இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மின்பிடித்து இலங்கையின் மீன்வளத்தை அழிக்கும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் வட பகுதி மீனவர்கள் மருந்து குடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என வடமராட்சி மீனவ சமாசத் தலைவர் அருள்தாஸ் தெரிவித்தார்.
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் இன்னும் இரண்டு மாதங்களில் இது நடைபெறுவது உறுதி என அவர் குறிப்பிட்டார்.
பருத்தித்துறைக்கு சென்றிருந்த ´அத தெரண´ செய்திப் பிரிவுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் நாளாந்தம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து இலங்கையின் மீன்வளத்தை அழித்து வருவதாகவும் அதற்கு இலங்கை கடற்படை அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அருள்தாஸ் உள்ளிட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி தடுக்கும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறிய கருத்தை மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.
மற்றையவர்களது காணிக்குள் அத்துமீறி நுழைவது தவறு என்றும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கு அனுமதி அளிக்கக் கூடிய அளவிற்கு முறையான மீன்பிடி தொழிலை இந்திய மீனவர்கள் செய்வதில்லை என்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் ட்ரோலர் படகுகளை கொண்டு மீன்பிடித்து இலங்கை மீன்வளத்தை அவர்கள் அழிப்பதாகவும் அருள்தாஸ் உள்ளிட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களில் அனேகமானவர்கள் ட்ரோலர் படகு வைத்திருக்கும் இந்திய முதலாளிமார்களின் கூலிகள் என்றும் இலங்கை கடற்படை அவர்களை தாக்குவதாகக் கூறுவது பொய் என்றும் வடமராட்சி மீனவர் சமாசத் தலைவர் அருள்தாஸ் உள்ளிட்ட மீனவர்கள் கூறுகின்றனர்.
யுத்தத்தின் பின் நிம்மதியாக கடற் தொழிலில் ஈடுபட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்த தமக்கு ஏமாற்றமே எஞ்சியதாகவும் திட்டமிட்ட வகையில் தமிழர் பகுதி மீனவர்கள் மீது அழிப்பு நடைபெறுவதாகவும் மீனவர்கள் குற்றம் சுமத்தினர்.
தாங்கள் சட்டத்தை கையிலெடுத்து செயற்படவில்லை என்றும் ஆனால் கடற்படை தொடர்ச்சியாக தங்களுக்கு பாதகமாக நடத்து கொண்டால் தங்களது பிரச்சினையை தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மீனவர்கள் குறிப்பிட்டனர்.
உள்நாட்டு மீனவர்கள் தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் போது அவர்கள் கைது செய்யப்படுவதாகவும் ஆனால் இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு எவ்வாறு அனுமதி அளிக்க முடியும் என்றும் மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மீனவர்களுடனான விசேட நேர்காணலை கீழே காண்க..