நெல்லை: காதல் மாணவனுடன் மாயமான ஆசிரியை புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதால் தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம், கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார்.

இவரது மகன் சிவசுப்பிரமணியன் (15). தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற அவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கடையநல்லூர் போலீசில் மாணவனின் தாய் மாரியம்மாள் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வந்த நிலையில், சிவசுப்பிரமணியன் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை காலாங்கரை சங்கர சுப்பிரமணியன் தெருவைச் சேர்ந்த கேசரி மகள் கோதைலட்சுமி (23) என்பவருடன் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

அதே நேரம் தனது மகளை காணவில்லை என்று கோதைலட்சுமியின் தந்தை செங்கோட்டை போலீசில் புகார் செய்திருக்கிறார்.

அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவன்–ஆசிரியை இடையே காதல் மலர்ந்து இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளது தெரிய வந்தது.

10 நாட்களுக்கு மேல் ஆகியும் மாணவனும், ஆசிரியையும் எங்கு சென்றார்கள் என்ற விவரம் தெரியாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிவசுப்பிரமணியனும், ஆசிரியை கோதை லட்சுமியும் சென்னை கும்மிடிபூண்டி அருகே மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து, கடையநல்லூர் போலீசார் தலைமையிலான தனிப்படை போலீசார், கும்மிடிப்பூண்டிக்கு வந்து ஆசிரியை–மாணவனை தேடினர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை.

கடந்த 15 நாட்களாக ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கும் காதல் ஜோடி நகைகளை அடகு வைத்து செலவு செய்வதாக தொிகிறது.

இவர்களை பிடிப்பதற்காக புளியங்குடி டி.எஸ்.பி. வானுமாமலை தலைமையில் ஒரு தனிப்படையும் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.

ஊரில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி பல இடங்களில் சுற்றித் திரிந்துவிட்டு இரு நாட்களுக்கு முன் சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி சென்றுள்ளனர்.

அங்கு எரவூர் என்ற இடத்தில் தனியார் பள்ளியில் கோதைலட்சுமி வேலை கேட்டுள்ளார். அவரது ஊர் பெயர் விவரம் விசாரித்த பள்ளி நிர்வாகத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இவர்களை பற்றிய செய்தி ஊடகங்களில் வந்துள்ளதால் உஷரான பள்ளி நிர்வாகம் இதுகுறித்து அங்குள்ள போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையறிந்த ஆசிரியை கோதைலட்சுமி, போலீஸ் பிடியில் சிக்கினால் சிக்கல் என கருதி அங்கிருந்து காதலனுடன் பஸ் ஏறி புதுச்சேரிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

தற்போது அவர்கள் புதுச்சேரியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதால் தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

இதற்கிடையே, மாயமான ஆசிரியை கோதை லட்சுமி ஃபேஸ் புக்கில் வேறு பெயரில் கணக்கு வைத்துள்ளதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

………………..

காதல்  ஜோடியை பிடிப்பதற்காக தமிழக போலிசார் எவ்வளவு அக்கறையாக செயல்படுகிறார்கள் பாருங்கள்.

நாட்டில எத்தைனையோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு… போன்ற குற்றங்கள் நடக்கின்றன. அவற்றில்   இவ்வளவு தூரம்  அக்கறை காட்டமாட்டார்கள்.

காதல் ஜோடியை  பிடித்தால்   ஊடகங்களில்  செய்தி  வருமல்லவா?

“என்னவோ  ஏதோ  நடக்கக்கூடாத விடயம் நடந்துவிட்டது”  மாதிரி  தமிழக செய்தி ஊடகங்களும்  இந்த செய்தியைதான்   முன்னிலைப்படுத்தி   பிரச்சாரம்  செய்துகொண்டிருக்கிறார்கள்.

Share.
Leave A Reply