பண்டாரகமை பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக கடமையாற்றிவந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பெக்கேகமவில் தனது வீட்டில் நித்திரையில் இருந்தபோதே அவர் இவ்வாறு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்
51 வயதான உப பொலிஸ் பரிசோதகர்
ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நேற்று முன் தினம் இரவு கடமைகளை முடித்துக்கொண்டு தனது வீட்டுக்கு வந்துள்ள குறித்த உப பொலிஸ் பரிசோதகர், வழமையான நடவடிக்கைகளின் பின்னர் நித்திரைக்கு சென்றுள்ளார்.
உப பொலிஸ் பரிசோதகர் ஒரு அறையிலும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இன்னொரு அறையிலுமாக நித்திரைக்கு சென்றுள்ளனர்.
இந் நிலையில் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் நித்திரையில் இருந்து எழுந்துள்ள மனைவி கணவரை எழுப்புவதற்கு அவர் நித்திரைக்கு சென்ற அறைக்கு சென்றுள்ளார்.
இதன் போதே தனது கனவர் கழுத்து அறுத்து அவர் நித்திரை செய்த கட்டிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதை அவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து விடயம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்படவே பாணதுறை தெற்கு பொலிஸார் உடன் ஸ்தலம் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார் களுத்துறை பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் மோப்ப நாயை ஸ்தலத்துக்கு கொண்டுவந்ததுடன் அதன் ஊடாக தடயங்களை தேடினர்.
இதன் போது வீட்டுக்கு அருகே உள்ள காட்டுக்குள் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. எனினும் அந்த வாளில் எவ்வித இரத்தக் கறையும் காணப்படவில்லை.
எவ்வாறாயினும் நேற்று காலை முதல் பொலிஸ் கைவிரல் ரேகைப் பதிவுப் பிரிவினரும் அந்த இடத்துக்கு விரைந்து தடயங்களை சேகரிக்கலாயினர்.
இந் நிலையில் பொலிஸ் தடயவியல் பிரிவினரும் ஸ்தலத்தில் இருந்து அறிவியல் ரீதியிலான தடயங்களை சேகரிக்கலாயினர்.
இந் நிலையில் நேற்று ஸ்தலத்துக்கு பாணந்துரை நீதிவான் ருச்சிர வெலிவத்த சென்று பார்வை இட்டதுடன் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார்.