சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் ஆலயத்தில், தனது எடைக்கு இணையாக 77 கிலோ சந்தனக்கட்டைகளை துலாபாரம் கொடுத்து, வழிபாடு செய்தார்.
இன்று காலை சிறிலங்கன் விமானம் மூலம், மனைவி மைத்ரியுடன் கொச்சினை வந்தடைந்த ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து புகழ்பெற்ற குருவாயூர் ஆலயத்தில் காலை 11.15 மணியளவில் வழிபாடு நடத்தினார்.
இதன்போது, ரணில் விக்கிரமசிங்க தனது எடைக்கு இணையாக- 8.45 இலட்சம் ரூபா பெறுமதியான 77 கிலோ சந்தனக் கட்டைகளை துலாபாரமாக கொடுத்தார்.
சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும், ரணில் விக்கிரமசிங்கவுட்டன் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இதையடுத்து மமியூர் மகாதேவா ஆலயத்திலும் ரணில் விக்கிரமசிங்க குழுவினர் வழிபாடகளை மேற்கொண்டனர். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் தொடர்பான விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களால், அவருக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று, மத்திய, மாநிலப் புலனாய்வுப் பிரிவுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
வழிபாடுகளை முடித்துக் கொண்டு விடுதியொன்றில் தங்கியுள்ள ரணில், இன்று பிற்பகல் 4.15 மணியளவில் கொச்சினில் இருந்து புறப்படும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பு திரும்பவுள்ளார்.
இதனிடையே, குருவாயூரில் வழிபாடுகளை முடித்தபின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரணில், தான் இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ சார்பானவன் அல்ல என்றும், சிறிலங்காவின் நலன்களை உறுதிப்படுத்த வேண்டியஒரு பிரதமராகவே இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.