கிப்தின் லக்சார் ரயில் நிலையம் அருகில், பிளாட்பாரம் ஓரம் நாள் தவறாமல் காலை ஆறு மணி முதலே ஷூ பாலிஷ் போட வந்துவிடுகிறார் சிஸா அபு தாவு.

இதில் கிடைக்கும் வருமானத்தில் தனது பேரக்குழந்தைகளை  காப்பாற்றி வரும் இவர், 64 வயதான ஒரு பெண்.

ஆனால் கடந்த 43 வருடங்களாக அந்த பகுதியில் ஒரு ஆணாகத்தான் அறியப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த செய்தி.

குடும்ப வறுமை சூழ்நிலையில் தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான சிஸா அபு தாவு, ஒரு பெண் எந்நாட்டிலும், எந்த வயதிலும்,யாராலும் சீண்டப்படலாம் என்ற நிலையில், கடந்த 43 வருடங்களாக ஆண் வேடம் அணிந்து இந்த வேலையைச் செய்து வருகிறார்.

‘‘என்னுடைய 21 வது வயதில் எதிர்பாராதவிதமாக என் கணவர் இறந்துவிட்டார். குடும்பத்தில் வறுமை. எங்கள் குல வழக்கப்படி பெண்கள் வெளியில் செல்லக்கூடாது.

அதுவும் வேலைக்குச் செல்லவே கூடாது.  ஆனால் வாழ்ந்தாக வேண்டுமே. அதேசமயம் இன்னொருவரிடம் யாசித்து வாழ எனக்கு விருப்பமில்லை.

உழைத்து வாழ இந்தப் பெண் உருவம்தானே தடையாக இருக்கிறது என்று, ஆண் போல் வேடமணியத் தொடங்கினேன்!’’ எனும் சிஸா பாட்டி, எகிப்தின் வழக்கமான கிராமத்து ஆண்கள் போலவே நீண்ட கையுள்ள தொள தொள சட்டை அணிந்து, முடியையும் ஆண்கள் போலவே வெட்டிக்கொண்டு, 43 வருடங்களுக்கு முன் இங்கு ஷூ பாலிஷ் போடும் தொழிலை துவங்கி உள்ளார்.

இது மட்டுமல்லாமல், குடும்பத்தை கரைசேர்க்க வேண்டிய கட்டாயத்தினால் வயல் வேலை, கட்டட வேலை என்று ஒரு ஆணுக்குரிய உடல்திறத்தோடு அத்தனை வேலைகளையும் செய்துள்ளார்.

‘‘நான் ஆண் வேடமணிந்து இருக்கும்போது என்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்பது ஒரு பக்கம் சந்தோஷம் என்றால், இன்னொரு பக்கம் செங்கற்களைத் தூக்குவது, சிமெண்ட் மூடைகளைத் தூக்குவது என்று ஆண்களுக்கான கடின வேலைகளைக் கொடுத்து விடுவது கஷ்டம். இருந்தாலும் அதையெல்லாம் நான் பழகிக்கொண்டேன்!’’ என்கிறார் மெல்லிய சோகத்துடன்.

வைராக்கியப் பாட்டி, இப்படி உழைத்து தன் மகளுக்குத் திருமணம் முடித்துவிட்டாலும், இப்போது வரை தன் மகள் குடும்பத்தையும் சேர்த்து காப்பாற்றி வருகிறார்.

‘‘பேரக்குழந்தைகளுக்கு நான் வீட்டில் பாட்டி, வேலைக்குக் கிளம்பிவிட்டால் தாத்தா!’’ என்று சொல்லி நமுட்டுச் சிரிப்பை உதிர்க்கும் சிஸா பாட்டியை  ‘எகிப்திய மாடல் உமன்’ என்று இப்போது கொண்டாடுகிறது நாடு.

-யதி

Share.
Leave A Reply