எங்களால் முடியும் பெண்களால் முடியும் என்கிற தொனிப்பொருளில் ஓட்டோ ஓட்டும் பெண்களை சாரதிகளாக ஏற்போம் என்கிற விழிப்புணர்வு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு நகரில் பயிற்சி பெற்று, சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் இருக்கும் 20 பெண் சாரதிகள் கல்லடிப் பாலத்தின் அருகில் உள்ள திடலில் முச்சக்கர வண்டிகளை செலுத்தி டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி பிரதிநிதிகளிடம் திறமைகளைக் காட்டினர்.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட நிகழ்வில் இவர்களின் திறமையை ஏற்றுக் கொண்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் பிரதிநிதிகள் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான வேலைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
மட்டக்களப்பு நகரில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஒரேயொரு பெண் முச்சக்கரவண்டிச் சாரதி இருந்த நிலையில் தற்போது 20 பேர் உள்ளதாகவும் மேலும் பலர் பயிற்சிக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் சூரியா பெண்கள் அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.