* கொழும்பில் நடந்த மாநாட்டுக்கு ஏழரைக் கோடி ரூபா செலவு
* அம்பாறையிலிருந்து மூவர் கொழும்புவர ரூ.3 இலட்சம் செலவு
‘திவிநெகும’ திணைக்களத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
திவி நெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. ஏ. கே. ரணவக்க, நிதி மோசடிப் பிரிவுக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திவிநெகும திணைக்களத்தின் பணிக்கொடை கொடுப்பனவு மோசடி மற்றும் திவிநெகும திட்டத்தின் கீழ் நிவாரண வீட்டுத் திட்ட நிதி மோசடி அத்துடன் கொழும்பில் நடத்தப்பட்ட மாநாடொன்றுக்காக சுமார் 73 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளமை தொடர்பாக வும் தனித்தனியே 15 பேர் விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிரு ந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப் படையிலேயே முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. ஏ. கே. ரணவக்க நிதி மோசடிப் பிரிவினரால் விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.
அமைச்சரின் பணிப்புரைக்கு அமையவே இவற்றை தான் செய்ததாக முன்னாள் பணிப்பாளர் வழங்கியுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைச்சரிடம் வாக்குமூலம் பெறப்படல் வேண்டும்.
எனவே இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு விடயங்களை ஆற்றுப்படுத்தி சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படும் என்றும் அதற்கான வேலைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் கொழும்பில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு அம்பாறையிலிருந்து மூன்று பேரை அழைத்து வருவதற்கு மூன்று லட்சம் ரூபாவை திவிநெகும திணைக்களம் செலவு செய்துள்ளது என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ள தாக குறிப்பிட்டார்.
ரம்புக்வெலவுக்கு யாழ். நீதவான் அழைப்பாணை
முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பாராளுமன்றம் ஊடாக அழைப்பாணை விடுக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது, இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு யாழ். நீதவான் பொ.சிவகுமார், பாராளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.