பத்து மாதக் குழந்தையொன்றை முல்லைத்தீவு வைத்தியசாலையிலிருந்து கடத்திச் சென்ற மர்ம யுவதி பற்றிய செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த குழந்தையை கடத்தி சென்று இன்னொருவரிடம் கொடுத்தபோதும், வைத்தியசாலையிலிருந்து 8 கிலோமீற்றரிற்கு அப்பால் வைத்து குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மர்ம யுவதியை தேடி பொலிசார் வலைவிரித்துள்ளனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பத்து மாதக் குழந்தைக்கு மருந்தெடுப்பதற்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கடந்த புதன்கிழமை வந்துள்ளார்.
வைத்தியசாலைக்குள் தனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த 19 வயது மதிக்கத்தக்க இளம் யுவதியொருவரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். பின்னர், தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு அந்த யுவதியிடம் கூறிவிட்டு, வைத்தியரை பார்க்க சென்றுள்ளார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி குறித்த இளம் யுவதி அவசர அவசரமாக குறித்த குழந்தையுடன் வைத்தியசாலையை விட்டு வெளியேறி, சுமார் எட்டு கிலோமீற்றர் தூரத்திலுள்ள முல்லைத்தீவு நகரத்திற்கு சென்றுள்ளார்.
முல்லைத்தீவு நகரத்திற்கு சென்ற யுவதி குழந்தையின் கழுத்திலிருந்த முக்கால் பவுண் பென்டனுடன் கூடிய தங்கச் சங்கிலியை கழற்றி எடுத்துக்கொண்டு முல்லைத்தீவு பஸ் நிலையத்தில் திருகோணமலைக்கு செல்ல காத்திருந்த முல்லைத்தீவு குமுழமுனையைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் வங்கிக்கு சென்று வரும் வரை குழந்தையைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறி அந்தப் பெண்ணிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
மிக நீண்ட நேரமாக குழந்தையைக் கொடுத்த யுவதி வரவில்லை. இதனால் திருகோணமலைக்கு செல்லவிருந்த பஸ் தாமதமாகியதுடன், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த யுவதியை தேடி இளைஞர்கள் சிலர் முல்லைத்தீவு வங்கிகளுக்கு சென்று விசாரித்துள்ளனர். எனினும் எந்த வங்கிகளிலும் யுவதி காணப்படவில்லை.
இதற்கிடையில் குறித்த யுவதியிடம் தனது குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு கொடுத்த தாய், குழந்தையைக் காணவில்லை என வைத்தியசாலை பொலிஸ் பிரிவின் ஊடாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த தாயின் முறைப்பாட்டையடுத்து விரைந்த முள்ளியவளை பொலிஸார் மாஞ்சோலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய நகரங்களில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது முல்லைத்தீவு பஸ் நிலையத்தில் கைக்குழந்தையொன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குறித்த குழந்தையை பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர்.
அத்துடன், குறித்த குழந்தையை வைத்திருந்த பெண்ணை விசாரித்தபோது, தான் திருகோணமலைக்கு செல்ல இருந்ததாகவும், இதன்போது இளம் யுவதியொருவர் வந்து குழந்தையைக் கொடுத்துவிட்டு வங்கிக்குச் சென்று வருவதாகவும் கூறிச் சென்றார் எனவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
எனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த குழந்தையை வைத்திருந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர். எனினும் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தனது குழந்தையை கொடுக்கவில்லை எனவும் 19 வயது மதிக்கத்தக்க யுவதியொருவரிடமே குழந்தையைக் கொடுத்ததாக குழந்தையின் தாயார் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
குழந்தையை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த பெண் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையிலிருந்து குழந்தையை கடத்திச் சென்றுள்ள திருமணமான யுவதி முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடும் முள்ளியவளை பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.