போராட்ட குணம் மிக்க பெண் தலைமைகளே ஆணாதிக்க சமூகங்கள் அனைத்திலும் பெண்களின் வாக்குகளை பெரும்பான்மையாகப் பெறுபவர்கள் என்பது வரலாற்றின் சாட்சி.
1982 இல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஜெயலலிதா கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக ஆனார்.
1984 இல் ராஜ்யசபா உறுப்பினராகி, பாராளுமன்றத்துக்கு சென்றார் ஜெயலலிதா. பாராளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் ஆகியதுடன் ஜெயலலிதாவின் ராஜ்ய சபை பேச்சுகள், அரசியல் புகழ் மிக்கவை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, ஆங்கிலத்தில் அவர் பெற்றிருந்த புலமை காரணமாக வெளுத்து வாங்கினார். இதனால் வடக்கில் அவருக்கு புகழ் ஓங்கியது.
அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், பிரசாரங்கள் மூலமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தார் ஜெ, எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்கு அந்த பேச்சுக்களை எழுதித்தந்தவர் வலம்புரி ஜான்.
ஜெ.,விடம் இருந்த பேச்சுத்திறமையையும், அபாரமான ஆங்கில, ஹிந்தி புலமையையும் கவனித்த எம்.ஜி.ஆர். இவர்தான் டெல்லி அரசியலுக்கு சரியான ஆள் என்று தீர்மானித்து ராஜ்யசபா உறுப்பினராக்கினார்.
மேலும், ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றன.
எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். எதிர்பாராத விதமாக இந்திரா காந்தி மறைந்தார்.
அந்த நேரத்தில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என ராஜீவ்காந்தி அறிக்கை வெளியிட்டார். அப்போதே சட்டசபையையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த முடிவு செய்தனர் ஆர்.எம்.வீயும், நெடுஞ்செழியனும். அதற்கான அனுமதியையும் எம்.ஜி.ஆரிடம் பெற்றனர்.
அப்போது தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. ஆனால் பிரசாரம் செய்ய எம்.ஜி. ஆர் தமிழகத்தில் இருக்கவில்லை.
ஜெயலலிதாவுக்கும் ஆர்.எம்.வீக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஏற்கனவே ஒரு முறை பிரசாரத்திற்கு ஆர்.எம்.வீ., போகாததால் கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் என்ற முறையில் அவருக்கே நோட்டீஸ் அனுப்பியிருந்தார் ஜெ.
அதன்பிறகு ஆர்.எம்.வீ-க்கு ஜெயா மேலிருந்த கோபம் அதிகரித்தது. ஜெயலலிதாவை ஓரங்கட்டினர். தலைவரில்லாத் தேர்தலில் ’ஜெ’க்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை.
அதிமுக தலைவர்கள் ‘ஜெயலலிதா பிரசாரம் செய்யப்போவதில்லை.’என்று பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தனர். .
இப்படியே இருந்தால் மறுபடி சினிமாவில் நடிக்க அனுப்பிவிடுவார்கள் என்று ஜெயலலிதா நினைத்தாரோ என்னவோ உடனே சுதாரித்துக்கொண்டார்.
எம்.ஜி.ஆர் நோயுடன் போராடிக்கொண்டு அமெரிக்காவில் இருக்கிறார். ஆகவே , பிரசாரத்துக்கு யார் போவது? எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்பப்போவது யார்? மக்களைத் திரட்டுவது எப்படி? நாம் புறப்படுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தார் ஜெயலலிதா.
தானே வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பினார். அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதில் ஜெயலலிதா முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார். தனியாளாக பிரசாரத்திற்கு புறப்பட்டார். அதிமுக தொண்டர்கள் அண்ணியின் தலைமையில் பழைய உற்சாகம் பெற்றனர்.
பூ ஒன்று புயலானதைக் கழகக் கண்மணிகள் கண்கூடாகக் கண்டார்கள். ஜெயலலிதாவின் முதல் பிரசாரம். டிசம்பர் 3 ஆம் திகதி 1984 அன்று ஆண்டிப்பட்டியில் தொடங்கியது தொடர்ந்து நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம் என்று மொத்தம் 21 நாட்கள் அயராது பிரசாரம் செய்தார்.
பெண்ணல்ல பீரங்கி என்று மக்கள் வெள்ளம் அலை மோதியது. மக்களின் கண் பார்த்து, நேரடியாக உரையாடினார். எம்.ஜி.ஆரின் நலம் பற்றிப் பேசினார்.
எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்த தி.மு.க.வின் தவறான பிரசாரம் பற்றி விமர்சித்து பேசினார். வாக்காளர்களிடம் கேள்விகேட்டுப் பதில் பெறும் வித்தியாசமான பிரசாரத்தை மேற்கொண்டார். உண்மையிலேயே சூறாவளிச் சுற்றுப்பயணம் அது.
தன்னைச் சுற்றி எழுந்த எதிர்ப்புவலைகளை ஆவேசமாக பிரசாரம் செய்து, அந்த வலையை அறுத்தெறிந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவாலும், அதிமுக தொண்டர்களாலும் மறக்கமுடியாத பிரசாரம் அது.எம்.ஜி.ஆர் பிரசாரத்துக்கு வராத குறையை ஒற்றை ஆளாக நின்று ஜெயலலிதா சிங்க முழக்கத்தின் மூலம் ஈடுகட்டியதாகப் பத்திரிகைகள் எழுதின.
முன்பே சொன்னதன் படி ஜெ.யின் படிப்பார்வத்தைத் துக்ளக் பத்திரிகையில் ஜெயலலிதா எழுதிய கட்டுரைகளைக் கொண்டு அறியலாம்.
கொன்வென்ட் ஆங்கிலப் படிப்பு. மாவோ முதல், ஸ்டாலின், ஹிட்லர், மண்டேலா வரையிலான அரசியல் தலைவர்கள் பற்றிய வரலாற்று ஞானம் இவையெல்லாம் அவரது பேச்சாற்றலுக்குத் துணை போயின.
ராஜீவ்காந்தியையும் எம்.ஜி.ஆரையும் குறிக்கும் விதமாக தாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, வாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்ற பிரசார கோஷங்கள் முழங்கின.
தேர்தலின் முடிவில் அதிமுகவுக்கு அபார வெற்றி.153 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க.,விற்கு 132 தொகுதிகள் கிடைத்தன. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தன.
இந்த தேர்தலில் தான் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவிலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். பாராளுமன்றத்தில் காங்கிரஸ்- 25 தொகுதிகளிலும், அதன் பாதி எண்ணிக்கையில் அ.தி.மு.க-12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தன.
இந்த வெற்றிக்கு சில காரணங்கள் ஜெ மட்டுமே அல்ல. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிட்சையில் இருக்கும்போது அவர் நடப்பாதையும், கைகாட்டுவதையும், சாப்பிடுவதையும் வீடியோ காட்சிகளாக்கி கொண்டு வந்தார் ஆர் எம் வீ. அதை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மூலம் கச்சிதமாக எடிட் செய்து பிரசாரத்திற்கு பயன்படுத்தினார்.
கூடவே படுகொலையான இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சி கோர்க்கப் பட்டது. அனுதாப அலை அள்ளியது.
அ.தி.மு.க., வில் ஜெ. ஆதரவாளர்கள் என்ற தனிக் குழு உருவாகத் தொடங்கியது அப்போதுதான்.அப்போது ஜெயலலிதாவிற்கென்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் என்று ஒரு கோஷ்டி உருவாகியிருந்தது.
சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
ஜெ.யின் உழைப்பையும் அரசியல் சிறப்பையும் புரிந்து கொண்டார்.அசைக்க முடியாத செல்வாக்குடன் ஜெ, ’ஜே, ஜே’ என்று வலம் வந்தார்.
ஜெயலலிதா பல விடயங்களில் இந்திரா காந்தியுடனும் பிரித்தானியப் பிரமதராகவிருந்த மார்கரட் தாட்சருடனும் ஒப்பிடத்தக்கவர். வெட்ட வெட்டத் தழைக்கும் போராட்ட குணம் மிக்கவர்கள் இவர்கள்.
ஆணாதிக்க சமூகங்கள் அனைத்திலும் பெண்களின் வாக்கு களை பெரும்பான்மையாகப் பெறுபவர்கள் இவர்களே என்பது வரலாற்றின் சாட்சி.
இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். ஜெயின் நிலை மாறியது…….
வழக்கறிஞர் சந்திரிகா சுப்பிரமணியன்
நிலவும் வானும் போல சேர்ந்திருந்த ஜெய். வளர்ந்தார் எம். ஜி. ஆர். தேய்ந்தார் – (பகுதி-4)
ஆயிரத்தில் ஒருவருடன் (எம்.ஜி.ஆர்) தொடர்பு ‘ஜெ’ வாழ்க்கையின் திருப்பு முனை- (பாகம்-2)