லக்னோ அருகே உள்ள ஹத்ராஸ் சந்தைக்கு, மோட்டார் சைக்கிளில் வந்த இளம் ஜோடியை ஆறு பேர் கொண்ட கும்பல் மிரட்டி ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்றது.
இதில் ஒருவன் அந்த இளம்பெண் ஒருதலையாக காதலித்துள்ளான். அதற்கு மறுப்பு தெரிவித்து வேறொரு நபரை காதலித்த கோபத்தில் அடியாட்களுடன் அந்த பெண்ணையும், அவரது காதலரையும் தாக்கினர். அடி தாங்காமல் இருவரும் அலறினர்.
அடித்தவர்களின் காலை பிடித்து, விட்டு விடும்படி கெஞ்சினர். ஆனாலும் மனம் இறங்காத அந்த கும்பல் கூடுதலாக சில அடிகளைக் கொடுத்தே அவர்கள் இருவரையும் விடுவித்தனர்.
இந்த கொடூர சம்பவத்தை அந்த கும்பலை சேர்ந்த ஒருவன், மொபைல் போனில் படமெடுத்து, ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்டு உள்ளான்.
நடந்த சம்பவத்தை பற்றி பாதிக்கப்பட்ட பெண், வீட்டிலோ, வெளியிலோ மூச்சு விடவில்லை. ஆனால் ‘வாட்ஸ் அப்’பில் வெளியான படத்தைப் பார்த்த அவரது உறவினர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். ஆனாலும் முக்கிய குற்றவாளி தப்பி ஓடிவிட்டான்.
தன்னை காதலிக்க மறுத்த பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும், தாக்கி விட்டு தலைமறைவான முக்கிய குற்றவாளியை, போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.