யாழ்ப்பாணம் – குப்பிளான் வடக்குக் கேணியடிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17.04.2015) வயோதிபதித் தம்பதியினரை ஆயுத முனையில் மிரட்டிப் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதன்பின் திருடர்கள் தப்பிச் சென்றதாக இன்று காலை வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வயோதிபத் தம்பதியினர் இருவரும் நீண்டகாலமாகத் தனிமையில் வசித்து வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 02 மணியளவில் முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டிலுள்ள பிரதான மின் ஆளியை நிறுத்தியுள்ளனர்.

அதன்பின்னர் துப்பாக்கி மற்றும் கூரிய வாள்களைக் காட்டி வயோதிபத் தம்பதியினரை அச்சுறுத்தியுள்ளனர். இதன் போது லைற் போடச் சென்ற தனது கணவருக்குக் கன்னத்தில் பலமாகத் தாக்கியதுடன்  தொலைபேசியை இயக்க முயன்ற  தனக்கும் வாயில் துப்பாக்கியால் தாக்கியதாக வீட்டு உரிமையாளரான பெண்மணி தெரிவித்தார்.சத்தம் போட்டால் வாளால் வெட்டுவோம், தாக்குவோம் என மிரட்டிய திருடர்கள் அதன் பின்னர் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர்.

IMG-2300 copieவீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பதரைப் பவுண் தாலிக்கொடி, நான்கு பவுண் காப்பு, 2 பவுண் மோதிரம், ஒரு இலட்சம் ரூபா பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

வீட்டின் சமையலறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணமே இதன் போது பறி போனதாகத் தெரிவித்த பெண்மணி தனது கணவர் அணிந்திருந்த மோதிரத்தை மிரட்டிக் கொள்ளையிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.

திருடர்கள் வீடுடைத்து உள்ளே நுழைந்தமைக்கான தடயங்கள் எதுவும் காணப்படாத நிலையில் திருடர்கள் நேற்று மாலையே வீட்டில் வந்து பதுங்கியிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 02 மணி முதல் 04 மணி வரை திருடர்கள் திருட்டில் ஈடுபட்டிருந்ததாகவும் இதன் போது வீட்டில் குறித்த வயோதிபர்களுக்குத் துணையாக நின்ற பேரப் பிள்ளையான இளைஞனுக்குத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றமை திருடர்கள் அங்கிருந்து சென்ற பின்னரே தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

IMG-2287 copieஇதே இடத்தைச் சேர்ந்த க.சின்னத்துரை என்பவரது வீட்டிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடிமனைகள் நெருக்கமாகவுள்ள பகுதியில் ஆயுத முனையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றமை அப் பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த மாதத்தின் ஆரம்பத்தில் இதே பகுதியிலுள்ள பலசரக்குக் கடையொன்றில் ஓடு பிரித்துச் சுமார் 25 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திருட்டுத் தொடர்பிலும் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Copy-of-IMG-2291-e1429336327479 copieஇந்த நிலையில் இன்று இடம்பெற்ற ஆயுத முனையிலான கொள்ளைச் சம்பவத்தால் தாமும் பீதியடைந்துள்ளதாகத் தெரிவித்த குப்பிளான் பகுதிப் பொதுமக்கள் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply