வெளிவளங்களை விவேகத்துடன் பயன்படுத்தும் கிளர்ச்சி வாதிகளுடனான அனைத்துலக மயப்படுத்தப்பட்ட உள்நாட்டுப் போர் ஒன்றை எவ்வாறு வெற்றி கொள்வது?
இவ்வாறான உள்நாட்டுப் போர்களை எதிர்த்து பல அரசாங்கங்கள் போரிடுகின்ற போதிலும் ஒரு சில வெற்றிபெறுகின்றன.
25 ஆண்டுகளாக சிறிலங்கா அரசால் தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்துத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது வெற்றி கொள்ளப்பட்டு நாட்டில் அமைதி உருவாக்கப்பட்டது.
ஒரு பத்தாண்டிற்கும் மேலாகத் தொடரப்பட்ட யுத்தத்திற்கு மேற்குலக நாடுகளால் ஆதரவளிக்கப்பட்ட ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் யுத்தங்களுடன் சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தத்தை ஒப்பிடும் போது இது எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டது என ஆராயப்படுகிறது.
இதற்குப் பிரதானமாக மூன்று காரணங்கள் உண்டு.
முதலாவதாக, எதிரியானவன் சண்டையிடுவதற்கு பொருத்தமான மூலோபாய நோக்கம் ஒன்று தேவை.
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் முதல் 22 ஆண்டுகளும் இராணுவ வழிமுறையைக் கைக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
இதுவே இப்போரை வெற்றி கொள்வதற்காக வெளிநாட்டு வல்லுனர்களால் வழங்கப்பட்ட சிறந்த ஒரேயொரு தெரிவாகக் காணப்பட்டது.
‘இப்போருக்கு எந்தவொரு இராணுவ வழிமுறையும் தீர்வாகாது. தமிழ்க் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தை சிறிலங்கா இராணுவத்தால் வெற்றி கொள்ள முடியாது’ என 2006ல், சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது இறுதிக்கட்டத்தை அடைவதற்கு முன்னர், ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரியான லெப்ரினன்ட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கத் தெரிவித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஐந்து தடவைகள் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
ஆனால் இவை வெற்றியளிக்காது இடையில் முறிவடைந்தன. 2006 நடுப்பகுதியில் நோர்வேயின் அணுசரனையுடன் மேற்கொள்ளப்பட்ட யுத்தநிறுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் நான்காம் கட்ட ஈழப்போரை ஆரம்பித்தனர்.
இதற்குப் பதிலாக, சிறிலங்கா அரசாங்கமும் தனது மூலோபாய நோக்கத்தை மாற்றிக் கொள்வதெனத் தீர்மானித்தது. அதாவது புலிகளுடன் சமரசப் பேச்சுக்களை மேற்கொள்வதை விடுத்து போரின் மூலம் இவர்களைத் தோற்கடிப்பதென அரசாங்கம் தீர்மானித்தது.
இதில் வெற்றிகொள்வதற்கான ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டிய நிலை சிறிலங்கா அரசு தரப்பிற்கு ஏற்பட்டது.
இதனடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்த்து நிற்கக்கூடிய வலுவான ஒரு மூலோபாயத்தை சிறிலங்கா அரசாங்கம் வகுத்தது.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் முதல் 22 ஆண்டுகளும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இவ்வாறானதொரு வெற்றிகரமான மூலோபாயத்தை வகுக்கவில்லை.
2005ன் பிற்பகுதியில் சிறிலங்காவில் புதிய அரசாங்கம் தேர்வுசெய்யப்பட்டது. இந்த அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிப்படைப் பலவீனம் என்ன என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப வித்தியாசமான மூலோபாயக் குறிக்கோளைத் தெரிவுசெய்தது.
புலிகள் அமைப்பின் பிரதான பிரச்சினையாக அவர்களது மனிதவளமாகும். சிறிலங்காவின் மொத்த சனத்தொகையின் 12 சதவீதம் மட்டுமே தமிழர்களாவர். சிறிலங்கா வாழ் தமிழ் மக்களுள் 300,000 வரையானவர்கள் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகக் காணப்பட்டனர்.
இதற்கும் மேலாக, ஒரு அமைப்பு என்ற வகையில் புலிகளின் அதிகாரம் நலிவுற்றிருந்தது. 2006ல், புலிகள் அமைப்புத் தனக்கான ஆளணிகளைப் பலவந்தமாக இணைத்துக் கொண்டது. இதில் சிறுவர்களே அதிகமாவர்.
போரியல் நடவடிக்கைகளில் புலிகள் பெற்றிருந்த பலம் கூட இவர்களுக்கு எதிராகத் திரும்பியது. குறிப்பாக, புலிகள் அமைப்பின் கட்டளை வழங்கல் கட்டமைப்பு, மரபுசார் போர் உத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமை மற்றும் அனைத்துலக ஆதரவை மிக ஆழமாக நம்பியிருந்தமை போன்றன புலிகளின் போரியல் பலவீனங்களாகக் காணப்பட்டன.
இரண்டாவதாக, புலிளைத் தோற்கடிப்பதற்கு மிகவும் உயரியதொரு மூலோபாய வெற்றி தேவைப்பட்டது.
அதாவது இராஜதந்திரம், பொருளியல், இராணுவ நடவடிக்கைகள், தகவல் நடவடிக்கைகள், இயலுமைகள் தொடர்பாக ஆராய்தல் உட்பட பல்வேறு புலனாய்வு சார் விடயங்களை உள்ளடக்கிய உயரியதொரு மூலோபாயத்தை சிறிலங்கா அரசாங்கம் வகுக்கவேண்டியிருந்தது.
இந்தவகையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது தனக்கு முன்னால் ஆட்சி செய்த அரசாங்கங்களால் வகுக்கப்பட்டு தோல்வியுற்ற குறுகிய இராணுவ மூலோபாயங்களை விடுத்து இதற்குப் பதிலாக ஒரு காத்திரமான முழுமையான மூலோபாயத்தை வகுக்கத் தீர்மானித்தது.
இதன் பிரகாரம், மிகவும் அடிமட்டச் செயற்பாடுகளை வழிகாட்டுவதற்காக ஒரு முழுமையான உயரிய மூலோபாயம் வகுக்கப்பட்டது.
பொருளாதார விடயத்தில், சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது மொத்தத் தேசிய உற்பத்தியின் நான்கு சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்குவதெனவும், இராணுவத்தினருக்கு வரவுசெலவுத் திட்டத்தின் 40 சதவீதத்தை ஒதுக்குவதெனவும் புதிய அரசாங்கம் தீர்மானித்தது.
இது சிறிலங்கா அரசின் வரையறுக்கப்பட்ட நிதி வளங்களை விட அதிகமாக இருந்ததால் சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர்களை மானியமாகவும் கடனாகவும் பெற்றுக் கொண்டது.
எண்ணெய் மற்றும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி உட்பட பல்வேறு நிதிசார் உதவிகள் ஈரான், லிபியா, ரஸ்யா மற்றும் பாகிஸ்தானால் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டன.
வெளிநாடுகளிலிருந்து தனக்குத் தேவையான 60 சதவீத இராணுவத் தளபாடங்கள் மற்றும் நிதியைப் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசாங்கமானது இராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய வெற்றிகரமான நடவடிக்கைகளால் 32 நாடுகளில் புலிகள் அமைப்புத் தடை செய்யப்பட்டது. இது சிறிலங்காவிற்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.
முக்கியமாக, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவு தொடரப்பட்டது. இந்தியா மட்டுமே சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தால் தீட்டப்பட்ட உயரிய மூலோபாயத்திற்குக் காத்திரமான பங்களிப்பையும் தலையீட்டையும் மேற்கொள்ளக்கூடிய ஒரேயொரு நாடாகக் காணப்பட்டது.
செப்ரெம்பர் 11 தாக்குதலின் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான ஆதரவை அனைத்துலக நாடுகளுக்கு வழங்கத் தொடங்கியது.
இந்த வகையில் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தால் உலகின் மிகவும் முன்னணி வாய்ந்த தற்கொலைக் குண்டுத்தாரிகளைக் கொண்ட விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவும் தனது ஆதரவை வழங்கியது.
வெளிநாடுகளில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவுகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலமும், புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டமை, கரையோரப் பாதுகாப்புக் கலம் ஒன்றை சிறிலங்காவுக்கு வழங்கியமை மற்றும் மிக முக்கிய தேசிய கடற்படைக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு முறைமை போன்றவற்றை வழங்கியதன் மூலமும் புலிகள் அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியது.
கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றன தத்தமது நாடுகளில் புலிகள் அமைப்பின் ஆதரவுக் குழுக்களால் புலிகளுக்காக செயற்பட்ட நிதிசேகரிப்பு வலைப்பின்னல்களை அழிப்பதற்கான சட்டத்தை இயற்றின. இதன்மூலம் புலிகள் அமைப்பின் நிதிப் பலமும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
சிறிலங்கா அரசாங்கமானது உள்நாட்டில் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டது. முன்னைய எந்தவொரு அரசாங்கங்களாலும் வெற்றிகொள்ளப்படாத யுத்தத்தை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் வெற்றி கொள்ளும் என்ற நம்பிக்கை இலங்கையர்கள் மத்தியில் ஏற்பட்டது.
இந்த அரசாங்கத்தின் போரியல் அணுகுமுறைகள் இத்தகையதொரு நம்பிக்கையைத் தோற்றுவித்தது. மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் உணர்ந்து கொண்டது.
போரை முன்னெடுக்கும் அதேவேளையில் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளத் தொடங்கியது. இதற்கும் மேலாக, வறுமையை ஒழிப்பதற்கான பல்வேறு தேசியத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
எடுத்துக்காட்டாக, ஏழை விவசாயிகளுக்கான உரமானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தகைய அபிவிருத்திச் செயற்பாடுகள் போருக்குத் தேவையான நிதிப்பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இதனால் வெளிநாடுகளின் நிதியுதவி தேவைப்பட்டது.
ஆனால் சமாதானத்திற்கான போர் என்பதை மக்கள் மத்தியில் நம்பச்செய்ய வேண்டியதும் மிகவும் அவசியமானதாக இருந்தது. இச்செயற்பாடுகள் தொடரப்பட்டன.
2005 இற்கு முன்னர், ஆண்டுதோறும் சிறிலங்கா இராணுவத்திற்காக 3000 வீரர்களை இணைத்துக் கொள்வது மிகவும் கடினமானதாகக் காணப்பட்டது. 2008ன் பிற்பகுதியில், மாதம் ஒன்றுக்கு 3000 இராணுவ வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டமை, மக்களின் ஆதரவு பெருகியமை போன்றன சிறிலங்கா இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணமாக இருந்தன.
குறிப்பாக 2005ல் 120,000 ஆகக் காணப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை 2009ல் 200,000 ஆக உயர்ந்தது.
மூன்றாவதாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட உயரிய போரியல் மூலோபாயத்தை நிறைவு செய்வதற்கு மதிநுட்பமான மூலோபாயத்தை வரையறுக்க வேண்டிய நிலையேற்பட்டது.
அதாவது எதிரியின் பலங்களை எதிர்த்து நிற்பதற்கான தயார்ப்படுத்தலை மேற்கொள்ளும் அதேவேளையில் எதிரியின் பலவீனங்களையும் பயன்படுத்துவதற்கான மதிநுட்பம்மிக்க மூலோபாயம் உருவாக்கப்பட வேண்டிய தேவை எழுந்தது.
புலிகளின் ஆளணி வளம் 20,000-30,000 ஆகக் காணப்பட்டது. இதனால் சிறிலங்கா அரசாங்கத்தின் மதிநுட்பமான மூலோபாயம் வெற்றிபெற்றது.
அதாவது 2006 நடுப்பகுதியில் நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் சிறிலங்காப் படைகள் ஏற்கனவே பாரியதொரு வெற்றியைப் பெற்றிருந்தன.
2004ன் பிற்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த கட்டளைத் தளபதியான கேணல் கருணா இந்த அமைப்பிலிருந்து விலகினார்.
இவருடன் 6000 வரையான புலி உறுப்பினர்கள் அமைப்பிலிருந்து பிரிந்தனர். இதனால் கிழக்கில் புலிகளின் நிலை மிக மோசமாக வீழ்ச்சியுற்றது.
கருணாவின் பிளவானது புலிகள் அமைப்பின் போரியல் தொடர்பான மிக முக்கிய புலனாய்வுத் தகவல்களைப் பெற உதவியது.
முக்கியமாக, முதன் முதலாக, சிறிலங்கா அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புக்கள் புலிகளின் பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை சேகரித்து அவற்றை அறிக்கையாக்குவதற்கு கருணாவின் பிளவு வழிவகுத்தது. இந்தப் பிளவானது புலிகள் அமைப்பு பலவீனம் அடையப் போவதை உறுதிப்படுத்தியது.
நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த போது, தமிழீழ விடுதலைப் புலிகளால் நாடு பூராவும் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது.
உயர் இலக்குகள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை புலிகள் நடத்தினர். சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்புச் செயலர், பாகிஸ்தான் உயர் ஆணையாளர், இராணுவத் தளபதி போன்ற உயர் இலக்குகளைக் குறிவைத்துப் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டனர்.
புலிகளின் இத்தகைய போரியல் திறன்கள் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவற்துறையினரின் அதிகரித்த ஆளணி மூலம் கட்டுப்படுத்தப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தால் சிவில் பாதுகாப்புப் படையினர் ஒவ்வொரு கிராமங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சிறிலங்காவின் தலைநகருக்குள் செயற்பட்ட புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை மையங்கள் கண்டறியப்பட்டு அவை நிர்மூலமாக்கப்பட்டன. இது புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த உதவின.
சிறிலங்கா அரசாங்கத்தால் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப் புலிகள் மீது முழுக்கவனத்தையும் செலுத்த வழிவகுத்தது.
சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதான இலக்காக புலிகள் மீதான தாக்குதல் காணப்பட்டது. புலிகளிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை விடப் புலிகளை அழிப்பதே சிறிலங்காப் படைகளின் பிரதான இலக்காகக் காணப்பட்டது.
புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் மீது சமநேரத்தில் பல்வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்மூலம் புலிகளைத் திணறடிப்பதே சிறிலங்காப் படைகளின் நோக்காகக் காணப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் மூலம் இவ்வாறான தந்திரோபாய நலனைப் பெறமுடிந்தது.
இந்த இராணுவ நடவடிக்கைகளில் சிறிய, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, உயர் நடமாடும் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்தக் குழுக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகளுள் ஊடுருவி உயர் பெறுமதி மிக்க இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டன.
புலிகளின் முன்னணி நிலைகளுக்கான வழங்கல்கள் மற்றும் தொடர்பாடலை இடையூறு செய்வதற்கான தாக்குதல்களில் இந்தக் குழுக்கள் ஈடுபட்டன.
சிறிய அணிகள் மட்டத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டு இவர்கள் புலிகளின் நிலைகள் மீது வான் மற்றும் ஆட்லறி, மோட்டார் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான கட்டளையை வழங்குவதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறான பல்வழி சமநேரத் தாக்குதல்கள் புலிகள் தமது நடமாடும் சுதந்திரத்தை இழப்பதற்கு வழிவகுத்தன. இதன்மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டனர்.
சிறப்புப் படைகள் உட்பட இராணுவ வீரர்களைக் கொண்ட சிறிய குழுக்கள் சிறிலங்கா தரப்பின் புதியதொரு போரியல் அணுகுமுறையாக உட்புகுத்தப்பட்டனர். நன்கு பயிற்சி வழங்கப்பட்ட சிறப்பு காலாற் படையினர் புலிகளின் நிலைகளுக்கு மிக நெருக்கமாகப் பணிபுரிந்தனர்.
புலிகளின் இராணுவத் தலைமைத்துவ இலக்குகள் மீதான தாக்குதல்களில் 10,000 வரையான சிறப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்மூலம் புலிகளின் கட்டளை வழங்கும் தளபதிகள் சிலர் கொல்லப்பட்டனர். இதனால் புலிகளின் கட்டளைச் சங்கிலியில் முறிவு ஏற்பட்டது.
‘நாங்கள் நான்கு பேரைக் கொண்ட சிறிய குழுக்களைப் போரில் ஈடுபடுத்தினோம். இவர்கள் ஆழமான காடுகளுக்குள் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயிற்றுவிக்கப்பட்டனர்.
இவர்கள் தம்மில் தாமே தங்கியிருந்து சுதந்திரமாகச் செயற்பட்டனர். ஆகவே ஒரு பற்றாலியனில் மிகப் பெரிய எண்ணிக்கையில் நான்கு பேரைக் கொண்ட குழுக்கள் காணப்பட்டன.
இக்குழுக்கள் மூலம் நாங்கள் பரந்தளவில் போரிடுவதற்கான சாதகமான சூழலைப் பெற்றோம்’ என இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டார்.
இவரே நான்கு பேரைக் கொண்ட சிறிய குழுக்களைப் போரில் ஈடுபடுத்துவதற்கான எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியிருந்தார். நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த போது 1500 சிறிய குழுக்கள் பயிற்றுவிக்கப்பட்டன. 2008ல் இந்த எண்ணிக்கை 30,000 ஆக உயர்ந்தது.
சிக்கலான அடர்ந்த காடுகளுள் ஆழ ஊடுருவிப் போர் செய்வதற்கான பயிற்சிகளைப் பெற்ற சிறிலங்கா இராணுவ வீரர்கள் பொதுவாக போரியல் ஆளுமையைப் பெற்ற, அதிக நம்பிக்கையைக் கொண்ட வீரர்களாகக் காணப்பட்டனர்.
இதன்மூலம் இவர்கள் இரவிலோ அல்லது பகலிலோ எந்தவேளையிலும் போரிடுவதற்கான ஆற்றலைப் பெற்றிருந்தனர்.
தந்திரோபாய மட்ட முயற்சிகள் மற்றும் புதிய போர் முறைமையைப் பெற்ற சிறிலங்கா இராணுவமானது முன்னுதாரணமான ஒரு அமைப்பாகப் பரிமாணம் பெற்றது.
அனைத்துலகில் செயற்பட்ட கிளர்ச்சிக் குழுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கடல் வழி ஏற்றுமதி இறக்குமதிகள் மற்றும் கேந்திரம் முக்கியத்துவம் மிக்க கடல்வழிப் போக்குவரத்துப் போன்றவற்றை தடுத்து நின்ற போரியல் ஆற்றல் மிக்க ஒரு அமைப்பாக புலிகள் அமைப்பு விளங்கியது.
இவ்வாறான தாக்குதல்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது சிறிய மற்றும் விரைவுப் படகுகளையும் கண்ணாடி இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட படகுகளையும் தாக்குதல் கலங்கள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், கரும்புலிகளைக் கொண்ட படகுகள் போன்ற பல்வேறு போரியல் அணுகுமுறைகளைப் புலிகள் கைக்கொண்டனர்.
நான்காம் கட்ட ஈழப்போரின் போது, புலிகளால் பயன்படுத்தப்பட்ட 30 தாக்குதல் கலங்கள் மற்றும் 8-10 கரும்புலிப் படகுகள் போன்றன சிறிலங்கா கடற்படையின் 60-70 கடல்மைல் வேக விரைவுத் தாக்குதல் கலங்களைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
சிறிலங்கா கடற்படையினரின் இத்தகைய கடற் தாக்குதல்கள் அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு முறைமையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது.
கடற் போக்குவரத்து நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பதினொரு பாரிய சரக்குக் கப்பல்களைப் பயன்படுத்தினர். இவை உலகம் பூராவும் புலிகள் தமக்கான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்பட்டன.
ஆனால் நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர், இந்தியா மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் புலிகளின் ஆயுதக் கப்பல்களை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து மூழ்கடித்தனர்.
இதில் சிறிலங்காவின் புதிய போரியல் முறைமையும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களும் பயன்படுத்தப்பட்டன.
புலிகளின் இறுதி ஆயுதக் கப்பல் 2007ன் பிற்பகுதியில் மூழ்கடிக்கப்பட்டது. சிறிலங்கா கரையிலிருந்து 3000 கிலோமீற்றருக்கு அப்பால் அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளுக்கு அருகில் இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
மேற்கூறப்பட்ட மூன்று காரணிகளின் ஒட்டுமொத்த விளைவாக சிறிலங்கா இராணுவம் தனது மூலோபாய இலக்கை அடைந்து கொண்டது.
அதாவது உயரிய போரியல் மூலோபாயம், சிறிய இராணுவக் குழுக்களைப் பயன்படுத்தி மதிநுட்பமாகக் கையாளப்பட்ட மூலோபாயம் போன்றன சிறிலங்கா அரசாங்கத்தின் போர் வெற்றிக்குக் காரணமாகியது.
இப்போரியல் மூலோபாயமானது புலிகள் அமைப்பை முற்றிலும் அழித்தது. சிறிலங்கா அரசாங்கமானது தனது போரியல் மூலோபாயத்தை மாற்றியமைத்து புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிரூபித்தது.
புலிகள் தமது மரபுசார் போரியல் உத்தியைத் தொடர்ந்தும் கையாண்டதன் மூலம் முன்னர் வெற்றியடைந்த போதிலும் பின்னர் தோல்வியடைய நேரிட்டது.
சிறிலங்கா அரசாங்கம் முன்னைய போரியல் முறைமை மூலம் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்த போதிலும் தனது புதிய போரியல் மூலோபாயம் மூலம் வெற்றியைப் பெற்றது.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களைக் கருத்திலெடுக்காது, இராணுவப்படையை மிகவும் அப்பட்டமாக, கொடூரமாகப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் போரை மேற்கொண்டதன் மூலமே அதனை வெற்றி கொள்வது சாத்தியமானது என சிலர் விமர்சிக்கின்றனர்.
போரானது இயற்கையான கொடூரம் மற்றும் வன்முறை மூலம் மேற்கொள்ளப்பட முடியும் எனவும் தொடர்ந்தும் அது மிக இலகுவான வழியில் மேற்கொள்ளப்பட முடியாது எனவும் சிலர் கூறுகின்றனர்.
எதுஎவ்வாறிருப்பினும், இவ்வாறான விமர்சனங்கள் மற்றும் வாதங்களைத் தாண்டி இக்கட்டுரையின் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது தனது போரியல் உத்தியை மாற்றியமைத்ததன் மூலமே போரை வெற்றி கொள்ள முடிந்தது என்பதை அழுத்தமாகக் கூறுவதே இதன் நோக்காகும்.
இதனைக் கண்டுபிடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு 22 ஆண்டுகளுக்கு மேல் பிடித்துள்ள போதிலும் தனது புதிய போரியல் மூலோபாயம் மூலம் சிறிலங்கா அரசாங்கம் போரில் வென்றுள்ளது.
இதனடிப்படையில், மேற்குலக நாடுகளின் தலைமையில் கிளர்ச்சிகளை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு இரண்டு போர்கள், அதில் கொல்லப்பட்ட வீரர்கள், பொதுமக்கள் போன்றவற்றின் விபரம் வருமாறு:
இந்த அட்டவணை மூலம் மூன்று வெவ்வேறு உள்நாட்டு யுத்தங்களில் கிளர்ச்சிக் குழுக்களை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட போரியல் மூலோபாயத்தின் விளைவாகப் கொல்லப்பட்டவர்களின் வீதங்கள் தரப்பட்டுள்ளன.
இவற்றுள் ஈராக் போரில் கொல்லப்பட்டவர்களில் 61 சதவீதத்தினர் பொதுமக்களாவர். ஆப்கானிஸ்தானில் இது 25 சதவீதமாகும். சிறிலங்கா போரில் படுகொலை செய்யப்பட்டவர்களுள் 34 சதவீதத்தினர் பொதுமக்களாவார்.
ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா போரானது ஏமாற்றப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டது போல் தெரிகிறது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர்கள் வெற்றி கொள்ளப்படவில்லை. இங்கு சமாதானமும் எட்டப்படவில்லை. மக்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்படுகின்றனர்.
சிறிலங்காவில் 2009 உடன் துப்பாக்கிகள் மௌனமாகி விட்டன. இங்கு ஏழு சதவீதத்தால் மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்துள்ளது. வேலையற்றோர் பிரச்சினை குறைவாக உள்ளது. தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.
பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையாத சிறிலங்கா, உள்நாட்டுப் போரை வெற்றி கொண்டு நாட்டில் அமைதியை உருவாக்கியுள்ளது.
ஆகவே போரில் வெற்றி கொள்வதற்கு உகந்த மூலோபாயம் வரையறுக்கப்படுவது மிகவும் முக்கியமானதாகும்.
* Peter Layton has considerable defense experience and a doctorate in grand strategy.
‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.