சுன்னாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணற்று நீரை “பருக” கூடாது என என அமைச்சர் ரவூப் ஹக்கீம் சொல்லுகிறார். அதேநேரம் வடமாகாண  விவசாய  அமைச்சர்  ஐங்கரநேசன்  கிணற்று நீரை பருகலாம்  என்கிறார்.  இதனால்  மக்கள்  குழப்பமடைந்துள்ளனர்கள்.

“மதுபானத்தையும் பருக கூடாது- உடல்  நலம்கெட்டுப்போகும்”  என்றுதான்  எல்லோரும்  சொல்லுகிறார்கள்.  ஆனால்  மக்கள்  தொடர்ச்சியாக பருகிக்கொண்டுதான்  இருக்கிறார்கள்.  இந்த விடயத்தில்  யாழ்குடாநாட்டு மக்ககள்  குழப்பமடையமாட்டார்கள்.

சுன்னாகத்தில்  உள்ள   கிணறுகளில்  “பீர்”  கலந்திருந்தால் யாழ்குடாநாட்டு மக்கள் அனைவரும் சுன்னாகத்துக்கு படையெடுத்திருப்பார்கள்.  சுன்னாகத்தில்  குடிநீர் தட்டுப்பாடாகியிருக்கும்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன்  கூறியது போன்று  குடிநீரை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்பதுதான்  கவலைக்குரிய விடயமாகவுள்ளது.

 

அரசியலுக்குள் சிக்கியுள்ள சுன்னாகத்து நீர்? பருகலாமா? இல்லையா? என்பதில் ஒரே குழப்பம்:
மக்கள் திண்டாட்டம்

n1504121கடந்த ஒரு வருடமாக நிலவி வரும் சுன்னாகம் நீர்ப்பிரச்சினை தற்போது அரசியலுக்குள்ளும் சிக்குண்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் நீரைப் பருகுவதா இல்லையா எனும் இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டு சிக்கித் தவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இவ்விடயம் உள்ளூர் பிரதேச மட்டத்திலான அரசியல்வாதிகள் சிலருக்கும் வைத்திய அதிகாரிகள் சிலருக்குமிடையேயான போட்டித் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது.

பின்னர் தனியார் மின்சாரம் வழங்கும் நிறுவனத்திற் கும் வட மாகாண சபைக்கும் இடையேயான பிரச்சினையாகக் காணப்பட்டது.

இப்போது இப் பிரச்சினை மத்திய அரசிற்கும், மாகாண அரசிற்கும் இடையே யானதொரு பிரச்சினையாக உருவெடுத் துள்ளது.

குறிப்பிட்ட துறையில் கைதேர்ந்த பெரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர் குழுக்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் மேற்படி நீரைப் பருகுவதால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என வட மாகண சபை மக்களுக்கு அறிவித்திருந்தது.

எனினும் ஆபத்து எவுவும் இல்லை, பருகுவதும் பருகாததும் உங்களது பிரச்சினை என்பதாக வட மாகாண சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பி மக்களில் பெரும் பகுதியினர் அந்நீரை வழமைபோல் மீண்டும் பாவிக்கத் தொடங்கியிருந்தனர்

இந்நிலையில் அந்த நீரைப் பாவிப்பது மிகவும் ஆபத்தானது, அதில் , கிறீஸ் படிமங்களும் கழிவு எண்ணெய் படிமங்களும் கலந்துள்ளது, எக்காரணமும் கொண்டும் இந்த நீரைப் பருகுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என மத்திய அரசாங்கம் இப்போது அறிவித்துள்ளது.

சுன்னாகம் பிரதேச கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் 73 வீதமானவற்றில் கழிவு எண்ணெயும்,  கிறீஸ் கலந்துள்ளமையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே அப்பகுதி நீரைப் பருக வேண்டாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வைத்துக் கேட்டுள்ளார்.

இதன் காரணமாக தமது சொந்த மண்ணிலிருந்து கிடைக்கும் தமக்குச் சொந்தமான நிரைத் தமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூடப் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள மக்கள் இரு தரப்பில் எத்தரப்பின் கூற்றை நம்பிச் செயற்படுவது எனும் இக்கட்டானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமது பிரதேசக் கிணறுகளில் எண்ணெய் படிமங்கள் தெரியத் தொடங்கிய காலத்திலிருந்து அப்பகுதி மக்கள் தமது கிணற்று நீரை எவ்விதமான தேவைகளுக்கும் பயன்படுத்தாது இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தமது நீர்த் தேவைகளுக்காக மாதம் ஆறாயிரம் ரூபா முதல் ஏழாயிரத்து ஐநூறு ரூபா வரை செலவிட்டு வருகின்றனர்.

நீர் வழங்கல் அமைச்சு பவுஸர்களில் தேவையான அளவு நீரை அப்பகுதி களில் வழங்கு வருகின்ற போதிலும் அது மக்களது தேவைகளுக்குப் போது மானதாக இல்லை எனவும் மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

நீரைப் பயன்படுத்தலாம் எனும் வட மாகாண சபையின் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானதன் பின்னர் மக்கள் அந்நீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தாது இதர தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர்.

இப்போது மத்திய அரசாங்க அமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் அந்நீரைப் பயன்படுத்துவதை முற்றாக நிறுத்தியுள்ளனர்.

இவ்விடயத்தில் அரசியல் மற்றும் அதிகாரப் போட்டிகளைத் தவிர்த்து தமது அடிப்படைத் தேவையான நீரைப் பெற்றுத்தர அரசியல்வாதி களும், அதிகாரிகளும் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.

கழிவுப் படிமங்கள்! நீரைப் பருக வேண்டாம்!- அமைச்சர் ஹக்கீம்
amaisar

சுன்னாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள பல கிணறுகளில் கிறீஸ் படிமங்களும் கழிவு எண்ணெய் படிமங்களும் படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மேற்படி கிணறுகளின் நீரைப் பருகுவதை மக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு

நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிபுணர்கள் குழு மேற்படி கிணறுகளின் மாசுகள் தொடர்பில் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேற்படி கிணறுகளில் படிந்துள்ள படிமங்கள் வேறு கிணறுகளுக்கும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இக்கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லை என வடக்கு மாகாண சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை கூறுவதாக கூறப்பட்டு வருகிறது.

அவ்வறிக்கையை நான் கோரிய போதிலும் இதுவரையிலும் அதனை காட்டவில்லை என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன் போது தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

சுன்னாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் படிந்துள்ளது என்பதை ஆராய்வதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற ஆய்வில் 73 வீதமான கிணறுகளில் கழிவு எண்ணெய் படிமங்கள் படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மேற்படி மின் உற்பத்தி நிறுவனத்தை சுற்றியுள்ள 2.5 கிலோ மீற்றர் பிரதேசங்களில் இந்த பாதிப்பு உள்ளது. இதனால் தான் நாம் அப்பிரதேச மக்களுக்கு தினமும் ஆறு பௌசர்களில் நீர் விநியோகித்து குடும்பமொன்றுக்கு 250 லீற்றர் நீரை வழங்கி வருகின்றோம்.

இதற்கான செலவை நாம் அந்த மின்சார சபையிடமே பெற வேண்டியுள்ளது. அவர்களால் தான் இந்த பிரச்சினை உருவானது. இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

மேலும் இன்று (நேற்று) காலை பிரதமரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத் திட்டத்தில் சுன்னாகம் பகுதியை உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2 வருடங்களில் நடைமுறைக்கு வரும் இக் கூட்டத்தில் சம்பந்தனும் கலந்து கொண்டிருந்தார் என்றார்.

அப்பகுதியிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கிறீஸ் படிமங்கள் இருப்பதனால் மக்கள் அக் கிணற்று நீரை அருந்தக் கூடாது அத்துடன் நாம் எமது ஆய்வுகளை இன்னும் விரிவுபடுத்தியுள்ளோம்.

அப்பகுதிகளிலுள்ள சகல கிணறுகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளோம். சுன்னாகம் பிரதேசத்திற்கு மேலதிக நீர் தேவைப்பட்டால் அதனை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்றார்

Share.
Leave A Reply