும், இராணுவம் எப்போதும் பொதுமக்களை காப்பதிலேயே கவனம் செலுத்தியது”.
போரின் இறுதிக் கட்டங்களில் நடந்த ஒரு செயற்பாட்டை ஜெனரல் பொன்சேகா தெளிவாக விபரித்தார், இரண்டாவது தாக்குதலற்ற வலயத்துள் எல்.ரீ.ரீ.ஈ ஊடுருவியதால் இராணுவம் எதிரியின் வரிசைக்கு பின்னாலிருந்து 115,000 பொதுமக்களை மீட்பதற்காக ஒரு செயற்பாட்டை திட்டமிட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது.
சுமார் 200 வீரர்கள் வரை இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டார்கள், வேறு தெரிவுகள் எதுவும் இல்லாததால் எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்துவதை அவர்கள் கட்டுப்படுத்திக் கொண்டார்கள் என அவர் தெரிவித்தார்;.
அவர் மேலும் உறுதிப்படுத்தியது மீட்பு நடவடிக்கையின்போது சரணடைந்த 12.000 எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு எதுவித தீங்கும் இழைக்காமல் புனர்வாழ்வு பெற்றுக் கொள்ள அனுப்பப் பட்டார்கள் என்று. ஜெனரல் பொன்சேகாவினால் தனது உரையின்போது வழங்கப்பட்ட தரவுகளின்படி, இறுதி ஈழப்போரின்போது சுமார் 5,200 இராணுவ துருப்புகள் கொல்லப்பட்ட அதேவேளை அவர்களால் 23,000 புலிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த தடவை கடற்படை மற்றும் விமானப்படைகளின் இழப்புகளுடன் ஒப்பிடுகையில் இராணுவம் அதிக இழப்புகளின் சுமைகளைத் தாங்கவேண்டி ஏற்பட்டது என்று முன்னாள் தளபதி வேகமாகச் சுட்டிக்காட்டினார்.
“சகலரும் பங்களிப்புச் செய்தார்கள் என்கிற உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். படைகள் மட்டுமன்றி பொதுமக்களும் பங்களிப்புச் செய்தார்கள்.
தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கும் மற்றும் நிரந்தரமாக ஊனமடைந்தவர்களுக்கும்தான் இந்தப் பெருமை எல்லாம் சேரவேண்டும், ஆனால் இந்த எண்ணிக்கையை பார்க்கும்போது போரின் இந்தச் சுமைகளை அதிகம் தாங்கியவர்கள் யார் மற்றும் அதிக பங்களிப்பைச் செய்தவர்கள் யார் என்று உங்களால் அறிய முடியும்” என்று அவர் சொன்னார்.
ஜெனரல் பொன்சேகா மேலும் தெரிவிக்கையில் தாங்கள் இழந்ததை போன்று இத்தனை வீரர்களை இழப்பது ஒன்றும் அத்தனை எளிதான விடயமல்ல, அத்தகைய இழப்புகளை தாங்கிக் கொள்ளத் தேவையான மனோவலிமையை விட கடினமானது எதுவுமில்லை என்றார்.
யுத்தத்துக்கான வரவு செலவை திட்டமிடல்
ஜெனரல் பொன்சேகா பொறுப்பேற்பதற்கு முன்பு, பாதுகாப்புக்கான வருடாந்த ஒதுக்கீடு சுமார் 80 மில்லியன் ரூபா. யுத்த நிறுத்தத்தின்போதும் அது அந்த அளவாகவே இருந்தது. மேலதிகமாக ஒரு 80,0000 துருப்புக்களுடன் கூட அதிகப்படியான ரூபா 2 மில்லியனுடன் அவரால் இராணுவத்தை சமாளிக்க கூடியதாக இருந்தது.
“நான் 308 கேப் ரக வாகனங்களை முன்னரங்க பகுதிகளுக்காகவும் மற்றும் சுமார் 100 குண்டு துளைக்காத ட்ரக் வாகனங்களையும், கொள்வனவு செய்தேன், தொன் கணக்கான ஆயுதங்களையும் உண்மையில் அவை கடனடிப்படிப்படையில் பெறப்பட்டவை,தொடர்பாடல் சாதனங்களையும் மற்றும் சுமார் 200 தள நிலையங்களையும் வாங்கினேன்.
ஆனால் அரசாங்கத்திடம் அதிக பணம் கேட்டு அவர்களுக்கு அதிக சுமைகளை நாங்கள் உருவாக்கவில்லை” என்று அவர் சொன்னார்.
குறைந்தளவு உபகரணங்கள் மற்றும் குறைந்தளவு ஆயுதங்கள் என்பனவற்றுடன் அதேயளவு பணம் முன்னைய வருடங்களில் செலவு செய்யப்பட்டது என்று சுட்டிக்காட்டிய அவர்,யுத்தம் முடிவடைந்ததின் பின்னரே நிலமை மோசமடைந்தது என்று மேலும் தெரிவித்தார்.
இறுதிக்கட்ட போரின்போது முன்னைய அரசாங்கம் இந்த தொகையை விட அதிக அளவை ஒதுக்கீடு செய்திருந்த போதிலும்கூட, உண்மை என்னவென்றால் புதிய ஆயுதங்களோ, வாகனங்களோ அல்லது மருத்துவ உபகரணங்களோ எதுவும் புதிதாக இராணுவத்துக்காக கொள்வனவு செய்யப்படவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
ஒரு இராணுவத்தை நிர்வகிக்கும் பணியினைப்பற்றி கூறுகையில் அது ஒரு விநியோக கனவு என்று விபரித்த ஜெனரல், தாக்குதலில் ஈடுபட்டுள்ள 50,000 துருப்புகளையும் அத்தோடு சேர்த்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள 120,000 துருப்புகள் மற்றும் சமாதான இடங்களில் உள்ள 30,000 துருப்புகளையும் நிருவகிப்பது எளிதான ஒன்றல்ல.
உணவு,மருத்துவ வசதிகள், மற்றும் ஆயுதங்களை வழங்குதல் போன்றவற்றை நிருவகிப்பது கடினமான ஒரு பணி என்பதை நிரூபித்தது.
எனினும் இராணுவம் இந்தச் சமயத்தில் எதையும் அலட்சியம் செய்யவில்லை, போரின் உச்சக் கட்டத்தின் போதும்கூட அது விளையாட்டில் சிறந்து விளங்கியது.
ஜெனரல் பொன்சேகாவின் கூற்றுப்படி இந்த விடயத்தில் மேற்கொண்ட துல்லியமான கவனஈர்ப்பும் மற்றும் தங்கள் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான இடைவிடாத முயற்சியுமே இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கியது.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்