பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான எல்லைப்பகுதியான காஸாவில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு 2 சிங்கக் குட்டிகளை விளையாட்டு தோழனாக வாங்கி தந்துள்ளது.
இங்குள்ள ரஃபா நகரில் வசிக்கும் பாலஸ்தீன அரசு ஊழியரான சயிட் எல்டின் அல்-ஜமால்(54) என்பவர் உள்ளூரில் உள்ள ஒரு வன விலங்கு காப்பகத்தில் இருந்து இந்த சிங்கக் குட்டிகளை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் உள்ள பேரன், பேத்திகளுடன் விளையாட விட்டிருக்கிறார்.
தற்போது இரண்டரை மாத குட்டிகளாக இருக்கும் இந்த சிங்கங்களிடம் இன்னும் சில நாட்களுக்கு மேல் குழந்தைகள் விளையாடி மகிழ முடியாது என கவலை தெரிவிக்கும் இவர் வளர, வளர சிங்கங்களுக்கு ரத்தவெறி ஏற்படுவது இயல்பானதுதான் என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார்.
நான்கு மாதங்களாகி விட்டால் இவை ஆபத்தானவை ஆகிவிடும். ஆறு மாதங்களாகி விட்டால் மிக, மிக ஆபத்தானவையாக மாறிவிடும். எனவே, இன்னும் ஒரு மாதத்தில் இந்த குட்டிகளை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைக்க முடிவு செய்துள்ளேன். காஸாவில் இருக்கும் யாராவது வாடகைக்கு கேட்டால் இவற்றை காட்சிப் பொருளாக வாடகைக்கு விடலாமா? என்று யோசித்து வருகிறேன் என இவர் கூறுகிறார்.