மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு ஆஸ்திரேலிய பிரஜைகளின் இறுதிக் கட்ட மேன்முறையீட்டையும் இந்தோனேசிய நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
போதை மருந்து கடத்தியதாக இவர்கள் குற்றங்காணப்பட்டார்கள்.
அண்ட்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ( இலங்கை வம்சாவளி தமிழர்) ஆகிய இருவரும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடொடொ அவர்கள், தமக்கு மன்னிப்பு வழங்க மறுத்ததை எதிர்த்து மேன்முறையீடு செய்திருந்தனர்.
ஆனால், அவர்களுக்கு அதிபரின் முடிவை கேள்விக்குள்ளாக்குவதற்கு அதிகாரம் கிடையாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
2005 இல் ஆஸ்திரேலியாவுக்கு ஹெரோயின் போதைப் பொருளை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்ட 9 பேர் கொண்ட குழுவில் இவர்கள் இருவரும் அடங்குகிறார்கள்.
அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் ஒரு பிரச்சார போராட்டம் நடக்கிறது. ஆனால், இவர்கள் இருவரும் மரண தண்டனைக்கான ஏற்பாடுகளுக்காக ஏற்கனவே இந்தோனேசிய தீவு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டார்கள்.