போலி மோதல் படுகொலைகளை சவுக்கு எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்று கருதப்பட்ட 5 பேரை சுட்டுக் கொன்றதாக இருந்தாலும் சரி, திண்டுக்கல் பாண்டியை சுட்டுக் கொன்ற சம்பவமும் சரி, எல்லா போலி என்கவுன்டர்களையும் சவுக்கு எதிர்த்தே வந்திருக்கிறது.

ஒரு பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியை ஒருவன் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கினான் என்றால் கூட, அவனையும் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்வதில் உடன்பாடு கிடையாது.

11050262_985409268159118_2079248560125334807_nபத்து வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குபவன் எப்படி சாதாரண மனநிலையில் இருக்க முடியும் ? அவன் மனநிலை பிறழ்ந்தவன்தானே ? அப்படி மனநிலை பிறழ்ந்தவனுக்கு உரிய தண்டனை வழங்கி, இறுதி வரை அவனை சிறையில் வைத்திருக்க வேண்டியதே ஒரு வளர்ந்த ஜனநாயகத்துக்கு அழகு.

நாம் ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டு, ஒரு சில குற்றங்களுக்கு மட்டும் என்கவுண்டர்களை ஆதரித்து வந்தோமேயென்றால், சித்தூரில் நடந்தது போலத்தான் நடக்கும்.

போலி மோதல் படுகொலைகளை ஒரு நாளும் ஆதரிக்க முடியாது. இன்று ஒரு சில குற்றங்களுக்காக காவல்துறை நடத்தும் போலி மோதல் படுகொலைகளை ஆதரித்தோமேயென்றால், நாளை, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களுக்கு பிடிக்காதவர்களை இப்படித்தான் சுட்டுக் கொல்வார்கள்.

உதாரணத்துக்கு, ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். ஜுலை 2012ல், திருநெல்வேலி மாவட்டத்தில் வானுமாமலை என்ற இளைஞரை, காவல்துறை ஆய்வாளர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக் கொன்றார்.

விஷயம் என்னவென்றால், அந்த இளைஞருக்கும், அந்த ஆய்வாளருக்கும் தொலைபேசியில தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதை மனதில் வைத்து அந்த ஆய்வாளர் மறுநாள் ஜீப்பில் வந்து, அந்த இளைஞரை எவ்வித காரணமும் இன்றி சுட்டுக் கொன்றிருக்கிறார். அந்த சாதாரண இளைஞரை மணல் கடத்தல் காரன் என்று சித்தரித்தது காவல்துறை.

காவல்துறையின் செய்திகளை விசாரிக்காமல் அப்படியே வெளியிடும் ஊடகங்களும், இச்செய்தியை அப்படியே வெளியிட்டன.

இறந்து போன வானுமாமலையின் மனைவிக்கு அரசு வேலை அளிப்பதாக உத்தரவாதம் அளித்து, இந்த வழக்கை அப்படியே முடித்தது காவல்துறை.

used-889x1024
குழந்தைகளோடு, இறந்துபோன வானுமாமலையின் உடலை வைத்து கதறும் அவர் மனைவி

இதே போலத்தான் சென்னை வேளச்சேரி வங்கிக் கொள்ளையர்களின் படுகொலையும், ராமநாதபுரத்தில் இஸ்லாமிய இளைஞரின் படுகொலையும் சம்பிரதாயமான விசாரணைகளோடு மூடி மறைக்கப்பட்டன.

இது போன்ற படுகொலைகளை, நடுத்தர வர்க்கத்தினர் தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருப்பதால்தான், காவல்துறை எவ்விதமான அச்சமும் இன்றி, இது போன்ற போலி மோதல் படுகொலைகளை அப்பட்டமாக அரங்கேற்றி வருகிறது. அதன் வெளிப்பாடே, ஆந்திர மாநிலத்தில் நடந்த 20 பேரின் படுகொலைகள்.

ஆந்திராவில் நடந்த இந்த என்கவுன்டர் போலி என்கவுன்டர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

சம்பவம் நடந்த உடனே செய்தியாளர்களிடம் பேசிய இந்த அதிரடிப்படையின் தலைவர் டிஐஜி காந்தாராவ், இவ்வாறு கூறினார் ““As soon as they saw police, at least 150 to 200 labourers, hired by the smugglers, rained stones, shot arrows and threw sticks and iron rods. They hid behind boulders and attacked. At least eight forest officers were injured and the task force opened fire in self-defence. At least 20 were killed. They are hired daily wagers from Tamil Nadu. We believe they had been camping here since Monday evening.”

அதாவது காவல்துறையைப் பார்த்ததும் 150 முதல் 200க்கும் மேல் இருந்த கூலித் தொழிலாளிகள் இரும்பு கம்பிகள், மரக் குச்சிகள், அம்புகள், கற்கள் போன்றவற்றை வைத்துத் தாக்கினார்கள்.

இதில் குறைந்தது எட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தற்காப்புக்காக சுட்டதில் 20 பேர் இறந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

இவர் கூறியபடி காயம்பட்ட அந்த வனத்துறை அதிகாரிகளின் பெயர் என்ன, அவர்கள் எங்கே சிகிச்சை எடுக்கிறார்கள், எந்த மாதிரியான காயம் அவர்களுக்கு ஏற்பட்டது என்பது குறித்து எவ்விதமான தகவலும் இது வரை வெளிவரவில்லை. ஊடகங்களும் இத்தகவலை சரிபார்க்க முயலவில்லை.

இறந்து போனவர்களில் ஏழு பேர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சேலம் மற்றும் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இந்த 12 பேரில், 5 பேர் ஜமுனாமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும், மலையாள பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு விவசாயம் செய்ய நிலமும் இல்லை, கூலி விவசாயம் செய்வதற்கு அங்கே விவசாயமும் நடைபெறவில்லை.

கண்ணமங்கலம் என்ற இடத்துக்கு அருகாமையில் உள்ள ஆனந்தபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், அவருக்கு சொந்தமான நான்கு பனைமரங்களை 1000 ரூபாய்க்கு சமீபத்தில் விற்றுள்ளார்.

ஏன் என்று கேட்டபோது எங்களுக்கு பிழைக்க வேறு வழியே இல்லை. அதனால் எங்கள் கால்நடைகளையும், மரங்களையும் விற்று பிழைப்பை நடத்துகிறோம் என்கிறார்.

சரி இதையெல்லாம் விற்ற பின்னால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், கிடைக்கும் வேலையைச் செய்வோம் என்கிறார்.

இந்த இடத்தில்தான் இடைத்தரகர்கள் வருகிறார்கள். வேறு எந்த வேலை வாய்ப்பும் இல்லாத நிலையில், கிடைக்கும் வேலைகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

தரகர்கள் ஆந்திராவிலோ, கேரளாவிலோ மரம் வெட்டும் பணிக்கு இவர்களை அழைத்துச் செல்கையில் 500 முதல் 1000 ரூபாய் வரை கிடைக்கிறது.

நான்கு பனை மரங்களை விற்றுக் கிடைக்கும் பணம், ஒரு நாள் கூலியாக கிடைக்கையில் இவர்களுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்.

மேலும் ஜவ்வாது மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு, நாம் தமிழகத்தில் வாழ்கிறோம், இந்தியாவில் வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லை.

அரசியல்வாதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பார்க்கிறார்கள். அரசாங்கத்தில் வேலை வாய்ப்புக்கு என்று திட்டங்கள் இருக்கிறதென்பதே இவர்களுக்கு சற்றும் தெரியாமல் இருக்கிறது.

எங்கே வேலை கிடைக்கிறதோ, அங்கே செல்கிறார்கள். சாதாரண மரம் வெட்டுவதும், செம்மரங்களை வெட்டுவதும் இவர்களுக்கு ஒன்றுதான்.

இப்படித்தான் இவர்கள் மரம் வெட்டும் வேலைக்கு சென்றபோது, பேருந்தில் இருந்து இறக்கி ஆந்திர மாநில காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னை நகரில் நாகரீக வளர்ச்சியின் எல்லா பயன்களையும் அனுபவித்துக் கொண்டுள்ள நாம், நமக்கு வெகு அருகாமையில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், வயிற்றைக் கழுவவே உயிரைப் பணயம் வைத்து வேலை செய்ய வேண்டிய ஒரு சமூகத்தை வைத்திருபபதற்கு வெட்கப்பட வேண்டும்.

நம்மை விட, மாறி மாறி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இரு திராவிடக் கட்சிகளும் வெட்கப்பட வேண்டும்.

ஆந்திர மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவல் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானோரை மரத்தில் கட்டி, கீழே தீ வைத்து உயிரோடு எரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

பின்னர் அந்த திட்டத்தை மாற்றி, சுட்டுக் கொன்று, தற்காப்புக்காக சுட்டோம் என்ற கதையை பரப்பி வருகிறார்கள்.

இறந்தவர்களில் பலரின் உடலில் தோல் வழன்று, எரிந்த தீக்காயங்களோடு இருப்பதன் காரணம் இதுதான். உயிரோடு ஒருவரை எரிக்க முனையும், ஆந்திர காவல்துறையினர் எப்படிப்பட்ட கொடூர மனம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.

DSC07417-1024x575p12dIMG_20150407_150742DSC07418

தலை சிதைக்கப்பட்டு மூளை சிதறிக் கிடக்கும் காட்சி
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் இரு குழுக்களுக்கு இடையே உள்ள போட்டியில் காவல்துறையை பயன்படுத்தி, இந்த படுகொலைகள் அரங்கேற்றப் பட்டிருக்கலாம் என்று பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அது ஒரு புறம் இருக்கட்டும்.

இறந்த அனைவரும் தமிழர்கள். நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 21ம் நூற்றாண்டிலும், சாலை வசதி இல்லாத, பள்ளி வசதி இல்லாத ஒரு ஊர் தமிழக்ததில் இருக்கிறது என்பதை விட வேறு அவமானம் என்ன வேண்டும் நமக்கு ? “மூன்றாண்டு ஆட்சி முழுமையான வளர்ச்சி” என்ற கிரிமினலின் போலிக் கூப்பாட்டின் லட்சணம் இதுதான்.

அந்தப் பகுதிக்கு சென்று வந்த ஒரு பத்திரிக்கையாளர் “அந்தப் பகுதி மக்களுக்கும் சென்னைக்கும் சம்பந்தமே இல்லை.

அவர்களோடு நாம் உரையாட சென்றபோது, நம்மை வேற்று கிரகவாசிகள் போல பார்த்தார்கள். அங்கே உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள், ஆந்திராவிலோ, கேரளாவிலோ பணியாற்றுகிறார்கள்.

தமிழகத்தில் அவர்களுக்கு வேலையே இல்லை. அங்க உள்ள சிறு குழந்தைகளிடம் உரையாட முயற்சித்தபோது அவர்கள் வெறித்துப் பார்க்கிறார்களே தவிர, நாம் பேசுவது தமிழில் இருந்தாலும் அவர்களுக்குப் புரியவில்லை.

சென்னைக்கு அருகிலேயே இப்படி நாகரீகத்துக்கு அப்பால், அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட ஒரு ஊரும் மக்களும் இருக்கிறார்கள் என்பதே நமது ஜனநாயகத்துக்கு அவமானம்” என்றார் அவர்.

encounter7இதை விட ஒரு மோசமான அவமானகரமான சம்பவத்தை அரங்கேற்றியது பாட்டாளி மக்கள் கட்சி.

இறந்து போனது மொத்தம் 20 பேராக இருந்தாலும், அவர்களில் வெறும் ஆறு பேருக்கு மட்டும், அதாவது அந்த ஆறு பேரும் வன்னியர்கள், அவர்களுக்கு மட்டும் மறு போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த சம்பவம் நடந்தது ஆந்திர மாநிலத்தில் என்பதால், இந்த நீதிமன்றத்துக்கு மறு போஸ்ட் மார்ட்டம் நடத்த உத்தரவிட அதிகாரம் இல்லை என்று நீதிபதி கூறியபோது, பாமக வழக்கறிஞர் பாலு, இது மனித உரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கூறியுள்ளார்.

மனித உரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்றால், ஏன் வெறும் ஆறு உடல்களுக்கு மட்டும் மறு போஸ்ட் மார்ட்டம் கோருகிறீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு நினைத்தால் மறு போஸ்ட் மார்ட்டம் செய்யலாம் என்று நீதிபதி கோரியபோது, அரசு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி நீதிமன்றம் உத்தரவிட்டால் செய்கிறோம் என்றார்.

இந்த ஆறு உடல்களை ஏப்ரல் 17ம் தேதி வரை பாதுகாத்து வைக்குமாறு உத்தரவிட்டார் நீதிபதி. தமிழகத்தின் முதல்வராகும் கனவோடும், தமிழகத்தின் அரவிந்த் கேஜ்ரிவால் என்று தன்னை கருதிக் கொள்ளும் அன்புமணி ராமதாஸின் கட்சியின் நிலைபாடு இதுதான்.

Ramadossஇவர்கள் என்றுமே வன்னியர் கட்சியாக மட்டுமே இருப்பார்கள் என்பதையே இந்த நடவடிக்கை உணர்த்துகிறது.

இறந்துபோன ஜவ்வாது மலையைச் சேர்ந்த போயர்களின் வீட்டுக்கு சென்ற பத்திரிக்கையாளர், அவர்கள் நிலைமை மிக மிக பரிதாபகரமாக இருப்பதாக கூறினார்.

உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படுகையிலேயே ஓரளவு அழுகத் தொடங்கியிருந்தது என்றும், மலை கிராமங்களில் ஐஸ் பெட்டிகள் வைக்கும் வசதி இல்லாத காரணத்தால், பல வீடுகளில் உடல்கள் நாற்றமெடுக்கத் தொடங்கியிருந்தது என்றார்.

ஒரே ஒரு காவல்துறை அதிகாரியோ, ஒரே ஒரு அரசு அதிகாரியோ கூட அந்த வீடுகளில் இல்லை என்றார். இறந்த உடலின் அருகே அந்த நாற்றத்தை சகித்துக் கொண்டு, மனைவி மட்டும் அமர்ந்திருந்தார் என்றார் அந்த பத்திரிக்கையாளர்.

கூலிக்காக மரம் வெட்டச் சென்றவர்களில் இது வரை ஏறக்குறைய 2000ம் பேருக்கும் மேல் ஆந்திர சிறைகளில் இருக்கிறார்கள் என்ற விபரம் தமிழக அரசுக்கு நன்றாகத் தெரியும். ஊழல் செய்து, ஊரார் பணத்தை அடித்து உலையில் போட்டு சிறை சென்ற ஜெயலலிதாவால் 22 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க முடியாமல் தவித்தபடி என்ன நிபந்தனையென்றாலும் ஏற்றுக் கொண்டு ஜாமீனில் வெளிவந்தார்.

இந்தியாவின் தலைச்சிறந்த வழக்கறிஞரை வைத்து, தன் ஜாமீனுக்காக வாதாடினார். இவரைப் போலத்தானே இந்த 2000 பேர்களும் சிறைகளில் இருக்கிறார்கள்.

இவர்களை சிறையிலிருந்து வெளியேற்ற தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ? அவர்களுடையது உயிர் இல்லையா ? அவர்களுக்கு குடும்பம் இல்லையா ? தெரிந்தே ஊழல் செய்து சிறை சென்றார் ஜெயலலிதா.

ஆனால் இந்த அப்பாவித் தொழிலாளர்கள் பிழைக்க வழியின்றி கூலிக்காக மரம் வெட்டச் சென்று மாட்டிக் கொண்டுள்ளார்கள்.

தற்போது, இந்த பிரச்சினையை அமைதியான வழியில் மூடி மறைக்க, தமிழகத்தில் உள்ள தெலுங்கு லாபி வேலைசெய்து வருகிறது என்ற அதிர்ச்சியான தகவலும் வந்த வண்ணம் உள்ளது.

முதல்வரின் செயலாளராக உள்ள ராம் மோகன ராவ் என்பவர் தெலுங்கர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இந்த படுகொலை தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதப்பட்ட மென்மையான கடிதத்தின் பின்னணியில் இந்த ராம் மோகன ராவே இருக்கிறார் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள்.

மேலும், ஐதராபாத்தில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள் உள்ளன. மேலும் ஜெயலலிதாவின் புதிய பினாமி நிறுவனங்களில் ஒன்றான ஹரிசந்தானா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், பிரபாவதி சிவக்குமாரின் கணவர் கே.எஸ்.சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் கலியபெருமாள் ஆகியோர் இயக்குநராக இருக்கும் இந்த நிறுவனத்தின் தலைமையகம், ஐதராபாத் நகரில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்பதை எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ?

Untitled-12-713x1024

Rama_Mohana_r2ao_IAS
முதல்வரின் செயலாளர் ராம் மோகன ராவ்
நியாயப்படி தமிழக அரசு செய்திருக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்றால், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.

ஒரு தனி நபரோ, அல்லது மனித உரிமை அமைப்போ, தொடுக்கும் வழக்கை விட ஒரு மாநில அரசு தொடுக்கும் வழக்குக்கு முக்கியத்துவம் உண்டு. காவிரி பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சினை போன்றவற்றுக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்  தமிழக அரசுக்கு இந்த விவகாரத்தில் ஆந்திர உயர்நீதிமன்றத்தையோ, அல்லது உச்சநீதிமன்றத்தையோ அணுகுவதை தடுப்பது எது ?

ராம் மோகன ராவ் ஐஏஎஸ் போன்ற தெலுங்கு அதிகாரிகளும், ஏ.எல்.சோமாயாஜி போன்ற தெலுங்கு அரசு தலைமை வழக்கறிஞர்களுமே. தமிழ்நாட்டிலேயே தமிழனுக்கு நீதி கிடைக்காத ஒரு அவல நிலைதான் இங்கே நிலவுகிறது.

இந்த படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிலர், சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிடேஜ் கடைகளை அடித்து நொறுக்கி தங்கள் வீரத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கடைகளை அடித்து நொறுக்குவதால், அங்கே வேலை செய்யும் ஒன்றிரண்டு தமிழர்களும் வேலை இழப்பதைத் தவிர இதனால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

தருமபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் வறட்சியான மாவட்டங்கள், அங்கே விவசாயம் பெரிய அளவில் கிடையாது என்பது, தமிழக ஆட்சியாளர்கள் அனைவருக்குமே தெரியும்.

இந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை. இலவச மிக்சி க்ரைண்டர்களை வழங்க ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கும் தமிழக அரசு, இம்மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் எவ்வித முனைப்பும் காட்டவில்லை என்பதே யதார்த்தம்.

தமிழக அரசின் பெரும் வருவாய், டாஸ்மாக் விற்பனையை மட்டுமே நம்பியுள்ளது. டாஸ்மாக்கின் ஆயத்தீர்வை மூலமாக 1112 கோடி ரூபாயும், கூடுதல் விற்பனை வரி மூலமாக 2150 கோடி ரூபாயும், டாஸ்மாக் மூலமாக மட்டுமே வருகின்றன.

தங்கம், கரும்பு, சர்க்கரை போன்ற பல்வேறு பொருட்களைத் தவிர்த்து, திருமண மண்டபங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு நிலையங்கள் ஆகியவற்றுக்கு மதிப்புக் கூட்டு வரியை அதிகரித்ததன் மூலமாக கூடுதலாக 1737 கோடி வரி வருவாய் வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட கனிமப் பொருட்களை ஏலம் விடுவதன் மூலமாக ஒரு 5000 கோடியும், பொது வினியோகத் திட்டத்தில் பருப்பு போன்ற பொருட்களின் அளவை குறைப்பதன் மூலமாகவும் வருவாயைக் கூட்ட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

இப்படி கடுமையான நிதிப்பற்றாக்குறையில் தமிழக அரசு தள்ளாடுவதால், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தவோ சுத்தமாக நிதி இல்லாமல் தள்ளாடுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே ஒரு புதிய தொழிற்சாலை கூட தமிழகத்தில் தொடங்கப்படவில்லை. புதிய வேலை வாய்ப்புகள் எங்குமே உருவாக்கப்படவில்லை.

எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளேடு, 2010-2011ல் 13.12% ஆக இருந்த தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 2014ல் 4.14% ஆக குறைந்துள்ளது என்று குறிப்பிடுகிறது.

பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இத்தனை மோசமான வீழ்ச்சி இருந்தால் இது வேலை வாய்ப்பில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

கடந்த ஆட்சி காலத்தில் 4 முதல் 8 சதவிகிதமாக இருந்த வசூல் அளவு, இந்த அரசில் 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. 20 சதவிகிதம் லஞ்சமாகத் தந்து விட்டு, எந்த தொழில் அதிபரால் தமிழகத்தில் தொழில் செய்ய முடியும் ?

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் மூன்று தயாரிப்பு யூனிட்டுகளை வைத்திருந்தது. நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதை அடுத்து, படிப்படியாக தனது தயாரிப்பை நிறுத்திய ஃபாக்ஸ்கான், மொத்தமாக தனது தொழிற்சாலையை மூடியுள்ளது.

தமிழகத்தில் தனது தொழிற்சாலையை மூடியுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம், நொய்டாவிலும், குஜராத்திலும், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியிலும் தனது தொழிற்சாலையை திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இணைப்பு பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது காருக்கான உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அரக்கோணத்தில் நிறுவ முயற்சி செய்து, தமிழக தொழில்துறை அமைச்சர் கேட்ட அதிப்படியான லஞ்சத்தை தர முடியாத காரணத்தால் குஜராத்துக்கு மாறியது.

காற்றாலை மின் உற்பத்தியாளர்கள், சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் ஆகிய அனைவரும், பிற மாநிலங்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள்.

தமிழகத்தின் நலனை பாதுகாத்து, வேலை வாய்ப்பையையும் உட்கட்டமைப்பு வசதியையும் பெருக்கி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய அமைச்சர் பெருமக்களோ, கிரிமினலின் விடுதலைக்காக யாகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

சாதாரணமாக நகரத்தில் வாழ்வபர்களே, தங்கள் வாழ்வாதாரத்துக்காக சிரமப்படுகையில், அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் பின் தங்கிய விளிம்பு நிலை மக்கள் எங்கே செல்வார்கள் ?

கூலிக்காக வேலைக்கு அழைக்கையில், அவர்கள் செம்மரம் வெட்ட அழைக்கிறார்களா, சந்தனமரம் வெட்ட அழைக்கிறார்களா அல்லது வேப்ப மரம் வெட்ட அழைக்கிறார்களா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை. அன்று வேலை பார்த்தால் வயிற்றுக்கு உணவு என்ற நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் இன்று ஆந்திர மாநில காவல்துறையால் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம், ஆந்திர அரசு அல்ல.

இம்மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாத தமிழக அரசே இதற்கு முழுக் காரணம். இம்மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தாவிட்டால், இது போன்ற படுகொலைகள் தொடரத்தான் செய்யும்.

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்.

முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

நன்றி : புகைப்பட உதவி இந்தியன் எக்ஸ்பிரஸ், புது தில்லி மற்றும் இணையம்.

Photos courtesy : Indian Express, New Delhi and internet.

நன்றி.
http://www.savukkuonline.com

Share.
Leave A Reply