யாழ்ப்பாணம், கரணவாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவரை திருமணம் செய்துகொண்ட 27 வயதுடைய சந்தேகநபரை, எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதவான் கறுப்பையா ஜீவராணி, செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டார்.
அத்துடன், மேற்படி சிறுமியை திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
சிறுமியை காதலித்து வந்த சந்தேகநபர், கடந்த ஜனவரி 03ஆம் திகதி, சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல்; தனது பெரிய தாயின் உதவியுடன் அச்சிறுமியை திருமணம் செய்து வவுனியாவில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர், நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஜனவரி 04ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இந்த திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சந்தேகநபரின் பெரிய தாயைக் கைது செய்த போது இந்நிலையில், அவரை பருத்தித்துறை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெரிய தாய் கைது செய்யப்பட்டதை அறிந்து, யாழ்ப்பாணம் வந்த சந்தேகநபரையும் சிறுமியையும் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்த நிலையில், சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.