உலகில் பல ஆயிரம் அமைப்புகள் தோன்றி இருக்கின்றன. தோன்றிக் கொண்டிருக்கின்றன. இன்னும் இன்னும் தோன்றும். ஆனால் இந்த அமைப்புகளிலேயே மிகவும் இறுக்கமான, இரக்கமற்ற அமைப்பாக இருக்கிறது ஐ.ஸ்.ஐ.எஸ்.
சுடப்பட்டு உயிர்துடித்துக்கொண்டிருக்கும் ஈராக் இராணுவ வீரரை, ஆட்டை அறுப்பதுபோல் தொண்டையை அறுக்கிறார் ஒருவர்.
இன்னொருவர் அதை நிதானமாகப் படம் பிடிக்கிறார்.
துப்பாக்கிகளோடும் கொடிகளோடும் சூழ்ந்து நிற்பவர்கள் கோஷங்களை எழுப்புகின்றனர்.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்தும் கொலைகளில் இது ஒரு விதம்.
கூட்டம் கூட்டமாகச் சுட்டுக் கொல்வது, கழுத்தை மட்டும் அறுத்துக் கொல்வது, கட்டிவைத்துச் சுட்டுக் கொல்வது என்று வித விதமாக வெளியிடப்படும் வீடியோக்கள் அந்த அமைப்பினரை ஆகக்கொடிய பயங்கரவாதிகளாக அடையாளம் காட்டியிருக்கின்றன.
துருக்கியில் அன்றைய ஒட்டோமான் பேரரசின் இஸ்லாமிய மதரீதியான கிலாபத் அரசாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, இப்போது மீண்டும் அத்தகைய கிலாபத் அரசாட்சி நிறுவப்பட்டுள்ளதாக “ஐ.எஸ்.” எனும் சுன்னி மார்க்க இஸ்லாமிய இயக்கத்தினர் அண்மையில் அறிவித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை இணைத்துத் தனி நாடாக அறிவித்து, இதனை இஸ்லாமிய அரசு என்று பிரகடனப்படுத்தியுள்ளனர்.
ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான “அபுபக்கர் அல் பாக்தாதி” இப்புதிய அரசின் தலைவராக தன்னையே நியமித்துக் கொண்டு, இப்புதிய கிலாபத் அரசானது வடசிரியாவின் அலெப்போ நகரிலிருந்து ஈராக்கின் தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும் என்றும், உலகெங்குமுள்ள சுன்னி மார்க்க முஸ்லிம்கள் இந்தப் புனித ஆட்சிக்கு ஆதரவளிக்குமாறும், இப்புனித நாட்டில் வந்து குடியேறுமாறும் அறைகூவல் விடுத்துள்ளார்.
1990 ஆம் ஆண்டுகளில் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த அல்ஜர்க்வாவி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு, ஆரம்பத்தில் ‘ஜமா அத் அல் தவ்ஹீத் வா அல் ஜிகாத்’ என்று பெயர்.
அப்போது ‘அல்கொய்தா’ உலகெங்கும் செல்வாக்குடன் இருந்ததால், இந்த அமைப்பின் பெயர் வெளியில் தெரியவில்லை.
பிறகு, இந்தக் குழுவினர் பின்லேடனைத் தங்கள் தலைவராக ஏற்று அல்கொய்தாவில் இணைந்தனர். யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகளை ஒட்டிய பகுதிகளில் செயல்பட்ட இவர்கள், ‘ஈராக்கின் அல்கொய்தா’ என்று அழைக்கப்பட்டனர்.
ஈராக்கில் சதாம் ஆட்சியில் இருந்தவரை சுன்னி பிரிவினர் மேலாதிக்கம் செய்கிறவர்களாகவும், ஷியா பிரிவினர் அடக்கப்படுகின்றவர்களாகவும் இருந்தனர்.
பக்கத்து நாடான சிரியாவிலோ பெரும்பான்மை சுன்னி பிரிவினர் ஒடுக்குமுறைக்கு உள்ளாக சிறுபான்மை ஷியா பிரிவினர் ஆளும் தரப்பாக இருந்தனர்.
இந்த நிலையில்தான் ஷியா, சுன்னி பிளவைப் பயன்படுத்தி ஈராக்கைக் கைப்பற்றியது அமெரிக்கா. 148 ஷியா முஸ்லிம்களைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில், சதாம் ஹுசைனைத் தூக்கில் போட்டது. சதாமின் மரணத்தோடு சுன்னிகள் ஈராக்கில் பலம் இழந்தனர்.
அமெரிக்காவின் ஆதரவோடு ஷியா தலைவரான மாலிக் ஆட்சிக் கட்டிலில் ஏற, சுன்னி முஸ்லிம்களின் பாடு மேலும் திண்டாட்டம் ஆனது.
ஈராக்கில் ஆயுதமுனையில் நடந்த இந்த ஆட்சி மாற்றம், அல்கொய்தா அமைப்பினுள் கருத்தியல் ரீதியான பிளவை உருவாக்கியது.
‘முஸ்லிம்களின் பொது எதிரி, முதல் எதிரி யார்? அமெரிக்காவா அல்லது அமெரிக்காவை ஆதரிக்கும் ஷியா முஸ்லிம்களா? சுன்னிகள் ஏன் ஈராக்கிலும் சிரியாவிலும் நசுக்கப்படுகிறார்கள்? அவர்களுக்கு என்று ஒரு தேசம் வேண்டாமா?’
என்றரீதியில் கேள்விகளும் விவாதங்களும் எழ… அல்கொய்தாவில் இருந்து பிரிந்த இந்த குழுவினர், தங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் என்று அழைத்துக்கொண்டனர்.
சிரியாவையும் ஈராக்கையும் மீட்டு அங்கு சுன்னிகளை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதுதான் இவர்களின் ஆரம்பநிலை கோஷமாக இருந்தது.
இன விடுதலை அமைப்பு போன்ற தோற்றத்தைப் பெற்ற இந்தக் குழுவை ஆரம்பத்தில் அனைவரும் ‘போராளிகள்’ என்று நினைத்தது இதனால்தான்.
இந்த அமைப்பை தொடங்கிய அல்ஜர்க் வாவி, 2006ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகளால் ஈராக்கில் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து தலைமைக்கு வந்தவர்களும் கொல்லப்பட்டார்கள். பிறகு தலைமைக்கு வந்தவர்தான் அபுபக்கர் அல் பக்தாதி.
இவரது வருகைக்குப் பின்னர்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் மிகவும் மூர்க்கத்தனமாக மாறியது. இதுவரை அறியப்பட்ட அல்கொய்தா, தலிபான்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் 30 நாட்களில் அதிரடியாக முன் அரங்குக்கு வரக் காரணம், அந்த அமைப்பின் மிகக் கொடூரமான தண்டனை முறைதான்!
நோக்கம் என்ன?
சுன்னி முஸ்லிம்களின் ஆதரவை சடுதியில் பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ், சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தொடங்க, சிரியாவைப் பிடிக்காத பல மேற்குலக நாடுகளும், சில அரபு நாடுகளும் அதை ஆதரித்தன. உதவின. விறுவிறுவென சிரியாவில் சுன்னி முஸ்லிம்கள் செறிவாக வாழும் பல நகரங்களைக் கைப்பற்றினார்கள்.
ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் நோக்கம் சிரியாவுடன் மட்டும் முடியவில்லை. ‘ஓட்டமோன் பேரரசு காலத்தில் ஸ்பெயின் தொடங்கி இந்தோனேஷியா வரை முஸ்லிம்கள் ஆண்டார்கள்.
அதுபோன்ற பரந்துபட்ட “இஸ்லாமிய தேசம்” அமைக்கப்பட வேண்டும். அதன் தொடக்கம்தான் சிரியாவையும் ஈராக்கையும் கைப்பற்றுவது’ என்று அவர்கள் அறிவித்த வரைபடத்தில் இந்தியாவும் உண்டு.
இஸ்லாத்தின் பழமைவாதக் கோட்பாடான “வாஹா“பியிசத்தின் வழித்தோன்றல்கள் என்று தங்களை அறிவித்துக்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ், சுன்னி அல்லாத பிற முஸ்லிம்களை இழிவானவர்களாகவும், பிற சிறுபான்மைச் சமூகங்களை சாத்தானை வழிபடுகிறவர்களாகவும் கருதுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயல்பாடுகளை, உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இர்பில் (irbil) நகரை விரைவில் கைப்பற்றக்கூடிய நிலை வந்தபோதுதான் அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்பாட்டில் தலையிட்டது.
Yazidi people, mostly women and children, in the Sinjar region of Iraq
இங்கு ‘யஷிதி’ (Yazidi) என்ற பழங்குடிகள் இருக்கிறார்கள். இவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் கொன்று குவிக்கத் தொடங்கியது.
இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மலைப்பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதையே காரணமாக வைத்து வான்வழித் தாக்குதலில் இறங்கிவிட்டது அமெரிக்கா.
ஆனால், 2011 ஆம் ஆண்டு ஈராக்கில் தலையிட்டதைப்போல இப்போது ஒரு முழு யுத்தத்தை நேரடியாக நடத்தவில்லை. அதற்குப் பதிலாக குர்தீஷ் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் மோதவிடுகிறது.
பொதுவாக மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகள் ‘முஸ்லிம் நாடுகள்’ என்று அறியப்பட்டாலும், பிளவுண்டு கிடக்கின்றன தேசங்கள்.
இங்கிருந்துதான் அகண்ட இஸ்லாமிய தேசத்துக்கான அறைகூவல் பிறக்கிறது. ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்க இராணுவம் தீராப்பழியோடும், பெரும் இழப்புகளோடும் 2011 ஆம் ஆண்டு அங்கிருந்து விலகியது.
நடப்பது நடக்கட்டும் என்று வேடிக்கைதான் பார்த்தது. ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் பரந்துபட்ட இஸ்லாமிய தேசம் அமைக்க அறைகூவல் விடுக்கிறது என்று தெரிந்ததும் உடனே வான்வழி தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது.
உலகெங்கிலும் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்தக்கூடிய குழுவை முஸ்லிம்கள் ‘கிலாபத்’ என்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில்கூட ‘கிலாபத் இயக்கத்துக்கு பெரும் பங்கு உண்டு.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ‘நாங்கள்தான் அந்தக் கிலாபத்’ என்கிறது.
எஸ்.ஜே.பிரசாத்
(எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி – (பாகம்-5)
ஈராக்கில் அமெரிக்கப் படையினரை நிலை கொள்ளச் செய்யச் சதி நடக்கின்றதா?