சென்னை: பெரியார் திடலில் இன்று காலையில் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள் தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடைபோட்டனர் பெண்கள்.
இது என்ன அதிசயமாக இருக்கிறதே… தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை.
தாலி அகற்றும் போராட்டம்
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி, திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். உயர்நீதிமன்ற உத்தரவுடன் போலீஸ் பாதுகாப்போடு தாலி அகற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவு
உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை நடைபெறும் முன்பாகவேது இன்று காலை 7 மணிக்கு பெரியாரி திடலில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடங்கியது. 10 மணிக்குள்ளாகவே தாலிகளை அகற்றி போராட்டத்தை நடத்தி முடித்தனர்.
அக்னி சாட்சியாக உறவினர்கள் புடைசூழ மேள தாளம் முழங்க கண்ணீர் மல்க கணவர் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்ட பெண்கள் இன்று பெரியார் திடலில் சட்டென்று கழற்றி சந்தோசமாக கையில் கொடுத்தனர். அப்போது ஏராளமானோர் உற்சாமாக கைகள் தட்டி வரவேற்பு கொடுத்தனர்.
மாட்டுக்கறி பிரியாணி
தாலி அகற்றும் போராட்டம் நடைபெற்று முடிந்த பின்னர் அங்கு வந்திருந்த அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி போடப்பட்டது. தாலியை அகற்றிய பெண்களும்… அதை கையில் வாங்கியவர்களும் மாட்டுக்கறி பிரியாணி விருந்துண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
இத்தனை களேபரங்களும் நடந்து முடிந்த பின்னர் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு பெரியார் திடலுக்கு வரும் முன்னர் போராட்டம் முடிந்து போயிருந்தது.