உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியனான இந்திய அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
11ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன. புதிய உலக சாம்பியன் யார்? என்பதை அடையாளம் காட்டுவதற்கு இன்னும் 2 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.
முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் சிட்னியில் இன்று அரங்கேறிய 2–வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், உலகின் முதல் நிலை அணியான அவுஸ்திரேலியாவும் மோதின.
இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. இரு அணிகளிலும் எந்தஒரு மாற்றமும் செய்திருக்கவில்லை.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர் வோர்னரை இழந்தது. ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என மொத்தம் 12 ஓட்டங்களை எடுத்த வோர்னர், உமேஷ் யாதவ் பந்து வீச்சில் கோலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து பிஞ்சுடன் கைகோர்த்த சுமித் பொறுப்பாக ஆடி அவுஸ்திரேலியாவின் ஓட்ட கணக்கை உயர செய்தார்.
சுமித்- பிஞ்ச்
சுமித்- பிஞ்ச் பொறுப்பான ஆட்டம் மூலம் வலுவான ஜோடியாக உருவெடுத்தனர். சுமித் தனது பொறுப்பான ஆட்டம் மூலம் அவுஸ்திரேலியாவிற்கான நெருக்கடியை குறைத்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ஆனால் உமேஷ் யாதவ் சூப்பர் சுமித்தை வெளியேற்றினார். உமேஷ் யாதவ் பந்துவீச்சில் பிடி கொடுத்து சுமித் ஆட்டமிழந்தார்.
34.1-வது ஓவரில் உமேஷ் யாதவ் வீசிய பந்தை சுமித் அடிக்கையில் பந்து ரோகித் சர்மா கையில் சிக்கியது. அதிரடி காட்டிய சுமித் வெளியேறினார். 93 பந்துகளை எதிர்க்கொண்ட சுமித் 105 ஓட்டங்களுடன் வெளியேறினார். சுமித் 11 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்தார்.
அவுஸ்திரேலியாவின் ஓட்ட கணக்கை துரிதப்படுத்திய சுமித் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து மெக்ஸ்வெல் களமிறங்கினார்.
அவுஸ்திரேலியா 35-வது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களை எடுத்து இருந்தது. பிஞ்ச் 73 ஓட்டங்களுடனும், மெக்ஸ்வெல் 5 ஓட்டங்களுடனும் விளையாடினர்.
மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சர் என அதிரடியாக களமிறங்கிய மெக்ஸ்வெல்லை அஸ்வின் வெளியேற்றினார்.
37.3 ஓவரில் அஸ்வின் வீசிய பந்தை மெக்ஸ்வெல் ரகானேவிடம் பிடிகொடுத்து வெளியே சென்றார்.
இதனைதொடர்ந்து சதம் அடிக்கும் நோக்கில் விளையாடிய பிஞ்சும் அரங்கு திரும்பினார். 116 பந்துகளை எதிர்க்கொண்ட பிஞ்ச், 81 ஓட்டங்களை(7 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) பெற்றார்.
அவுஸ்திரேலியா 40-வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்களை எடுத்து இருந்தது. வொட்சன் 2 ஓட்டங்களுடனும், கிளார்க் 3 ஓட்டங்களுடனும் விளையாடினர்.
தொடர்ந்து வொட்சன் 28 ஓட்டங்களில் மோகித் சர்மா பந்துவீச்சிலும், கிளார்க் 10 ஓட்டங்களில் மோகித் சர்மா பந்துவீச்சிலும், பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர்.
அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 328 ஓட்டங்களை அடித்து இந்தியாவிற்கு 329 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது .
இதனையடுத்து 329 ஓட்டங்கள் இலக்குடன் இந்தியா துடுப்பாட்டத்தை நிதானமாக தொடங்கியது அணியின் ஓட்ட எண்ணிக்கை, 76 ஓட்டங்களாக இருந்தபோது, 45 ஓட்டங்களுடன் தவான் ஆட்டமிழந்தார்.
அணி மேலும் 2 ஓட்டங்களே சேர்த்திருந்த நிலையில் கோலியும் 13 பந்துகளை சந்தித்து ஒரு ஓட்டத்துடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
அவரை தொடர்ந்து ரோகித் ர்மாவும் வெளியேறினார். 18வது ஓவரில் இந்தியா 91 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, ரோகித் சர்மா 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 108 ஓட்டங்களாக இருந்தபோது, 7 ஓட்டங்களுடன் ரெய்னா வெளியேறினார். 26 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு, இந்தியா 161 ஓட்டங்களை எடுத்து தடுமாறியது.
நிதானமா ஆடி வந்த டோனி – ரஹானே ஜோடி 36.2 ஓவரில் ரகானே 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடரந்து டோனி 65 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.
இதன்போது இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 7 விக்கெட் இழப்பிற்கு 231 தொடர்ந்து மொகிந்தர் சர்மாவும் யாதவும் ஓட்டங்கள் எதுவு எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
233 ஓட்டங்களுக்கு இந்தியா அனைத்து விக்ககெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூழம் அவுஸ்திரேலியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக சுமித் தெரிவு செய்யப்பட்டார்.
சமி வீட்டில் சிறப்பு பிரார்த்தனை
இந்தியா வெற்றிக்காக வேகப்பந்து வீச்சாளர்முகமது ஷமி வீட்டில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. எனினும் பயனளிக்கவில்லை.
சுமித்
சுமித் இந்தியாவுடன் கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்( 162ழூ, 52ழூ, 133, 28, 192, 14, 117, 71, 47, 50 ) இன்றை போட்டியில் பெற்ற சதம் மூலம் ஒரு நாள் போட்டியில் 7-வது அரை சதம் மற்றும் 5வது சதத்தை பதிவு செய்தார்.
300 இலக்கு
இதுவரையில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நொக் அவுட் சுற்றில் எந்த ஒரு அணியும் 300க்கும் அதிகமான ஓட்டங்களை தொட்டது கிடையாது.
இந்தியா இதுவரையில் ஒருநாள் போடிகளில் 15 முறை 300க்கும் அதிகமான ஓட்டங்களை தொட்டு வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பிற அணிகள் 8 முறையே இதனை செய்து உள்ளது. இருப்பினும் இந்தியா இவற்றை உலக கிண்ணத்தில் செய்யவில்லை.
அனுஷ்கா சர்மா
இன்றைய போட்டியை நேரில் பார்க்கவும், கோஹ்லியை ஊக்குவிக்கவும் அவரின் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா சிட்னிக்கு வந்திருந்தார். எனினும் அவரும் ஏமாற்றமடைந்தார்.