ஈரானுடன் போர். குவைத் ஆக்கிரமிப்பு. சதாம் ஹுசைனின் எழுச்சி… அதன்பிறகு அவரின் வீழ்ச்சி. அமெரிக்காவின் முற்றுகை… அப்படியே உள்நாட்டு போர் என்று 30 வருடங்களாக எரிந்துகொண்டிருக்கிறது எண்ணெய் பூமி.

ஈராக்கில் எரிந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பை அணையவிடாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

ஐ.எஸ். என்ற இரண்டெழுத்தில் தங்களை அடையாளப்படுத்தும் இந்தக்கூட்டம் ஜீரணிக்க முடியாத பல செயல்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது.

இவர்களை யார் என்று நாம் விழிப்பது- என்பதில் ஒரு சிறு சங்கடம்…

தீவிரவாதிகள் என்பதா? பயங்கரவாதிகள் என்பதா? போராளிகள் என்பதா? என்பதில்தான் அந்த சிக்கல்…

இவர்கள் யார் என்பதை காலம் முடிவு செய்துகொள்ளட்டும்… அந்த வியாக்கியானத்திற்குள் நாம் செல்லத் தேவையில்லை…

தொடராக வரவிருக்கும் இந்த பத்தியில் ஐ.எஸ். அமைப்பு என்றே விழிப்போம்.

2003ஆம் ஆண்டு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஈராக்கை ஆக்கிரமித்த அதே வேகத்தில் இந்த அமைப்பு மீண்டும் ஈராக்கை ஆக்கிரமித்துக்கொண்டது.

ஐ.எஸ். அமைப்பு அல் கொய்தாவை விடவும் ஆபத்தானது என்பதே பலரது கருத்து.

ஐ.எஸ். இயக்கத்தை முறியடிக்கும் திறன் மட்டுமல்ல எதிர்த்து நின்று போராடும் திறனும் பலமும்கூட ஈராக் இராணுவத்திடம் இல்லை.

பின்வாங்கிச்செல்லும் ஈராக் இராணுவத்தினரிடம் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி தன் பலத்தை இந்த இயக்கம் பெருக்கிக்கொண்டுள்ளது.

ஐ.எஸ். இதுவரை ஈட்டியுள்ள வெற்றிக்கு முதன்மையான காரணம் செயலிழந்தும் அதைவிட அச்சமூட்டும் வகையில் நம்பிக்கையிழந்தும் காணப்படும் ஈராக் இராணுவம்தான்.

உள்ளூர் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தது இந்த இயக்கத்தின் இன்னொரு முக்கிய பலம்.

சரி… இவ்வளவு ஐ.எஸ். அமைப்பு ஆரம்பத்தில் நடத்தியவை. இவை பாராட்டுக்குரியதாக இருந்தது. இழந்த நாட்டை மீண்டும் பிடிக்கிறோம் என்று கொடி உயர்த்தித்தான் வந்தார்கள்.

isis-flag

ஆனால் இப்போது…!

நடப்பது எல்லாம் அப்படியே தலைக்கீழ்.

சிரியா, ஈராக் இந்த இரண்டு நாடுகளையும் கைப்பற்றும் நோக்கில் கொஞ்சம் கொஞ்சமாக போராடி வந்தது ஐ.எஸ். அமைப்பு.

சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் ஐ.எஸ். அமைப்பின் பங்கு அதிகமாகவே காணப்பட்டது.

ஈராக்கிலும் பல்வேறு சிறுநகரங்களை வென்றெடுத்தார்கள்.

முதல்கட்ட வெற்றியை ருசித்தபின் சிரியா மற்றும் ஈராக்கில் இதுவரை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியிருக்கும் பகுதிகளை தனி நாடாக இந்த அமைப்பு அறிவித்தது.

இந்த நாட்டுக்கு ‘இஸ்லாமிய தேசம்’ என்று பெயர் சூட்டியது.

இஸ்லாமிக் ஸ்டேட்! இதுதான் ஐ.எஸ்.

இதற்கு கலிபாவாக அதாவது மன்னராக அபுதுவா இருப்பார் என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை விட்டார்.

ஆரம்பத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் இயங்கிவந்த இந்த அமைப்பு…

இப்போது ஐ.எஸ். என்று இரண்டு எழுத்திற்கு குறைத்துக்கொண்டது.

சற்றே முந்தைய வரலாற்றை ஆராய்ந்தால் ஈராக் பற்றியும் இந்த அமைப்பின் தோற்றம் பற்றியும் நாம் கொஞ்சம் எளிதாகவே புரிந்துகொள்ள முடியும்.

article-0-1ED7921000000578-688_964x854

மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு ஈராக். சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளமிக்க நாடும்கூட.

மொசப்பத்தேமியா வண்டல் சமவெளி, ஜாக்ரோஸ் மலைத்தொடர்கள், சிரியா பாலைவனம், வடக்கு பெர்ஷிய வளைகுடாவை ஒட்டிய கடற்கரை என வேறுபட்ட நில அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு நாடு.

ஈராக்கின் வடக்கில் துருக்கி, கிழக்கில் ஈரான், தென்கிழக்கில் குவைத், தெற்கில் சவூதி அரேபியா, தென்மேற்கில் ஜோர்டான், மேற்கில் சிரியா இவை அனைத்தும் ஈராக்கின் எல்லை நாடுகள்.

யூப்ரடிஸ், டைக்ரிஸ் என இருபெரும் ஆறுகள், வடமேற்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி, ஈராக்கின் மையப் பகுதியைக் கிழித்துக்கொண்டு பாய்கின்றன.

இதனால் பாலைவனம், ஸ்டெப்பி புல்வெளி என்பதோடு வளமான வேளாண்மை நிலங்களும் ஈராக்கில் உள்ளன.

ஈராக்கின் புராதனப் பெயரான மொசபத்தேமியா என்பதற்கு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள நிலம் என்று பொருள்.

நதிக்கரைகள்தான் நாகரிகங்களின் தொட்டில் என்பதற்குச் சான்றாக வரலாறு சொல்லும் இடங்களில் இந்தப் பகுதியும் ஒன்று.

நாகரிகத்தின் தொட்டில் என்று வர்ணிக்கப்படும் ஈராக்கில் இப்போது நாகரிகமற்றவர்களின் ஆக்கிரமிப்பா என்றுதான் பலரும் அச்சம் கொள்கின்றனர்.

சரி நாம் வரலாற்றுக் கதைக்கு வருவோம்.

உலகுக்கு எழுத்துமுறையை வழங்கிய இந்த மண்ணில்தான் இப்போது வன்முறைக் கலாசாரம் வேறூன்றியிருக்கிறது.

பாபிலோனிய பேரரசிலிருந்து தொடர்ந்த நீண்ட நெடிய மன்னர் பரம்பரைகளை வரலாறாகக் கொண்ட ஈராக் மற்ற நாடுகளைப்போல ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் சிக்கியிருந்தது.

நாற்பதுகளில் ஈராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது.

ஆனால் 1958இல் நடந்த இராணுவப் புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து இராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர்.

saddam_hussein01

1978இல் ஈராக் சதாம் ஹுசைனின் கைகளுக்கு மாறியது.

2003இல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.

பேரழிவை ஏற்படுத்தக் கூடிய இரசாயன ஆயுதங்களைத் தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி 2003இல் ஈராக்கைத் தனது ஆளுகையின்கீழ் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளின் படையும் கொண்டுவந்தது.

இதன் பிறகுதான் ஈராக்கில் நிலவிவந்த பிரச்சினை உக்கிரமடைந்தது.

ஐ.எஸ். அமைப்பு ஈராக்கையும் சிரியாவையும் மீட்க வந்த மீட்புக் குழுவாகத்தான் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டது.

ஆனால் அவர்கள் நடத்தும் அக்கிரமங்களைப் பார்த்தால் இது இனத்தை அழிக்கும் செயல் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

கூண்டுக்குள் இட்டு தீயிட்டு எரிக்கிறார்கள். கழுத்தை அறுத்து கடலையே சிவப்பாக்குகிறார்கள்.

கொஞ்சகாலம் இந்த அமைப்பின் தலைவர் யார்? இவர்கள் எங்கிருந்து இயங்குகின்றார்கள்? யார் வழிநடத்துகின்றார்கள்? இவர்களுக்கு ஆயுதம் எங்கிருந்து கிடைக்கின்றது இப்படி எந்த கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை…

ஏன் அமெரிக்காவால் கூட கண்டுபிடித்துக்கொள்ள முடியாமல்தான் இருந்தது.

அப்படியிருந்த சமயத்தில்தான் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் நான்தான் என்று ஒருவர் வெளியில் வந்தார்.

உண்மையில் அவர்தானா தலைவர்-?

சந்தேகம்தான்.

இந்த அமைப்பில் இருக்கும் உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம்கூட வழங்கப்படுகிறதாம்.

ஏன் விமானத்தைச் சுட்டு வீழ்த்தும் ஆயுதங்கள் கூட தங்களிடம் இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள்.

உண்மையில் இதெல்லாம் அவர்களிடம் இருக்கின்றதா என்று தெரியவில்லை.

ஆனால் அப்படி இருந்தால் அது பெரும் ஆபத்தாகித்தான் முடியும்.

பணயக் கைதிகளை ஈவிரக்கமின்றி கழுத்தை வெட்டி கொலை செய்கிறார்கள்.

அதை படம்பிடித்து செய்தி நிறுவனங்களுக்கும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுகிறார்கள்.

இப்படியான கொடூரங்களை அரங்கேற்றும் அவர்களின் மனநிலை எப்படியானதொன்றாக இருக்கும் என்பது விளங்காத புதிர்.

இது ஆரம்பத்தின் சிறு அறிமுகம்தான்…

இன்னும் இருக்கிறது சொல்ல…

ஈராக்கின் வரலாறு கொஞ்சம் சுவாரஷ்யம் அதிகம்… அதனால் அதை அடுத்த வாரங்களில் விரிவாகத் தரக் காத்திருக்கிறோம்…

எது எப்படியோ ஐ.எஸ். அமைப்பை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். கடுமையாக எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

நாம் ஆதரிக்கவும் இல்லை… எதிர்க்கவும் இல்லை… உள்ளதை உள்ளபடி சொல்ல முனைகிறோம் அவ்வளவே…

தொடரும்…

-– எஸ்.ஜே.பிரசாத் –

Share.
Leave A Reply