இந்தியா செல்லும் இலங்கை பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் On Arrival வீசா நடைமுறை கடந்த 14ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் இலங்கை வந்தபோது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே இந்த சந்தர்ப்பம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவனந்தபுரம், புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் இலங்கையர்கள் 30 நாட்களுக்கு தங்கக் கூடியவாறு வீசா பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தியா ஏற்கனவே 43 நாடுகளுக்கு ‘On Arrival Visa’ என்னும் விமான நிலையத்தில் வீசா பெற்றுக் கொள்வ தற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் இலங்கை 44வது நாடாக அந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது வழமையிலுள்ள வீசா வழங்கும் சேவைக்கு மேலதிகமாகவே இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கைப் பிரஜைகளும் பாக்கிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட இலங்கை பிரஜைகளும் விமான நிலையத்தில் வீசா பெற்றுக் கொள்ளும் நடைமுறையில் உள்வாங்கப்பட மாட்டார்கள்.
இதனைத் தவிர இளைப்பாறுவதற்கு, சுற்றுபார்ப்பதற்கு, நண்பர்கள் அல்லது உறவினர்களை பார்வையிடுவதற்கு, குறுகிய கால மருத்துவ சிகிச்சைகளுக்கு சிறிய வியாபார நோக்கம் ஆகியவற்றுக்காக சாதாரண கடவுச்சீட்டு வைத்திருக்கும் எந்தவொரு இலங்கைப் பிரஜையும் விமான நிலையத்தில் வைத்து வீசாவை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இதற்கான விண்ணப்பதாரி இந்தியாவில் தனது வீட்டையோ அல்லது தொழிலையோ கொண்டிருக்க முடியாது. விண்ணப்பதாரி இந்தியாவை சென்றடைந்த நாள் முதல் ஆகக்குறைந்தது ஆறு மாதங்களுக்காவது செல்லுபடியாகும் கடவுச்சீட்டை தம்வசம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரிகள் இந்தியா செல்வதற்கு முன்னர் ஒன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து ETA (Electronic Travel Authorizition இணை பெற்றிருப்பதுவும் இதற்கு அவசியமாகும்.
ஒன்லைன் வீசாவானது இந்தியாவுக்குள் சென்ற நாளிலிருந்து 30 நாட்களுக்கே செல்லுபடியாகும். இந்த வீசாவினை நீடிக்க முடியாது.
இதனை பிறருக்கு மாற்றம் செய்ய முடியாது. பாதுகாக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குள் இந்த வீசாவுடன் பிரயாணம் செய்ய முடியாது.
பெங்களூர், சென்னை, புதுடில்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, முப்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 09 விமான நிலையங்களைத் தவிர்ந்த ஏனைய விமான நிலையங்களுக்கூடாக செல்ல முடியாது.
இருப்பினும் இந்தியாவின் எந்தவொரு குடியகல்வு சோதனை சாவடிக்கூடாகவும் வெளிவர முடியும்.
விண்ணப்பதாரி விமான பயணச் சீட்டு, இந்தியாவில் தனது செலவுக்கான பணம் ஆகியவற்றுடன் ரிஹிதி பிரதியொன்றினையும் தன்னுடன் வைத்திருத்தல் வேண்டும்.
இந்த புதிய நடைமுறைக்கு விசேட கொடுப்பனவாக 60 அமெரிக்க டொலர்களும் இடைப் பரிமாற்ற சேவைக்காக 02 அமெரிக்க டொலர்களைகளும் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு முன்னர் இந்த கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் இந்த கட்டணம் திருப்பிச் செலுத்தப்பட மாட்டாது.