பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்தியத்தில் ஜேர்மன்விங்ஸ் விமானத்தை திட்டமிட்டு மோதி வெடித்துச் சிதற வைத்ததாக நம்பப்படுபவரான துணை விமானியான அன்ட்றியஸ் லுபிட்ஸ், தனது பெயரை அனைவரும் அறியும் நாள் வரும் என எதிர்வுகூறியிருந்ததாக அவரது குறுகிய கால முன்னாள் காதலிகளில் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் லுபிட்ஸ் தீவிர உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு பல்வேறு நரம்பியல் மற்றும் உளவியல் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவரது வீட்டில் மன நோய்களுக்காக பயன்படுத்தப்படும் பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனிய பில்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே லுபிட்ஸால் கடந்த வருடம் வெளியிடப்பட்ட விமர்சனமொன் றை மேற்கோள்காட்டி மரியா டபிள்யூ (26 வயது) என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் மேற்படி முன்னாள் காதலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மரியா ஒரு விமான பணி ப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒருநாள் அனைத்தையும் மாற்றக் கூடிய ஒன்றை நான் செய்வேன். அதன் பின் ஒவ்வொருவரும் எனது பெயரை அறிந்து கொள்வதுடன் ஞாபகத்திலும் வைத்திருப்பார்கள்” என லுபிட்ஸ் கூறியதாக அந்தப் பெண் கூறினார்.
அவர் கடந்த வருடம் சுமார் 5 மாத காலம் லுபிட்ஸுடன் இணைந்து விமானப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் லுபிட்ஸால் ஜேர்மன்விங்ஸ் விமானம் வெடித்துச் சிதற வைக்கப்பட்டமை தொடர்பான செய்தியை கேள்விப்பட்டுத் தான் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக மரியா தெரிவித்தார்.
“லுபிட்ஸ் திட்டமிட்டு அந்த விமானத்தை மலைப் பிராந்தியத்தில் மோதி சிதறடித்திருப்பது உண்மையாயின், அவர் தனது உடல்நல பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டே அவ்வாறு செய்திருக்கக் கூடும். லுப்தான்ஸா விமான சேவையில் கப்டனாக பணியாற்றுவது அவரது கனவாக இருந்தது.
ஆனால் அவரைப் பொறுத்தவரை அது சாத்தியமற்றதாக இருந்தது” என மரியா கூறினார்.
அதேசமயம் லுபிட்ஸ் தீவிர உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு பல்வேறு நரம்பியல் மற்றும் உளவியல் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜேர்மனிய டி வெல்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது வீட்டில் மன நோய்களுக்காக பயன்படுத்தப்படும் பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் மது மற்றும் போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகியிருந்தமைக்கான எந்தவித சான்றும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
மேலும் அவர் கண் பிரச்சினைகளுக்காக மருத்துவம் பெறுவதற்கு எதிர்பார்த்திருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவி த்துள்ளது.
ஜேர்மன்விங்ஸ் விமானத்தின் கறுப்புப் பெட்டி குரல் பதிவு கருவியிலிருந்தான தகவல்களின் பிரகாரம், அந்த விமானத்தின் விமானி விமானிகளுக்கான அறையை விட்டு வெளியே சென்ற சமயம் துணை விமானியான லுபிட்ஸ்.
அந்த அறையின் கதவை உள்புறமாக தாளிட்டுக் கொண்டு விமானத்தை கீழ் நோக்கிச் செலுத்திமலையின் மீது மோதி வெடித்துச் சிதறடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
லுபிட்ஸ் தனக்கு ஏற்பட்டுள்ள மனநலப் பிரச்சினையை ஏனைய விமான உத்தியோகத்தர்களிடமிருந்து மறைத்துள்ளதாக நம்புவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர். அவரது மனநலப் பிரச்சினைகள் குறித்து அறிந்தே மரியா அவரிடமிருந்து பிரிய முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
தான் பணிபுரியும் இடத்திலான நிலைமைகள், போதிய பணமின்மை, அளவுக்கதிகமான அழுத்தம் என்பவற்றால் அவர் மன அழுத்தத்திற்குள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் லுபிட்ஸின் நீண்ட நாள் காதலியான கத்தரீன் கோல்ட்பச் (26 வயது) அவரை விட்டு விலகிச் சென்றமை அவரை கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
ஆசிரியையாக பணியாற்றி வந்த கத்தரீன், மேற்படி விமான அனர்த்தம் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன் லுபிட்ஸின் அளவுக்கதிகமான கட்டுப்படுத்தும் நடவடிக்கையால் அதிருப்தியுற்று அவரிடமிருந்து பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.